வியாழன், 28 ஏப்ரல், 2022

திமுக முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தன் பட்டப்பகலில் சரமாரி வெட்டிக்கொலை!

தி.மு.க. பிரமுகர் பட்டப்பகலில் சரமாரி வெட்டிக்கொலை! | nakkheeran

நக்கீரன் : சேலம் அருகே, நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த தி.மு.க. பிரமுகரை பட்டப்பகலில் இருவர் சரமாரியாக வெட்டிக்கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள கன்னியாம்பட்டியைச் சேர்ந்தவர் கந்தன் (வயது 55). முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர். திமுகவில் மாவட்ட பிரதிநிதியாக இருந்து வந்தார்.
இவர், புதன்கிழமை (ஏப். 27) காலை கன்னியாம்பட்டி பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மோட்டார் சைக்கிளில் அந்த வழியாக வந்த அவருடைய உறவினர்கள் மணிகண்டன் (வயது 35), இவருடைய சித்தப்பா சின்ன பையன் (வயது 50) ஆகிய இருவரும் கந்தனை கீழே தள்ளிவிட்டனர்.
இதையடுத்து அவர்கள் மறைத்து வைத்து இருந்த அரிவாளால் கந்தனை சரமாரியாக வெட்டினர்.


இதில் அவருடைய பின் கழுத்து, மணிக்கட்டு, மார்பு, முன்கை உள்ளிட்ட இடங்களில் பலத்த வெட்டு விழுந்தது.
அவருடைய அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் சம்பவ இடத்திற்கு ஓடி வந்தனர். கூட்டம் கூடுவதை பார்த்த அவர்கள், அங்கிருந்து மோட்டார் சைக்கிளில் மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். உயிருக்குப் போராடிக் கொண்டிருந்த கந்தனை மீட்டு, சேலத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும், பலனின்றி உயிரிழந்தார்.

இதுகுறித்து கொங்கணாபுரம் காவல்நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். சடலத்தை மீட்டு உடற்கூராய்வுக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். முதல்கட்ட விசாரணையில், கந்தனுக்கும், கொலையாளிகளுக்கும் வழித்தட பிரச்னை இருந்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலின்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக