வியாழன், 28 ஏப்ரல், 2022

பெட்ரோல் டீசல் வரி - நிதியமைச்சர் பி டி ஆர் தியாகராஜன் விளக்கம்!

 மின்னம்பலம் : தமிழகம், கேரளா, மேற்கு வங்கம், மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்கள் பெட்ரோல் மீதான வாட் வரியை குறைக்க வேண்டும் என்று முதல்வர்கள் உடனான காணொளி காட்சி கூட்டத்தில் பிரதமர் மோடி கூறினார். இதற்கு அந்தந்த மாநிலங்கள் எதிர்ப்புத் தெரிவித்தன.
இந்நிலையில் பிரதமர் பேசியது தொடர்பாகக் காங்கிரஸ் எம்.எல்.ஏ.செல்வப் பெருந்தகை சட்டப்பேரவையில் குறிப்பிட்டு பேசினார்.
அவரை தொடர்ந்து முதல்வர் ஸ்டாலின் பேசுகையில், பிரதமர் மோடி நேற்று நடத்திய காணொளி காட்சி ஆலோசனைக் கூட்டத்தில், டீசல் விலையைப் பற்றிக் குறிப்பிட்டுச் சொல்லி சில மாநிலங்கள் வாட் வரியைக் குறைப்பதற்கான வழியை காணவில்லை என்று கூறினார்.


பெட்ரோல் டீசல் விலை குறைப்புக்கு ஒன்றிய அரசு எடுத்த முயற்சிகளுக்கு சில மாநிலங்கள் ஒத்துழைக்கவில்லை என்றும் இந்தப் பொருட்களின் மேல் மாநில அரசுகள் விதிக்கக் கூடிய வரிகளை இந்த அரசுகள் குறைக்காத காரணத்தால் தான் பெட்ரோல் டீசல் விலையை நாட்டில் குறைக்க முடியவில்லை என்று பிரதமர் குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார்.

இதைப்பற்றி நான் ஒரே வரியில் சொல்லவேண்டும் என்று சொன்னால் முழு பூசனிக்காயைச் சோற்றில் மறைப்பது போல் அவர் இந்த கருத்தைக் கூறியிருக்கிறார்.

2014 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததிலிருந்து கச்சா எண்ணெய்யின் விலை பெருமளவு சரிந்த போதும் அதற்கேறறார்போல பெட்ரோல் மற்றும் டீசல் விலையைக் குறைக்காமல் , அந்த எண்ணெய் மீதான உபரி நிதியை ஒன்றிய அரசு தனதாக்கிக் கொண்டது.

சில மாநிலங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது என்ற காரணத்திற்காக பாசாங்கு காட்டுவது போல இந்த தேர்தலுக்கு முன்பாக பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் வரிகளை குறைத்து வேடம் போட்டது ஒன்றிய அரசு.

மாநிலத் தேர்தல்கள் முடிந்த பின்பு மடமடவென முன்பு இருந்ததைவிட விலையை உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையைச் சுமத்தியது. நாம் தேர்தல் முடிந்து வெற்றி பெற்ற பின்பு தேர்தல் வாக்குறுதிகளில் கூறியவாறு மக்கள் நலன் கருதி பொருளாதார நிலையையும் பொருட்படுத்தாமல் ஒன்றிய அரசு குறைப்பதற்கு முன்பாகவே பெட்ரோல் மீது விதிக்கப்படும் மாநில வரியைக் குறைத்தோம்.

இவை அனைத்தும் தமிழக மக்களுக்கு நன்றாகத் தெரியும். உண்மையில் பெட்ரோல் விலையை யார் குறைக்கிறார்கள் அல்லது பெட்ரோல் விலையைக் குறைப்பது போல் யார் நடிக்கிறார்கள் என்பதை மக்களோடு விருப்பத்துக்கு விட்டுவிடுகிறேன்” என்றார்.

அவரை தொடர்ந்து தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசுகையில், "எந்த அரசாங்கமும் வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது. அது அடிப்படை உண்மை. ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் வருமானம் உற்பத்தியில் 30 சதவிகிதம் இருக்கும். 30 சதவிகித வருமானத்தை பெற்று பட்ஜெட் தீட்டினால் இலவச கல்வி மட்டுமல்லாமல் எந்த வகையிலும் ஏழ்மையை இல்லாத ஒரு சூழ்நிலையை உருவாக்கலாம்.

அமெரிக்கா போன்ற நாடுகளிலும் வருமான பட்ஜெட் சாதாரண நேரத்தில் 20 முதல் 25 சதவிகிதம் வரை இருக்கும். பேரிடர் காலத்தில் கூடுதலாக செலவு செய்வார்கள்.

நாம் வளரும் நாடு என்பதால் வருமானமே குறைவாகத் தான் கிடைக்கிறது. அதனால் நம்மால் மக்களுக்கு நிறைய செய்ய முடியவில்லை. ஆனால் சமூக நீதி, எல்லோருக்கும் எல்லாம், பொருளாதார நியாயம் என்ற அடிப்படைக் கொள்கைபடி செயல்படுகிறோம்.

வரி இல்லாமல், வருமானம் இல்லாமல் செயல்பட முடியாது என்றால், எதற்காக யாரிடமிருந்து வரியை எடுக்கிறோம் ?அதை நியாயமாக எடுக்கிறோமா? சரியான வகையில் பகிர்ந்து கொடுக்கிறோமா? என்ற முக்கிய கேள்விகள் எழுகிறது.

யாரிடம் இருந்து வரி பெறுகிறோம் என்பதைத் தெரிந்துகொண்டு, பணக்காரர்களிடம் கூடுதலாகவும், ஏழையிடம் இருந்து எடுக்காமலும், நடுநிலையாக இருப்பவர்களிடம் குறைவாகவும் எடுப்பது முற்போக்கான வரிவிதிப்பு(progressive tax) யாரிடமிருந்து எடுக்கிறோம் என்று தெரியாமல் வசூலிப்பது பாயிண்ட் ஆப் சேல் டாக்ஸ். அதாவது ஜிஎஸ்டி, பெட்ரோல் மீதான வாட் வரி உள்ளிட்டவை ஆகும்.

பெட்ரோல் டீசலை பொறுத்தவரை யார் எவ்வளவு போடுகிறார்கள் என்று நம்மால் கணக்கெடுக்க முடியாது. அதனால் அந்த வரியை அதிகரித்தால் சாமானிய மக்களுக்குப் பாதிப்பு ஏற்படும். அது போன்று பெட்ரோல் டீசல் விலை என்பது உள்ளீடு செலவாக இருக்கிறது. அதாவது விவசாயிகள் டிராக்டர்களுக்கு பயன்படுத்த வேண்டும் மீனவர்கள் படகுகளுக்குப் பயன்படுத்த வேண்டும் என்பதாகும்.

இதுபோன்று பெட்ரோல் டீசல் உள்ளீடு செலவாக இருப்பதனால், அதனுடைய விலையையோ அல்லது வரியையோ அதிகரித்தால் பணவீக்கம் அதிகரித்து பொருளாதாரமும், சாமானிய மக்களும் பாதிக்கப்படுவார்கள்.

அதனால் அடிப்படைத் தத்துவமாக எப்போதெல்லாம் திமுக ஆட்சிக்கு வந்ததோ, அப்போதெல்லாம் பெட்ரோல் டீசல் மீதான வாட் வரியை குறைத்தது தான் வரலாறு. என்றைக்குமே உயர்த்தியதாக வரலாறு இல்லை.

24-3-17 அன்று அமைச்சர்கள் ஜெயக்குமாரும், கே.சி.வீரமணியும் எரிபொருள் விலையை 3 ரூபாய் உயர்த்திய போது அந்த சட்ட மசோதாவை அறிமுகத்திலேயே திமுக சார்பில் நான் எதிர்த்தேன்.

2014ல் பிரதமர் மோடி வந்த போது பெட்ரோல் மீது ரூ.9.48 ஆக வரி இருந்தது. இதில் பெரும்பான்மை மாநிலங்களுக்குப் பகிர்ந்து கொடுக்கக் கூடிய வரியாக இருந்தது. மத்திய அரசு 5 ரூபாய் வரி குறைப்பதற்கு முன்னால் 32 ரூபாயாக இருந்தது. 8 வருடத்தில் 3 மடங்கிற்கு மேல் உயர்த்தி 5 ரூபாய் குறைத்திருக்கிறார்கள். அப்படியானால் மொத்த உயர்வு 200 சதவிகிதத்துக்கும் மேல் உள்ளது.

அதுபோன்று டீசல் வரி மோடி ஆட்சிக்கு வரும் போது ரூ.3.47 பைசாவாக இருந்தது. ஆனால் இன்று ரூ. 10 குறைத்த பிறகு கூட ரூ.22 ரூபாய்க்கு மேல் வரி உள்ளது. இதனால் அவர்கள் ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு 7 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது.இதனால் ஒன்றிய அரசின் மொத்த வருமானமே நேரடி வரி விதிப்பில் வராமல், சாமானிய மக்கள் பாதிக்கக்கூடிய வகையில் வரியை உயர்த்தியுள்ளனர்.

அவர்கள் ஆட்சிக்கு வந்த பிறகு பெட்ரோல் வரியை ஒரு ரூபாயாக இருந்ததை 3 ரூபாயாகியும், டீசல் வரியை 1 ரூபாயிலிருந்து 6 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளனர்.

2011ல் கலைஞர் ஆட்சி முடியும் போது பெட்ரோல் விலை ரூ.14.47 பைசா, நாங்கள் ஆட்சிக்கும் வரும் போது ரூ.26.20 பைசாவாக உள்ளது. அதன்படி நம்முடைய வருமானம் 22.54 பைசாவாக உள்ளது. அப்படியானால் 50 சதவிகிதம் தான் நம்முடைய வரி அதிகரித்திருக்கிறது. மத்திய அரசினுடைய வரி 300 சதவிகிதம் அதிகரித்திருக்கிறது.

டீசல் வரி கலைஞர் ஆட்சி முடியும் போது ரூ. 7.60 பைசா இருந்தது. நாங்கள் ஆட்சிக்கு வரும் போது 19.75 பைசாவாக இருந்தது. அவர்கள் 6 மடங்கு அதிகரித்துள்ளனர்.

எப்போதெல்லாம் அவர்கள் வரியை உயர்த்தினார்களோ, அப்போதெல்லாம் நாமும் அதாவது 6 மடங்கு அதிகரித்திருந்தால் பரவாயில்லை. இப்போது ஒரு மடங்கு குறைக்கும் போது நாமும் ஒரு மடங்கு குறைத்திருக்கலாம். அவர்கள் அதிகரிக்கும் போது நாம் அதிகரிக்கவில்லை, இப்போது அவர்கள் குறைக்கும் போது நாம் குறைக்க வேண்டும் என்றால், இதில் என்ன நியாயம் இருக்கிறது.

எந்த மாநிலமும் வரியைக் குறைக்கவில்லை எனப் பிரதமர் கூறுகிறார். ஆனால் அவர் வரியைக் குறைப்பதற்கு முன்னதாகவே முதல்வர் சொல்லி தமிழகத்தில் குறைக்கப்பட்டது” என்று கூறினார்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக