புதன், 16 மார்ச், 2022

நாடாளுமன்றத்தில் இந்தியில் பேசிய அமைச்சரை ஆங்கிலத்தில் பேச வைத்த கனிமொழி எம்.பி

 puthiyathalaimurai.com :    தி.மு.க எம்.பி. கனிமொழி புலம்பெயர் தொழிலாளர்களுக்கான ரேஷன் குறித்து ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதிலளித்தார். குறுக்கிட்ட கனிமொழி அமைச்சரை ஆங்கிலத்தில் பேசச் சொல்ல, அதை ஏற்று அவரும் ஆங்கிலத்தில் பதிலளித்தார்.
நாடாளுமன்றத்தில் இன்று உணவு மற்றும் பொது விநியோக துறை பற்றிய கேள்விகளுக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பதிலளித்தார். அப்போது பேசிய, தி.மு.க எம்.பி.கனிமொழி, ``தமிழக அரசு ஒவ்வொரு ரேஷன் கார்டு அட்டைதாரர்களுக்கும் 20 கிலோ அரிசியை இலவசமாக விநியோகம் செய்து வருகிறது. அது மட்டுமல்லாமல் நிறைய திட்டங்கள் ரேஷன் மூலமாகவே வழங்கப்படுகிறது. இந்த நிலையில், ஒரே ரேஷன் திட்டத்தின் கீழ் வெளி மாநிலங்களிலிருந்து வரும் புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கும் பொருள்களுக்கு யார் நிதி ஒதுக்குவது?'' என்று கேள்வி எழுப்பினார்.

கனிமொழியின் இந்த கேள்விக்கு மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இந்தியில் பதில் கூறத் துவங்கினார். அப்போது குறுக்கிட்ட கனிமொழி, ``உங்களுக்கு ஆங்கிலம் நன்றாக பேசத் தெரியும் என்பது எனக்கு தெரியும். நீங்கள் இந்தியில் பேசினால் அதை புரிந்து கொள்ள கொஞ்சம் கடினமாக இருக்கிறது. நான் ஆங்கிலத்தில்தான் கேள்வி கேட்டேன். நீங்களும் ஆங்கிலத்தில் பதில் கூறுங்கள்" என்றார். அதையடுத்து, பியூஷ் கோயல் , ``சகோதரியை மதிக்கிறேன்" என்று கூறிவிட்டு பின்னர் ஆங்கிலத்தில் பதிலளித்தார். ``தேசிய உணவு பாதுகாப்பு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் அனைத்து உணவு வகைகளுக்கும் மத்திய அரசே நிதி வழங்கும்'' என்றார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக