நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியில் மொத்தமுள்ள 52 வார்டுகளில் திமுக கூட்டணி 32 வார்டுகளை கைப்பற்றியது. திமுக 24, காங்கிரஸ் 7, மதிமுக 1 என்ற அளவில் திமுக கூட்டணி வெற்றி பெற்றது. அதேநேரம் பாஜக 12 வார்டுகளிலும் அதிமுக 7 வார்டுகளிலும் சுயேச்சைகள் இரு இடங்களிலும் வெற்றி பெற்றனர்.
நாகர்கோவில் நகர செயலாளரான மகேஷ் சமீப காலங்களில் அமைச்சர் மனோ தங்கராஜ் ஆதரவாளராக தன்னை வெளிப்படுத்திக் கொண்டதால் கிழக்கு மாவட்டச் செயலாளரான சுரேஷ்ராஜன், மகேஷ் மீது கடுமையான கோபத்தில் இருந்தார். அதனால் அவர் மகேஷுக்கு எதிராக தொடர்ந்து கட்சிக்குள் பல்வேறு வேலைகளை செய்து வந்தார் என்பதை குமரி திமுகவினர் நன்கு அறிவார்கள். அறிவதோடு மட்டுமல்ல தலைமை கழகத்திற்கும் சுரேஷ்ராஜன் நடவடிக்கைகள் பற்றி தொடர்ந்து தகவல்களை அனுப்பி வந்தனர்.
ஆனால் சுரேஷ்ராஜன் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினுக்கு குடும்ப ரீதியாக மிகவும் நெருக்கமானவர். சமீபத்தில் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா குமரி வந்தபோது கூட சுரேஷ் ராஜனின் வீட்டில்தான் தங்கியிருந்தார். அந்த அளவுக்கு சுரேஷ்ராஜனின் மனைவியும் ஸ்டாலின் மனைவி துர்காவோடு மிக நெருக்கமான நட்பு கொண்டிருந்தார். இந்தப் பின்னணியில் தன்னை யாரும் அசைக்க முடியாது என்ற நம்பிக்கையில் சுரேஷ்ராஜன் குமரி திமுகவில் சற்று அதிகப்படியாகவே செயல்பட்டுக் கொண்டிருந்தார்.
நாகர்கோவில் மாநகராட்சி தேர்தலை பொறுத்தவரை திமுக மகேஷுக்கு சீட்டு கொடுத்ததுமே அவர்தான் மேயர் வேட்பாளர் என்று கட்சிக்குள் பரவலாக பேசப்பட்டது. உள்ளாட்சித் தேர்தலுக்காக காணொளி பிரச்சாரத்தில் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின் ஈடுபட்டபோது குமரி பிரச்சாரத்தில் மகேஷ் பெயரை ஐந்து முறை குறிப்பிட்டார். இதிலிருந்தே தனது மேயர் சாய்ஸ் மகேஷ் தான் என்பதை ஸ்டாலின் தெளிவுபடுத்தியிருந்தார்.
ஆனாலும் குமரி கிழக்கு மாவட்ட செயலாளரான சுரேஷ்ராஜன் தனது ஆதரவாளரான ஒரு பெண்ணை நாகர்கோயில் மேயர் ஆக்குவதற்கு கடுமையாக முயற்சி செய்தார்.
திமுக சார்பில் மேயர் வேட்பாளர் மகேஷ் தான் என தலைமை அறிவித்த பிறகும் சுரேஷ்ராஜனின் இந்த முயற்சி தொடர்ந்திருக்கிறது.
மறைமுக தேர்தலுக்கு முதல் நாளான மார்ச் 3ஆம் தேதி இரவு 11 மணிக்கு நகர செயலாளர் மகேஷ் திமுக தலைவர் ஸ்டாலினுடைய செல்போனுக்கு தொடர்பு கொள்ள முயற்சி செய்துள்ளார். வழக்கமாக உதவியாளர்களே போனை எடுத்து பேசும் நிலையில் அந்த நேரத்தில் ஸ்டாலினே இணைப்பில் வந்துள்ளார்.
'என்ன மகேஷ்?' என்று ஸ்டாலின் கேட்க...'தலைவரே நாளை நடைபெற இருக்கும் தேர்தலில் எனக்கு எவ்வளவு இடைஞ்சல் தர முடியுமோ அவ்வளவு இடைஞ்சலை சுரேஷ்ராஜன் செய்து வருகிறார். நாளை நான் ஜெயித்தால் அது கட்சிக்குப் பெருமை. அதேநேரம் நான் தோற்றால் அந்த முழுப் பொறுப்பும் சுரேஷ்ராஜன் உடையதுதான்" என்று கண் கலங்க கூறியிருக்கிறார் மகேஷ்.
இதைக் கேட்ட ஸ்டாலின், 'அப்படி எல்லாம் ஒன்னும் ஆகாது. நான் பாத்துக்குறேன்' என்று மகேஷுக்கு உறுதி அளித்துள்ளார். உடனடியாக தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகனை தொடர்பு கொண்ட ஸ்டாலின், 'நாகர்கோவில் மாநகராட்சியில் என்ன நடக்கிறது என்று தொடர்ந்து கண்காணித்துக் கொண்டிருங்கள்' என்று உத்தரவிட்டுள்ளார்.
மறுநாள் மார்ச் 4ஆம் தேதி நாகர்கோவில் மாநகராட்சி அலுவலகத்தில் தேர்தல் நடந்தது. பாஜகவின் முன்னாள் நகரமன்ற தலைவர் மீனாதேவ் அக்கட்சியின் மேயர் வேட்பாளராக நிறுத்தப்பட்டதால் மறைமுக தேர்தல் நடைபெற்றது.
தேர்தலில் 32 வாக்குகள் பெற வேண்டிய மகேஷ் 28 வாக்குகளை மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். 20 வாக்குகளை மட்டுமே பெற்றிருக்க வேண்டிய பாஜகவின் மீனாதேவ் 24 வாக்குகள் பெற்றிருந்தார். அவருக்கு விழுந்த கூடுதலான 4 ஓட்டுகள் திமுக தரப்பில் இருந்து விழுந்திருக்கிறது என்பதை சில மணி நேரங்களில் மகேஷ் கண்டுபிடித்துவிட்டார்.
தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களில் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் கைபேசியில் அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ், சுரேஷ்ராஜன் உள்ளிட்ட சிலரை தொடர்பு கொண்டு என்ன நடந்தது என்று விசாரித்தார். வாக்குகளை மாற்றிப் போட்டது யாரென்றும் விசாரணை நடத்தினார்.
இதைத்தொடர்ந்து அனைவரும் ஒன்று சேர்ந்து தான் மதிய உணவு அருந்தினார்கள். அப்போது மனோ தங்கராஜ்,"கட்சிக்கு 4 ஓட்டுகள் குறைந்து விட்டது. துணை மேயர் தேர்தலில் இது நடக்கக் கூடாது. கட்சி நிறுத்திய வேட்பாளரை முழுமையாக ஆதரிக்க வேண்டும்" என்று வேண்டுகோள் வைக்க மேயர் மகேஷும் வேண்டுகோள் வைத்துள்ளார்.
ஆனால் திடீர் திருப்பமாக துணை மேயர் தேர்தலில் திமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்த மேரி லதா என்பவருக்கு போட்டியாக திமுகவிலிருந்து ராமகிருஷ்ணன் என்பவர் துணை மேயர் தேர்தலுக்கு வேட்பு மனு தாக்கல் செய்தார். இது மனோ தங்கராஜையும் மகேஷையும் மேலும் அதிர வைத்தது.
தேர்தல் நடந்ததில் மேயர் தேர்தலில் பெற்ற அதே 28 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் வெற்றி பெற்றார். போட்டி திமுக வேட்பாளர் ராமகிருஷ்ணன் காலையில் பாஜக மேயர் வேட்பாளர் பெற்ற 24 வாக்குகளை அப்படியே பெற்றார்.
துணை மேயர் தேர்தல் முடிந்ததும் தலைமை நிலைய செயலாளர் பூச்சி முருகன் மீண்டும் விசாரணை நடத்தி தலைமையிடம் தகவல்களை சொல்லியுள்ளார்.
அடுத்த சில மணி நேரத்தில்... இரவு சுரேஷ்ராஜன் கிழக்கு மாவட்ட செயலாளர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதைவிட ஒரே நாளில் மகேஷுக்கு நாகர்கோவில் மேயர் பதவியோடு, குமரி கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியையும் கொடுத்து சுரேஷ்ராஜனை கூடுதல் அதிர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார் ஸ்டாலின்.
வேந்தன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக