சனி, 5 மார்ச், 2022

ரஷ்ய விமான தாக்குதல்களுக்கு பச்சைக்கொடி காட்டுகிறதா நேட்டோ? யுக்ரேன் அதிபர் குற்றச்சாட்டு

BBC :  யுக்ரேனில் ரஷ்யப் படைகள் 9ம் நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றன. இந்தத் தாக்குதல் குறித்து ஓர்லா குரின், லீஸ் டூசெட், மற்றும் ஜேம்ஸ் வாட்டர்ஹவுஸ் ஆகியோர் கீயவிலிருந்து, சாரா ரெயின்ஸ்ஃபோர்டு டினிப்ரோவிலிருந்து, ஃபெர்கல் கீன்‌ வீவ் பகுதியிலிருந்து, ஸ்டீவ் ரோசென்பெர்க் மாஸ்கோவிலிருந்து மற்றும் மார்க் லோவென் போலந்து எல்லையிலிருந்து செய்திகளை வழங்குகின்றனர்.
யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடை விதிக்க தொடர்ந்து மறுப்பதன் மூலம் ரஷ்ய விமானத் தாக்குதல்களுக்கு மேற்கு நாடுகள் பச்சைக்கொடி காட்டுகின்றன என்று யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஸெலன்ஸ்கி குற்றம்சாட்டினார்.
தொலைக்காட்சி மூலம் நாட்டு மக்களுக்கு உரையாற்றிய ஸெலன்ஸ்கி, ரஷ்யப் படையெடுப்பின் தீவிரம் அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது என்பதை மேற்கு நாடுகளின் தலைவர்கள் அறிவார்கள். இந்நிலையில், யுக்ரேன் மீது விமானங்கள் பறக்கத் தடைவிதிக்க மறுப்பதன் மூலம் நகரங்கள், மாநகரங்கள் மீது குண்டு வீச புதினுக்கு அவர்கள் உரிமம் வழங்குகிறார்கள் என்று குற்றம்சாட்டினார்.

"மேலும் புதிய தாக்குதல்களும், இழப்புகளும் தவிர்க்கமுடியாதவை என்று தெரிந்தும், யுக்ரேன் வான்பரப்பை மூட நேட்டோ வேண்டுமென்றே மறுக்கிறது," என்று கீயவில் இருந்து ஆற்றிய தமது காணொளி உரையில் ஸெலன்ஸ்கி கூறினார்.

மேற்கின் தயக்கம் ஏன்?

முன்னதாக பிரசல்ஸ் நகரில் பேசிய நேட்டோ தலைமைச் செயலாளர் ஜென்ஸ் ஸ்டோல்டன்பெர்க், யுக்ரேனில் நிலைமை கொடூரமாக இருப்பதாகவும், ஆனால், நேட்டோ படைகள் வான் வழியாகவோ, நிலம் வழியாகவோ யுக்ரேனுக்குள் நுழையாது என்றும் தெரிவித்தார்.

யுக்ரேன் வான் பரப்பில் நோ-ஃப்ளை-சோன் (வான் பறப்பில் விமானம் பறக்கத் தடை) அறிவிப்பு வெளியிடப்பட்டால், அதை மீறிப் பறக்கும் ரஷ்யப் போர் விமானங்களை நேட்டோ ஜெட் விமானங்கள் சுட வேண்டி வரும். உடனடியாக மூன்றாம் உலகப் போர் மூளும் என்று மேற்கத்திய ஆட்சியாளர்கள் வாதிடுகிறார்கள்.

நாங்கள் அ.தா.பாலசுப்ரமணியன் மற்றும் லட்சுமிகாந்த் பாரதி. பிபிசி தமிழின் நேரலைப் பக்கத்துக்கு உங்களை வரவேற்கிறோம். யுக்ரேன் மீது ரஷ்யா நடத்திவரும் படையெடுப்பு குறித்த செய்திகளை உடனுக்குடன் இந்த நேரலைப் பக்கத்தில் வழங்குகிறோம்.

உங்கள் பகுதியின் சுவாரசியமான செய்திகளைப் பற்றி எங்கள்டிவிட்டர் கணக்கின் மூலம்

தகவல் அளியுங்கள்.நேற்றைய நேரலை பக்கத்தைப் படிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

நேற்றைய நேரலை பக்கத்தின் சில முக்கியச் செய்திகள்:

    யுக்ரேனில் உள்ள ஐரோப்பாவின் மிகப்பெரிய அணு உலையான ஸாப்போரீஷியா அணு உலை மீது ரஷ்யா ஷெல் குண்டு வீசித்தாக்கியது. அணு உலையில் உள்ள ஒரு கட்டடம் தீப்பற்றி அணைக்கப்பட்டது.

    அணு உலை மீதான தாக்குதலில் சிலர் உயிரிழந்தனர். அணு உலையை ரஷ்யா கைப்பற்றிவிட்டதாக யுக்ரேன் அறிவித்தது.

    ஸாப்போரீஷியா அணு உலை மீதான தாக்குதல் செர்னோபிள் அணு உலை விபத்தில் ஏற்பட்டதைப் போல 6 மடங்கு பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் என்று தெரிவித்தார் யுக்ரேன் அதிபர் ஸெலன்ஸ்கி.

    யுக்ரேனில் ரஷ்ய படையினர் நடத்தி வரும் தாக்குதலின்போது குறைந்தது மூன்று ரஷ்ய தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.மோதல் களத்தில் இந்த தளபதிகள் முன்னணியில் படையை வழிநடத்தி வந்ததாக நம்பப்படுகிறது.
    ரஷ்யாவில் பிபிசி நியூஸ் செயல்பாடுகளை கனத்த இதயத்துடன் நாங்கள் இடைநிறுத்துகிறோம் என்று பிபிசியின் இடைக்கால இயக்குநர் ஜோனாத்தன் மன்ரோ தெரிவித்துள்ளார்.

    பிபிசி ரஷ்ய சேவை, ஜெர்மனியின், டி.டபிள்யூ டாய்சி வெலி உள்ளிட்ட ஊடகங்களின் சேவைகளுக்கு ரஷ்யாவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

    இந்திய குடிமக்களை மீட்பதற்கான ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தின் கீழ், 14 சிவிலியன் விமானங்கள் மற்றும் 3 C-17 IAF விமானங்கள் உட்பட யுக்ரேனின் அண்டை நாடுகளில் இருந்து 17 சிறப்பு விமானங்கள் இன்று நாடு திரும்பியுள்ளன.
    ரஷ்ய ஆயுதப்படை குறித்து “போலி” செய்திகளை பரப்புவோரை 15 ஆண்டுகள் வரை சிறையில் அடைக்கும் வகையிலான சட்டம், ரஷ்ய நாடாளுமன்றத்தின் மக்களவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக