கலைஞர் செய்திகள் : இலங்கை தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்தார்.
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில்நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் மற்றும் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் ஆகியோரின் பதிலுரைக்குப் பின்னர், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் உரையாற்றினார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பேசுகையில், “மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இன்று நிதித் துறை அமைச்சர் அவர்களும், வேளாண் துறை அமைச்சர் அவர்களும் பதிலுரையாற்றி, இந்த அவையில் இருக்கக்கூடிய அனைவருடைய பாராட்டுக்களையும், வாழ்த்துக்களையும் பெற்றிருக்கிறார்கள்.
இந்த அரசு மிகச் சிறப்பாக பல திட்டங்களை, பல பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது என்று பல்வேறு மாநிலங்களில், ஏன் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கூட பாராட்டக்கூடிய அளவிற்கு நம்முடைய அரசு செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. அப்படிப் பெருமைப்படுகிற அளவிற்கு வந்துகொண்டிருக்கக்கூடிய செய்திகளையெல்லாம் நாம் தொடர்ந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.
எனவே, இந்த அரசைப் பொறுத்தவரையில் எவ்வளவோ துறைகள் இருந்தாலும், முக்கியமான துறை நிதித் துறைதான். அந்த நிதித் துறையின் பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர், என்னுடைய அருமை சகோதரர் முனைவர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அவர்கள் மிகச் சிறப்பான வகையில், தன்னிடத்தில் இருக்கக்கூடிய அனுபவங்களைக்கொண்டும், வெளிநாடுகளில் தாம் பெற்றிருக்கக்கூடிய பல நல்ல அம்சங்களையெல்லாம் மனதிலே தேக்கிவைத்துக் கொண்டு, அந்தப் பணியை மிகச் சிறப்பாகச் செய்திருக்கிறார்கள் என்று சொன்னால், உள்ளபடியே பாராட்டுக்குரியவராக அவர் விளங்கிக்கொண்டிருக்கிறார்.
அதேபோலத்தான் நம்முடைய வேளாண்மைத் துறை அமைச்சர் அவர்களும் 'வேங்கையின் மைந்தன்' என்று பெயர் பெற்றவர் அவர். இப்பொழுது 'வேங்கையின் மைந்தன்' மட்டுமல்ல; விவசாயிகளுடைய மைந்தனாக மாறி, அவரும் தன்னுடைய கடமையைச் சிறப்போடு நிறைவேற்றியிருக்கிறார். இது ஒவ்வோர் ஆண்டும் தொடரவேண்டும். அவர்கள் தொடர்வார்கள் என்ற நம்பிக்கை நிச்சயமாக எனக்கு இருக்கிறது. அதை அவர்கள் நிறைவேற்றித் தருவார்கள் என்ற உணர்வோடு, அவர்களை வாழ்த்தி, அவர்களுக்கு என்னுடைய பாராட்டுகளை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அதேபோல், இலங்கைத் தமிழர்கள் இன்றைக்குப் பல துன்பங்களுக்கு, துயரங்களுக்கு ஆளாகியிருக்கக்கூடிய சூழ்நிலையில், அங்கு பரிதவித்துக் கொண்டிருக்கக்கூடிய தமிழர்கள் அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்துகொண்டிருக்கின்ற செய்திகளையெல்லாம் நானும் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அதுகுறித்து நேற்றைய தினமே அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளதோடு, இது தொடர்பாக, ஒன்றிய அரசிடமும், அங்கிருக்கக்கூடிய அதிகாரிகளிடத்திலும், அமைச்சர்களிடத்திலும் தொடர்புகொண்டு, இதை எப்படிக் கையாள வேண்டும் என்று சட்டரீதியாக நாங்கள் பேசிக்கொண்டிருக்கிறோம். எனவே, விரைவில் அதற்கொரு விடிவுகாலத்தை நிச்சயமாக இந்த தமிழக அரசு ஏற்படுத்தித் தரும் என்ற நம்பிக்கையை நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
அடுத்து, நம்முடைய பேரவைத் தலைவர் அவர்கள், நம்முடைய அவை முன்னவர் அவர்கள், இங்கிருக்கக்கூடிய பல்வேறு கட்சிகளைச் சார்ந்திருக்கக்கூடிய தலைவர்கள், உறுப்பினர்கள், நான் மேற்கொள்ளவிருக்கக்கூடிய துபாய், அபுதாபி பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளையெல்லாம் தெரிவித்திருக்கிறார்கள். அதற்கு நான் எனது நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
ஒன்றை மட்டும் நான் உறுதியோடு சொல்கிறேன். பல நிகழ்ச்சிகளில் நான் குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறேன். இந்தியாவிலேயே நம்பர்-1 முதலமைச்சர் என்ற அந்த பாராட்டைப் பெறுவதிலே எனக்கு மகிழ்ச்சிதான். ஆனால், அதைவிட எனக்கு பெருமகிழ்ச்சி எதுவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் முதல் மாநிலம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, நம்முடைய தமிழகம் வர வேண்டும். அந்த அடிப்படையில்தான் நாங்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறோம்.
எனவே, அப்படிப்பட்ட அந்த வெற்றிக்கு நான் இன்று மாலையிலே மேற்கொள்ளவிருக்கக்கூடிய துபாய், அபுதாபி பயணம் நிச்சயம் துணை நிற்கும். அதற்கு நீங்கள் வாழ்த்தியிருக்கிறீர்கள். வாழ்த்திய நெஞ்சங்களுக்கு மீண்டும் என்னுடைய சார்பிலே நன்றி தெரிவித்து, அமைகிறேன்." என உரையாற்றினார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக