வியாழன், 10 மார்ச், 2022

திமுக எம்.பி. என் ஆர் இளங்கோவின் மகன் விபத்தில் உயிரிழப்பு!

 மின்னம்பலம் : திமுக மாநிலங்களவை எம்.பி. என்.ஆர்.இளங்கோவின் மகன் இன்று அதிகாலை கார் விபத்தில் உயிரிழந்தார்.
திமுக மாநிலங்களவை எம்.பி.யும், மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோவின் மகன் ராகேஷ். வயது 21. சென்னை விஐடி கல்லூரியில் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வந்தார். ராகேஷின் நண்பர் ஈரோட்டைச் சேர்ந்த வேத விக்னேஷ். இவரும் சட்டப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறார். அவருக்கும் வயது 21.
இருவரும், TN 02 CC 1000 என்ற பதிவெண் கொண்ட மகேந்திரா தார் ஜீப்பில், சென்னையில் இருந்து புதுச்சேரி சென்றுள்ளனர். ராகேஷ் ஜீப்பை ஓட்டியுள்ளார்.

ஈசிஆர் வழியே சென்று கொண்டிருக்கும் போது கீழ்புத்துப்பட்டு அருகே இவர்களது ஜீப் விபத்தில் சிக்கியது.
அந்த இடத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு செக் போஸ்ட் உள்ளது. அங்கு மெதுவாக செல்ல வேண்டும் என்பதற்காக பேரிகார்டு வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இவர்கள் வந்த கார், பேரிகார்டு மீது வேகமாக இடித்து நிலை தடுமாறி செண்டர் மீடியனில் மோதி அதிகாலை 4 மணியளவில் விபத்தில் சிக்கியது. இதனால் ஜீப் லாக் ஆனதால் உள்ளே இருந்து வெளியே வர முடியவில்லை.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற போலீசார் விபத்தில் சிக்கிய ஜீப்பை தீயணைப்பு துறை உதவியுடன், ஜேசிபி மற்றும் கட்டர் இயந்திரங்கள் மூலம் ஓபன் செய்து இருவரையும் வெளியே கொண்டு வந்தனர்.

அப்போது, விபத்தில் காரில் பயணித்த எம்.பி.யின் மகன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது. படுகாயங்களுடன் மீட்கப்பட்ட வேத விக்னேஷ் அருகில் உள்ள பிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொரோனாவால் கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் வகுப்பு நடந்து வந்த நிலையில், கடந்த வாரம் தான் கல்லூரிக்கு மீண்டும் சென்றிருந்தார் ராகேஷ். இந்தசூழலில் விபத்தில் சிக்கி அவர் உயிரிழந்திருப்பது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக