BBC - Tamil : பாகிஸ்தான் வான் பகுதியில் 124 கி.மீ ஊடுருவி அங்குள்ள மண்ணில் விழுந்த இந்திய ஏவுகணை, தற்செயலாக நடந்த விபத்து என்று கூறியிருக்கிறது இந்திய அரசு.
நடந்த சம்பவத்துக்கு இந்தியா ஆழ்ந்த வருத்தம் தெரிவிப்பதாகக் கூறும் அரசு, அது குறித்து விசாரிக்க உயர்நிலைக்குழுவை நியமித்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இந்த விஷயத்தில் என்ன நடந்தது?
முன்னதாக பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சகம், இஸ்லாமாபாதில் உள்ள இந்திய தூதரக அதிகாரிகளை அழைத்து தங்கள் நாட்டு வான் பகுதியில் விழுந்த இந்திய ஏவுகணை சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது.
பயணிகள் விமானங்களுக்கும் பொதுமக்களின் உயிருக்கும் ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று இந்தியாவிடம் வலியுறுத்துமாறும் அதன் தூதரக அதிகாரிகளை பாகிஸ்தான் கேட்டுக் கொண்டது.
“இதுபோன்ற அலட்சியத்தால் ஏற்படும் விரும்பத்தகாத விளைவுகளை கவனத்தில் கொள்ள வேண்டும் ” என்றும் இந்தியாவை பாகிஸ்தான் எச்சரித்ததாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை கூறியது.
மேஜர் ஜெனரல் பப்பர் இஃப்திகார், தலைமை இயக்குநர் – பாகிஸ்தான் ராணுவ மக்கள் தொடர்புத்துறை (டிஜிஐஎஸ்பிஆர்)
சம்பவம் மார்ச் 9ஆம் தேதி நடந்தபோதும், அது குறித்து மார்ச் 10ஆம்தேதியும் மார்ச் 11ஆம் தேதி மாலை 5 மணிவரை – இந்திய பாதுகாப்புத்துறையோ வெளியுறவுத்துறையோ எந்த கருத்தையும் வெளியிடாமல் இருந்தன.
இதேவேளை, இரு தரப்பிலும் உள்ள பாதுகாப்புத்துறை ஆய்வாளர்கள் கடந்த காலங்களில் நிகழ்ந்த விபத்துக்கள் அல்லது மோதல்கள், இரு தரப்பின் தவறான மதிப்பீடுகளால் விளைந்த அபாயம் குறித்து எச்சரித்தனர்.
பாகிஸ்தானை ஒதுக்கிவிட்டு செளதி அரேபியா இந்தியாவை நெருங்கி வருவது ஏன்?
பாகிஸ்தானில் குர் ஆனை எரித்ததாக கும்பல் கொலை; மரத்தில் கட்டித் தொங்கவிடப்பட்ட நபர்
மூன்று போர்கள், ஏராளமான எல்லை துப்பாக்கி சண்டைகள், மிக சமீபத்தில் 2019இல் இரு தரப்பு விமானப்படைகளும் வானில் மோதிக் கொண்ட சம்பவங்களை ராணுவ நிபுணர்கள் நினைவுகூர்ந்தனர்.
இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் அணு ஆயுத பலத்தைக் கொண்டவை.
இந்த நிலையில், “சமீபத்திய சம்பவத்தைப் பார்க்கும்போது இந்தியாவும் பாகிஸ்தானும் பரஸ்பரம் ஆபத்துகளைக் குறைப்பது பற்றி பேச வேண்டும்.
இரண்டும் அணு ஆயுதங்கள் கட்டுப்பாட்டு விஷயத்தில் நம்பிக்கையுடன் இருந்தாலும், இதுபோன்ற சம்பவங்கள் திரும்பத் திரும்ப நடந்து அதிக விளைவை ஏற்படுத்தினால் என்னவாகும்” என்று ராணுவ விவகாரங்கள் மற்றும் தெற்காசிய விவகாரங்களில் நிபுணரான ஆயிஷா சித்திக் ட்விட்டரில் கேள்வி எழுப்பினார்.
“இரு நாடுகளும் அணு ஆயுதங்களைக் கட்டுப்படுத்துவதில் நம்பிக்கையுடன் உள்ளன. ஆனால் இதுபோன்ற சம்பவங்கள் திடீரென நடந்தால் அவை கடுமையான விளைவுகளுக்கு வித்திடலாம்,” என்றும் ஆயிஷா சித்திக் எச்சரித்தார்.
இதற்கிடையே, மார்ச் 9ஆம் தேதி இந்திய ஏவுகணை பாகிஸ்தான் மண்ணில் விழுந்த செய்தி மார்ச் 10ஆம் தேதி இரவுதான் பரவலாக வெளியுலகத்துக்குத் தெரிய வந்தது.
இந்த நாளில்தான் இந்தியாவில் உத்தர பிரதேசம், உத்தராகண்ட், மணிப்பூர், கோவா ஆகிய மாநிலங்களின் சட்டப்பேரவைகளுக்கு நடந்த தேர்தல்களின் முடிவுகள் வெளியாயின.
அந்த முடிவுகள் மத்தியிலும் தேர்தலை எதிர்கொண்ட நான்கு மாநிலங்களிலும் ஆளும் பாரதிய ஜனதா கட்சிக்கு சாதகமாக இருந்ததால், அடுத்த கட்டமாக பாகிஸ்தானை இலக்கு வைத்து தாக்குதல் நடத்த இந்தியா ஆயத்தமாகி வருவதாக சிலர் சமூக ஊடகங்களில் கருத்துக்களைப் பகிரத் தொடங்கினர்.
இதையடுத்தே இந்த விவகாரத்தில் வெளிப்படையாக பேசுவதற்கு பாகிஸ்தான் ராணுவம் தயாரானதாகத் தோன்றியது.
அந்த நாட்டின் ராணுவ மக்கள்தொடர்புத்துறையின் தலைமை இயக்குநரும் மேஜர் ஜெனரலுமான பப்பர் இஃப்திகார் ராவல்பிண்டியில் மார்ச் 10ஆம் தேதி மாலையில் அவசரமாக செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்தார்.
சுமார் 30 நிமிடங்கள் நடந்த அந்த செய்தியாளர் சந்திப்பில் 25 நிமிடங்கள்வரை இந்திய ஏவுகணை விழுந்த விவகாரம் மட்டுமே பேசப்பட்டது.
“பாகிஸ்தான் வான் பாதுகாப்பு ராடார் சாதனம் மூலம், இந்தியாவில் இருந்து அதிவேகமாக வந்த ஒரு கருவி பாகிஸ்தானுக்குள் மார்ச் 9ஆம் தேதி மாலை 6.45 மணியளவில் வந்தது விமானப்படையால் கண்டறியப்பட்டது,” என்று இஃப்திகார் கூறினார்.
“ஆரம்பநிலை விசாரணையில், பாகிஸ்தானின் வான் பகுதிக்குள் ஊடுருவிய அந்த சாதனம், பாகிஸ்தான் எல்லைக்கு உள்பட்ட கனேவால் மாவட்டத்தின் மியான் சன்னு என்ற பகுதியில் மாலை 6.50 மணியளவில் விழுந்தது.
அதன் விளைவாக சிவில் சொத்துகளுக்கு சிறிது சேதம் ஏற்பட்டது. நல்ல வேளையாக மனித உயிர்களுக்கு காயமோ இழப்போ ஏற்படவில்லை.”
“பாகிஸ்தான் விமானப்படை, தாயகத்தின் வான் பகுதியை தொடர்ச்சியாக கண்காணித்து வருகிறது. இந்தியாவின் சிர்சாவில் இருந்து செலுத்தப்பட்ட அந்த சாதனம், பாகிஸ்தான் மண்ணில் மோதி விழும்வரை கண்காணிக்கப்பட்டது.”
“வான் பாதுகாப்பு விதிகளுக்கு உட்பட்டு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை விமானப்படை மேற்கொண்டது. இந்த சாதனம் ஏவப்பட்ட செயல்பாடு, பாகிஸ்தான் மட்டுமின்றி இந்திய வான் பாதையில் பயணம் செய்யும் விமானங்களின் பாதுகாப்புக்கும் தரையில் மனித உயிர்களுக்கும் அச்சுறுத்தலாக இருந்துள்ளது.
“இந்த அப்பட்டமான அத்துமீறலை பாகிஸ்தான் கடுமையாக எதிர்க்கிறது மற்றும் எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் எச்சரிக்கிறது” என்று மேஜர் ஜெனரல் பப்பர் கூறினார்.
‘அப்பட்டமான மீறல்’
பாகிஸ்தான் விமானப்படை ஏர் வைஸ் மார்ஷல் தாரிக் ஜியா ஊடகங்களிடம் கூறுகையில், இந்த ஏவுகணை விழுந்த நேரத்தில், இரண்டு விமானங்களின் வான் பாதைகள் செயல்பாட்டில் இருந்தன பல வணிக விமான நிறுவனங்கள் அப்பகுதியில் வழித்தடத்தைக் கொண்டிருந்தன என்றார்.
“அந்த ஏவுகணை 40,000 அடி உயரத்தில் பறந்து வந்தது. அந்த பாதையில் விமானங்களும் 35,000 முதல் 42,000 அடி வரை பறக்கும். அந்த வகையில் இது விமான பயணிகளின் உயிருக்கும் ஆபத்தாக அமையக் கூடிய விஷயமாக பார்க்கிறோம்,” என்று தாரிக் ஜியா தெரிவித்தார்.
இந்த ஏவுகணை பாகிஸ்தான் எல்லைக்குள் 124 கிலோமீட்டர் தூரத்தை 3 நிமிடம் 44 வினாடிகளில் கடந்து சென்றதாகவும் பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை கூறியது.
அதே சமயம், ஏவுகணை விழுந்த மியான் சன்னு பகுதியில் எந்தவொரு பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த தளவாடங்களோ தளமோ இல்லை.
அந்த அதிவேக பொருள் ஏவகணையாக இருக்கலாம். ஆனால், அதில் வெடிபொருள் ஏதும் நிச்சமயாக இல்லை என்று அந்நாட்டின் பாதுகாப்பு மக்கள்தொடர்புத்துறை தெளிவுபடுத்தியது.
மியான் சன்னு பகுதியில் விழுந்து தீப்பிடித்து எரியும் இந்திய ஏவுகணை பாகம்
இந்த விவகாரம் தொடர்பாக நேரலையில் ஒளிபரப்பான செய்தியாளர் சந்திப்பின்போது “இது எப்படி நடந்தது என்பதை விளக்க வேண்டிய பொறுப்பு இந்தியாவுக்கே உள்ளது.
வான் பாதுகாப்பை பராமரிப்பதில் அலட்சியம், தொழில்நுட்ப ஆளுமையை நிர்வகிப்பதில் பலவீனம் போன்றவற்றைத்தான் இந்த சம்பவம் பிரதிபலிக்கிறது,” என்று பப்பர் இஃப்திகார் தெரிவித்தார்.
“ஒரு பொறுப்புள்ள தேசமாக இந்தியா பதிலளிக்கும் வரை நாங்கள் காத்திருப்போம். எங்களுக்குத் தெரிந்த அனைத்தையும் நாங்கள் இப்போது தெரிவித்து விட்டோம்.
ஆனால் மியான் சன்னுவில் என்ன நடந்தது என்பதை இந்தியாதான் விளக்க வேண்டும்,” என்று அவர் கூறினார். இந்த நிலையில், சம்பவத்துக்கு இரண்டு நாட்கள் கழித்து நடந்த நிகழ்வு பற்றிய தமது நிலையை ஓர் செய்திக்குறிப்பு வாயிலாக இந்தியா தெளிவுபடுத்தியது.
தமது பாதுகாப்புத்துறை மூலம் இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மார்ச் 9ஆம் தேதி வழக்கமான பராமரிப்பின்போது ஓர் தொழில்நுட்ப கோளாறு காரணமாக ஏவுகணை தற்செயலாக இயங்கி விட்டது. இந்த விஷயத்தை இந்திய அரசு தீவிரமானதாகக் கருதி உயர்நிலை விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், “ஏவுகணை விழுந்த இடம் பாகிஸ்தானின் பகுதி என்பதை அறிந்துள்ளோம். நடந்த சம்பவம் ஆழ்ந்த வருத்தத்துக்குரியது.
அதே சமயம், அந்த விபத்தால் எந்த உயிருக்கும் இழப்பு ஏற்படாதது நிவாரணத்தைத் தருகிறது,” என்று இந்திய பாதுகாப்புத்துறை செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
டெல்லியைச் சேர்ந்த ‘டிஃபன்ஸ் கேப்பிட்டல்’ பாதுகாப்பு இதழின் ஆசிரியர் என்.சி. பிபிந்த்ரா, “இந்த ஏவுகணை சம்பவம் தற்செயலாக நடந்ததாக மட்டுமே இருக்க வேண்டும்.
காரணம், பாகிஸ்தான் பாதுகாப்புத்துறையின் செய்தியாளர் சந்திப்பில் சம்பவத்தை விவரிக்க பயன்படுத்தப்பட்ட வார்த்தைகள் மிகவும் கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அந்நாட்டு ராணுவம், இந்தியா திட்டமிட்டே ஏவுகணையை செலுத்தியதாக எந்த இடத்திலும் குற்றம்சாட்டவில்லை என்று தெரிவித்தார்.
என்.சி. பிபிந்த்ரா பாதுகாப்பு விவகாரங்கள் தொடர்புடைய தகவல்களை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக கவனித்து வருபவர். இதுபோன்ற ஏவுகணை பராமரிப்பு சோதனை நடத்தப்படும்போது என்ன மாதிரியான விதிமுறைகள் பின்பற்றப்படும் என அவரிடம் கேட்டோம்.
“சமீபத்திய ஏவுகணை சோதனை நடத்தப்பட்ட பகுதி ராஜஸ்தானில் உள்ளது. இதுபோன்ற சோதனை இந்தியாவிலோ பாகிஸ்தானிலோ நடந்தால் 24 மணி நேரத்துக்கு முன்பே அது குறித்து பக்கத்து நாட்டுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.
அவை பெரும்பாலும் பாதிப்பு ஏற்படாத வகையிலேயே நடத்தப்படும். இப்போதும் இந்தியா தமது சோதனை பற்றி நிச்சயமாக தகவல் தெரிவித்திருக்கும். அதனால்தான் பாகிஸ்தான் இந்த விஷயத்தில் இந்தியாவை குற்றம்சாட்டி எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பதை கவனிக்க வேண்டும்,” என்கிறார் பிபிந்த்ரா.
பாகிஸ்தான் ராணுவ தரப்பிலும் இந்திய பாதுகாப்புத்துறை தரப்பிலும் இந்திய மண்ணில் இருந்து பாகிஸ்தானுக்குள் சென்ற சாதனத்தை ‘குறிப்பிட்டு அதன் அடையாளத்தை வெளிப்படுத்தாமல்’ பொதுவான கருவி அல்லது ஏவுகணை போன்ற சாதனம் என்றே அதிகாரிகள் அழைத்தனர்.
ஆனால், அந்த சாதனம் பறந்து சென்ற தூரம், உயரம், ஆற்றலை வைத்துப் பார்க்கும்போது அது அதிவேக சூப்பர்சோனிக் பிரமோஸ் ஏவுகணையாகவே இருந்திருக்க வேண்டும். அது வெடிபொருள் நிரப்பப்படாத வெறும் கலனாகவே சோதனைக்கு பயன்படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்று பாதுகாப்புத்துறை நிபுணர்கள் கூறுகின்றனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக