திங்கள், 21 மார்ச், 2022

அமைச்சர்கிட்ட கேளுங்க.. அப்படியே கையால் மைக்கை திருப்பி.. பதில் அளிக்க மறுத்த கனிமொழி! என்ன நடந்தது?

  Shyamsundar -  Oneindia Tamil  :  சென்னை: செய்தியாளர் கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து திமுக எம்பி கனிமொழி மைக்கை திருப்பிய சம்பவம் வைரலாகி வருகிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2007ல் ஆரம்பிக்கப்பட்ட நிகழ்ச்சி சென்னை சங்கமம். இந்த நிகழ்ச்சி தமிழ்நாடு முழுக்க கவனம்பெற காரணம் அப்போது கனிமொழி சார்பாக இந்த நிகழ்ச்சி முன்னெடுக்கப்பட்டதால்தான்.
அதோடு இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முழுக்க பல மாவட்டங்களில் இருந்து நாட்டுப்புற கலைஞர்கள் வந்து கலந்து கொண்டனர். பல்வேறு நாட்டுப்புற கலைஞர்களுக்கு அறிமுகம் கொடுத்ததில், பெரிய மேடை போட்டுக்கொடுத்ததில் இந்த நிகழ்ச்சி முக்கிய பங்கு வகித்தது.


உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே.. ஏன் ஹிந்தி? மத்திய அமைச்சரிடம் சீறிய கனிமொழி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!உங்களுக்கு ஆங்கிலம் தெரியுமே.. ஏன் ஹிந்தி? மத்திய அமைச்சரிடம் சீறிய கனிமொழி.. அடுத்து நடந்த ட்விஸ்ட்!

சென்னை சங்கமம் என்ற பெயருக்கு ஏற்றபடி இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு கலை பிரிவினர், கிராமிய கலைஞர்கள் சென்னையில் சங்கமித்தனர். ஆனால் ஆட்சி மாற்றத்திற்கு பின் இந்த நிகழ்ச்சி நின்று போனது. கனிமொழி முன்னெடுப்பில் நடத்தப்பட்ட காரணத்தால் இந்த நிகழ்ச்சி அதிமுக ஆட்சியின் கீழ் கைவிடப்பட்டது.

அதன்பின் சென்னையில் கடந்த சில வருடங்களாக இயக்குனர் பா. ரஞ்சித் சார்பாக மார்கழியில் மக்களிசை விழா நடத்தப்பட்டு வருகிறது. மக்கள் இசையான பறை, நாட்டுப்புற பாடல், சென்னையின் ஆன்மாவான கானா பாடல், பழங்குடியினர் பாடல்கள், தமிழ் இண்டி (indie) பாடல்கள் என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு தீமில் சென்னையில் இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. கடந்த முறை இந்த நிகழ்ச்சியில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ஆட்சி மாற்றத்திற்கு பின் மீண்டும் சென்னையில் சென்னை சங்கமம் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அதற்கு பதிலாக தமிழ்நாடு அரசு சார்பாக நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னையில் கிராமிய கலைகள் நிகழ்ச்சியை நடத்த உள்ளனர். நாளை இந்த விழா நடக்க உள்ள நிலையில், இதை பற்றிய கேள்விக்கு கனிமொழி பதில் அளிக்க மறுத்துவிட்டார். சென்னை சங்கமம், நம்ம ஊரு திருவிழா இரண்டையும் ஒப்பிட்டு எழுப்பிய கேள்விக்கு கனிமொழி பதில் அளிக்க மறுத்துவிட்டார்.

நெல்லை புத்தக கண்காட்சியில் முதலில் செய்தியாளர் கேள்வி எழுப்பும் போது.. நீங்கள்தான் சென்னை சங்கமத்தை நடத்தினீர்கள், இப்போது நெல்லை புத்தக கண்காட்சி பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார். அதற்கும் இதற்கும் என்ன சம்பந்தம், புத்தக கண்காட்சி நன்றாக நடக்கிறதே என்று கூறினார். இதையடுத்து மீண்டும் கேள்வியை திருத்திய (முதலில் தவறாக கேட்டுவிட்டார்) அந்த செய்தியாளர், நீங்கள்தான் சென்னை சங்கமத்தை நடத்தினீர்கள், நாளை நடக்க உள்ள நம்ம ஊரு திருவிழா பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டார்.

அதற்கு கனிமொழி பதில் அளிக்க மறுத்தார். அதோடு மைக்கை அப்படியே அருகில் இருந்த அமைச்சர் தங்கம் தென்னரசு பக்கம் திருப்பி, அமைச்சரிடம்தான் நீங்கள் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும் என்று கூறினார். இதையடுத்து அமைச்சரிடம் அந்த செய்தியாளர் மீண்டும் கேள்வியை எழுப்பினார். அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு, அதற்கும் இப்போது நெல்லையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கா என்று கேட்டுவிட்டு அங்கிருந்து நகர்ந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக