செவ்வாய், 22 மார்ச், 2022

உடைகிறதா" மதிமுக.. வைகோவிற்கு எதிராக 3 மாவட்ட செயலாளர்கள் போர்க்கொடி.. திமுகவில் இணைக்க நெருக்கடி

Hemavandhana -   Oneindia Tamil :  s சென்னை: மதிமுகவுக்குள் பிரச்சனை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், இன்றைய தினம் திடீரென ஒரு பெரிய ஷாக்கை வைகோவுக்கு தந்துள்ளனர் அக்கட்சியினர்..! துரை வைகோவை கட்சிக்குள் கொண்டுவர வேண்டும் அவருக்கு பதவி அளிக்க வேண்டும் என்று மதிமுக தரப்பில் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்..
ஆனால், வாரிசு அரசியலை எதிர்த்தே திமுகவில் இருந்து வெளியே வந்த தான், தன்னுடைய கட்சியிலும் வாரிசை கொண் வருவதா? என்ற விமர்சனத்துக்கு உள்ளாகி விடும் என்று உண்மையிலேயே வைகோ அஞ்சினார்.
மேலும், சில மதிமுக நிர்வாகிகள் மறைமுகமாக எதிர்ப்பையும் இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு தெரிவித்திருந்தனர்..
ஆனால், மாவட்டச் செயலாளர்கள் துரை வையாபுரியை அரசியலுக்கு கொண்டு வரவேண்டும் என்று திட்டவட்டமாக சொல்லி வந்தனர்..
இந்த சூழலில்தான், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில், உயர்மட்டக் குழு கூட்டம் நடத்தப்பட்டு, அதில் ரகசிய வாக்கெடுப்பும் நடத்தப்பட்டது..
இதையடுத்து, வைகோ மகன், துரை வையாபுரி தலைமை நிலைய செயலாளராக நியமிக்கப்பட்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பே, மதிமுகவிலும் வாரிசு அரசியலா என்ற விமர்சனம் பரவலாக எழ ஆரம்பித்தது. குறிப்பாக, துரை வையாபுரி நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, அந்த கட்சியின் இளைஞரணி செயலாளராக இருந்த ஈஸ்வரன் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்து, மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் என்ற இயக்கத்தை தொடங்குகிறேன் என்று அறிவித்ததும் மதிமுகவில் மேலும் பரபரப்பு அப்போது தொற்றிக் கொண்டது..


இப்படிப்பட்ட சூழலில்தான், மதிமுகவில் விரைவில் பொதுக்குழு நடக்க இருப்பதாகவும், தலைமை நிலைய செயலராக உள்ள தன் மகன் துரைக்கு செயல் தலைவர் அல்லது துணை பொதுச்செயலர் பதவி வழங்க வைகோ யோசித்து வருவதாகவும், அதற்கேற்ற வகையில் கட்சி சட்ட விதிகளை திருத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளதாகவும் மதிமுக வட்டாரங்கள் கூறின.. நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தல் நேரத்திலேயே, துரை வையாபுரிக்குக் கட்சியில் பதவி கொடுக்கப்படும் என்றும் தகவல்கள் கசிந்தன.

சில நாட்களுக்கு முன்பு வைகோ இதை பற்றி கட்சி கூட்டத்தில் பேசும்போது, "இது தொண்டர்களால் உருவாக்கப்பட்ட கட்சி. தொண்டர்களின் விருப்பம் எதுவோ அதுவே ஜனநாயக முறைப்படி நிறைவேற்றப்படும். கடந்த 56 வருடங்களாக அரசியலில் கஷ்டப்பட்டிருக்கிறோம்.. என் மகன் அரசியலுக்கு வந்து கஷ்டப்படுவதை நான் விரும்பவில்லை. அரசியல் என்னோடு போகட்டும். ஆனாலும், அவர் அரசியலுக்கு வருவது குறித்து நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்" என்று தெளிவாக சொல்லிவிட்டு, கடைசியில் மகனுக்கு ஐ.டி.விங் பொறுப்பை தந்திருந்தார்..

ஆனால், சில நாட்களுக்கு முன்பு மதிமுகவினர் சிலரிடம் நாம் இதுகுறித்து பேசினோம்.. அவர்கள் சொல்லும்போது, "இத்தனை வருட கால மதிமுகவில், கடந்த சில மாதங்களாக கட்சி பணி செய்த துரை மட்டும்தான் அந்தப் பதவிக்குத் தகுதியான நபரா? இத்தனை வருடமாக கட்சி பணி செய்து, எவ்வளவோ உழைத்த தகுதியான ஒரு கட்சி உறுப்பினர்கூடவா இல்லை? கட்சியின் பெரும்பான்மையான நிர்வாகிகள் துரை கட்சிக்குள் வருவதை விரும்புகிறார்கள் என்று வைகோ சொல்கிறாரே, இதேதானே திமுகவில் அவர் இருந்தபோது, ஸ்டாலினுக்கு பதவி கொடுக்கும்போதும் நடந்தது?" என்று மதிமுகவிலேயே சிலர் கேள்வி எழுப்பியிருந்ததும் இங்கு நினைவுகூரத்தக்கது.

இப்படி மதிமுகவுக்குள் புகைந்து கொண்டிருந்தது, இன்று மேலும் அதிகரித்து காணப்படுகிறது.. அதிலும் மாவட்ட செயலாளர்கள் எல்லாம் ஒன்றுகூடி, தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.. சிவகங்கை மாவட்ட மதிமுக செயலாளர் சிவந்தியப்பன் விருதுநகர் மாவட்ட செயலாளர் சண்முகசுந்தரம் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் இணைந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினர். அப்போது சொல்லும்போது, "மதிமுக பொதுச்செயலாளர் கட்சியின் கொள்கைகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறார்... இந்த கட்சி திமுக வில் இருந்து பிரியும்போது, திமுகவில் குடும்ப அரசியல் இருப்பதாக சொல்லித்தான் பிரிந்தது. வைகோ வைகோ இப்போதும் அதே நிலையில் தன்னுடைய மகனை துணைப் பொதுச் செயலாளராக கட்சியின் கொள்கைக்கு விரோதமாக வைகோ முடிவெடுத்து செயல்படுகிறார்... எனவே அவரது இந்தக் கொள்கைக்கு தமிழகத்தில் உள்ள 10-க்கும் மேற்பட்ட மாவட்ட செயலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்...
 அதனால், இனி மதிமுக பொதுச் செயலாளருக்கு ஒத்துழைப்பு தருவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளோம்... மேலும் மதிமுகவை கலைத்துவிட்டு திமுகவுடன் இணைய வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்" என்றனர்.

இந்த பேட்டியின்போது மாவட்ட துணைச் செயலாளர் தங்கபாண்டியன் உயர்நிலைக் குழு உறுப்பினர் அழகுசுந்தரம் நாகை மாவட்ட முன்னாள் செயலாளர் மோகன் சிவகங்கை மாவட்ட தலைவர் ஜெயபிரகாஷ் மற்றும் பாரதமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.. ஏற்கனவே கட்சி உடைய போகிறது என்று செய்திகள் பரபரத்த நிலையில், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் இன்று ஒன்று கூடி நிற்பது பெரும் பரபரப்பை மதிமுகவுக்குள் ஏற்படுத்தி வருகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக