வெள்ளி, 18 மார்ச், 2022

தமிழ்நாடு பட்ஜெட் முழுவிபரம் ! ‘திராவிட மாடல் வளர்ச்சி’: அனைத்து தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் திட்டங்கள்..

  கலைஞர் செய்திகள்  :  தமிழ்நாடு அரசின் 2022-2023ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளவை அடங்கிய முழு விவரம் இங்கே...
தமிழ்நாடு அரசின் நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள், 2022-2023 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீடுகளை 2022 ஆம் ஆண்டு மார்ச் திங்கள் 18 ஆம் நாள் சட்டமன்றப் பேரவை முன் வைத்து ஆற்றும் உரை (பகுதி - II)
“தமிழ் வளர்ச்சி & பண்பாடு முதல்.. பள்ளிக்கல்வித்துறை வரை”: பட்ஜெட்டில் இடம்பெற்ற 64 முக்கிய அறிவிப்புகள்!
    தமிழ்நாட்டில் உள்ள திறன்மிக்க மனிதவளத்தை மேலும் மேம்படுத்தி, ஓர் அறிவுசார் பொருளாதாரத்தை உருவாக்குவது இந்த அரசின் தொலைநோக்குப் பார்வையாகும்.

உலகளாவியபங்களிப்புடன்,“அறிவு சார் நகரம்” (Knowledge City) ஒன்று உருவாக்கப்படும். இந்த அறிவு சார் நகரம், உலகளவில் புகழ்பெற்ற பல்கலைக்கழகங்களின் கிளைகளைக் கொண்டிருக்கும். இந்நகரம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையங்கள், திறன் பயிற்சி மையங்கள், அறிவு சார்ந்த தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைத் தன்னகத்தேகொண்டிருக்கும். மேலும், தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (SIPCOT), தமிழ்நாடு சிறுதொழில் வளர்ச்சி நிறுவனம் (TANSIDCO) போன்ற அரசுபொதுத்துறை நிறுவனங்களுடன் இணைந்து மாநிலத்திலுள்ள பல்கலைக்கழகங்கள் தங்களின் வளாகங்களில் ஆராய்ச்சிப் பூங்காக்களை நிறுவ ஊக்குவிக்கப்படும்.

    தமிழ்நாட்டின் உயர்கல்வி மாணவர் சேர்க்கை விகிதம் உயர்ந்துகொண்டே வருகிறது. அதற்கேற்ப,
    அரசுக் கல்லூரிகள் மற்றும் பல்தொழில்நுட்பக் கல்லூரிகளின் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது அவசியமாகும்.
    அடுத்த ஐந்து ஆண்டுகளில் 1,000 கோடி ரூபாய்
    செலவில் ஒரு சிறப்புத் திட்டத்தை உருவாக்கி,
    புதிய வகுப்பறைகள், விடுதிகள், ஆய்வகங்கள்,
    திறன்மிகு வகுப்பறைகள் உருவாக்கப்படும். இதற்காக, இவ்வாண்டு 250 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

    முன்னுரிமை அடிப்படையில் 7.5 சதவீத ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் அரசுப் பள்ளி மாணவர்களின் பல்வேறு கட்டணங்களுக்காக 204 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் உயர்கல்வித் துறைக்கு
    5,668.89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நான் முதல்வன்

    ஆண்டுக்கு ஐந்து இலட்சம் இளைஞர்களை, படிப்பில், அறிவில், சிந்தனையில், ஆற்றலில், திறமையில் மேம்படுத்துவதே மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின் கனவுத் திட்டமான‘நான் முதல்வன்’ திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். இத்திட்டத்தில், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் மாணவ, மாணவியர்களின்தனித் திறமைகள்அடையாளம் காணப்பட்டு,அவை ஊக்குவிக்கப்படும். மேலும்,தொழில் நிறுவனங்களின் திறன் தேவைக்கேற்ப மாணவர்களுக்கு சிறப்புத் திறன்பயிற்சிகள் வழங்கப்படும். இதன் மூலம், மாணவர்களின் வேலை பெறும்
    திறன் (employability) பெருகும். இத்திட்டத்தைச் செயல்படுத்த,
    50 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    உலகமெங்கும் பல நாடுகளில் விஞ்ஞானிகளாக, பேராசிரியர்களாக, தொழில் நிபுணர்களாக தமிழர்கள் தங்களது துறையில் சாதனை புரிகிறார்கள். பல்கலைக்கழகங்கள்
    மற்றும் கல்லூரிகளின் ஆராய்ச்சித் திறனை உயர்த்துதல், மாணவர்களுக்கு வழிகாட்டுதல், வளர்ந்து வரும் துறைகளில் ஆராய்ச்சி மேற்கொள்ளுதல், பாடத்திட்டத்தை மாற்றியமைத்தல் போன்றவற்றை இவர்களுடன் இணைந்து செயல்படுத்த
    ஒரு புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.

    இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய அறிவியல் கழகம், அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகங்கள் போன்ற புகழ்பெற்ற உயர்கல்வி நிறுவனங்களில் சேர, அரசுப் பள்ளி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இந்நிறுவனங்களில் இளநிலைப் பட்டப்படிப்பு பயில்வதற்கான முழுச் செலவையும் மாநில அரசே ஏற்கும். 6 ஆம் வகுப்பு முதல்12 ஆம் வகுப்பு வரையில் அரசுப் பள்ளிகளில் பயின்றுள்ள மாணவர்கள் இந்த உதவியைப் பெறலாம்.

இளைஞர் நலன்

    ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களை உருவாக்குவதில் வெற்றி கண்ட, “ஒலிம்பிக் தங்கப் பதக்கத் தேடல்” (Olympic Gold Quest) போலவே, தமிழ்நாட்டிலிருந்து உலகத் தரம் வாய்ந்த விளையாட்டு வீரர்களையும்
    ஒலிம்பிக் பதக்க வெற்றியாளர்களையும்உருவாக்க, தமிழ்நாடு ஒலிம்பிக் தங்கப்பதக்கத் தேடல் திட்டத்தைச் செயல்படுத்திட25 கோடி ரூபாய் வழங்கப்படும்.

    பல்வேறு விளையாட்டுகளுக்குப் புகழ்பெற்ற வடசென்னையில்,இளைஞர்களின் திறனை ஊக்குவிக்கும் நோக்கத்துடன், சிறந்த விளையாட்டு வசதிகள் மற்றும் கட்டமைப்புகளுடன் கூடிய விளையாட்டு வளாகம் ஒன்றை
    அரசு உருவாக்கும். கைப்பந்து, பூப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கபடி, உள்ளரங்க விளையாட்டுகள் மற்றும் நவீன உடற்பயிற்சிக்கூட வசதிகளுடன், சென்னை இராதாகிருஷ்ணன் நகர் பகுதியில் முதற்கட்டமாக10 கோடி ரூபாய் செலவில் இவ்வளாகம் அமைக்கப்படும்.

சதுரங்க ஒலிம்பியாட்

    சதுரங்க விளையாட்டிற்கு உலகில் மிகவும் புகழ்பெற்ற போட்டி சதுரங்க ஒலிம்பியாட் (Chess Olympiad) ஆகும். பொதுவாக, இந்த போட்டியை நடத்துவதற்கு நாடுகளுக்கு மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது. இதுவரை, இந்த போட்டியை நடத்த இந்தியாவிற்கு வாய்ப்பு எட்டவில்லை. இவ்வாண்டு,
    இந்த அரசின் சீரிய முயற்சிகளின் பயனாக முதன்முறையாக சதுரங்க ஒலிம்பியாட் சென்னையில் நடைபெறும் என்பதை
    மிக்க மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன். 150 நாடுகளைச்சேர்ந்த 2000 முன்னணி சதுரங்க வீரர்கள் இப்போட்டியில் கலந்துகொள்ள உள்ளனர். தமிழ்நாட்டின் விளையாட்டு துறையில் இது ஒரு திருப்புமுனையாக அமையும். இந்தப் போட்டியை சிறப்பாக நடத்த முழு ஒத்துழைப்பையும் ஆதரவையும் இந்த அரசு வழங்கும்.

    இம்மதிப்பீடுகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறைக்கு 293.26 கோடி ரூபாய்
    நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வு

    தரமான மருத்துவ வசதிகளை மாவட்ட அளவில்வழங்குவதற்காகவும், முக்கியத் திட்டங்களைஒருங்கிணைத்து செயல்படுத்தவும் 19அரசு மருத்துவமனைகளைபுதிய
    மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாகமேம்படுத்திட
    அரசு முடிவு செய்துள்ளது. புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட
    6 மாவட்டங்கள் உள்ளிட்ட 19 மாவட்டங்களிலுள்ள
    அரசு மருத்துவமனைகள் 1,019 கோடி ரூபாய் செலவில் மாவட்டத் தலைமை மருத்துவமனைகளாக தரம்உயர்த்தப்படும்.

    உலகளாவிய நோய்த்தாக்க ஆய்வின்படி, மன அழுத்தம், பதற்றம்,மனச்சிதைவு ஆகியவற்றின் தாக்கம் அதிகமாகஉள்ளது. எனவே, தமிழ்நாட்டில் மனநல மருத்துவப் பயிற்சி பெற்ற மனித வளத்துடன் மனநோய் சிகிச்சைகட்டமைப்பை வலுப்படுத்துவது இன்றியமையாதது.இத்தகைய உயர்தர மனநலச் சேவைகளைவழங்குவதற்காக, கீழ்ப்பாக்கத்திலுள்ள மனநல மருத்துவமனையை(IMH),தமிழ்நாடு மனநலம் மற்றும் நரம்பியல் நிறுவனம் (TNIMHANS) என்ற உயர்நிலை அமைப்பாக மேம்படுத்திடஅரசு திட்டமிட்டுள்ளது.இதற்கு,
    முதல் கட்டமாக 40 கோடி ரூபாய் வழங்கப்படும்.

    காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அரசுஅறிஞர் அண்ணா நினைவு புற்றுநோய் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி நிலையம் 1969 ஆம் ஆண்டு அமைக்கப்பட்டு,
    290 படுக்கை வசதிகளுடன் செயல்பட்டு வருகின்றது.
    இந்த மருத்துவமனை தற்போது 500 படுக்கை வசதிகளுடன்
    120 கோடி ரூபாய் செலவில் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. இம்மருத்துவமனை, 750 படுக்கைவசதிகளுடைய, தன்னாட்சி அதிகாரம் பெற்ற உயர்தர மருத்துவமனையாக மேலும் தரம் உயர்த்தப்படும். இப்பணிகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில், உலக வங்கி மற்றும் தேசியசுகாதார இயக்க
    நிதி உதவியுடன் செயல்படுத்தப்படும்.

    தற்போது உக்ரைனில் நடைபெற்று வரும் போரினால் பாதிக்கப்பட்டு, தமது மருத்துவக் கல்வியைத்
    தொடர இயலாமல் தாயகம் திரும்பியுள்ள நமது மாணவ மாணவியர் அனைவரும் தமது மருத்துவக்கல்வியை தொடருவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க வேண்டும் என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் மாண்புமிகு பிரதமர் அவர்களை வலியுறுத்தியுள்ளார்கள். இந்த மாணவர்கள் நமது நாட்டிலோ, பிற வெளிநாடுகளிலோ மருத்துவக் கல்வியை தொடர்வதற்கான வழிமுறைகள் ஒன்றிய அரசால் வகுக்கப்பட்டு வருகின்றன. இந்த வழிமுறைகளின் அடிப்படையில், அவர்களது எதிர்கால மருத்துவக்கல்விக்கான அனைத்து உதவிகளையும் இந்த அரசு வழங்கும்.

    தேசிய ஊரக சுகாதார இயக்கத் திட்டத்திற்கு
    1,906 கோடி ரூபாயும், அவசர ஊர்தி சேவைகளுக்கு 304 கோடி ரூபாயும், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவித் திட்டத்திற்கு 817 கோடி ரூபாயும், முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்திற்கு 1,547 கோடி ரூபாயும்
    இந்த வரவு-செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறைக்கு 17,901.73கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சமூக நலன்

    பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும்

பாரினில் பெண்கள் நடத்த வந்தோம்

என்றார் மகாகவி.

ஏழை எளிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின்கல்வியைஊக்குவிக்கவும், திருமண உதவிக்காகவும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் 1989 ஆம் ஆண்டு மூவலூர் இராமாமிர்தம்அம்மையார்நினைவு திருமணநிதியுதவித்
திட்டம்தொடங்கப்பட்டது. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப, பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்களைச் சார்ந்த பெண்களின் உயர் கல்வியை உறுதி செய்ய இத்திட்டத்தை மாற்றியமைப்பது அவசியமாகிறது.

    தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவிகளின் உயர்கல்விச் சேர்க்கை மிகக் குறைவாக இருப்பதைக் கருத்தில்கொண்டு,மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு திருமண நிதியுதவித் திட்டம் மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் உயர் கல்வி உறுதித் திட்டம்
    என மாற்றியமைக்கப்படுகிறது. இதன் மூலம், அரசுப் பள்ளிகளில் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரைபயின்றுமேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் பட்டப்படிப்பு / பட்டயப்படிப்பு / தொழிற்படிப்பு ஆகியவற்றில் இடைநிற்றல் இன்றி முடிக்கும் வரை,மாதம் 1,000 ரூபாய்அவர்கள் வங்கிக் கணக்கிற்கு நேரடியாகச் செலுத்தப்படும். இந்த மாணவிகள் ஏற்கெனவே பிற கல்வி உதவித்தொகை பெற்று வந்தாலும், இத்திட்டத்தில் கூடுதலாக உதவிபெறலாம்.

    இத்திட்டத்தின் மூலம், சுமார் ஆறு இலட்சம் மாணவிகள் ஒவ்வொரு ஆண்டும் பயன்பெற வாய்ப்புள்ளது.இந்தப் புதிய முன்முயற்சிக்காக, வரவு-செலவுத் திட்டத்தில் 698 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஈ.வே.ரா. மணியம்மையார் நினைவு வறிய நிலையில் உள்ள விதவையரின் மகள்களின் திருமண நிதியுதவித் திட்டம், டாக்டர் முத்துலெட்சுமி ரெட்டி கலப்புத் திருமண நிதியுதவித் திட்டம், அன்னை தெரசா அம்மையார் நினைவு ஆதரவற்ற பெண்களுக்கான திருமண நிதியுதவித் திட்டம்,
    டாக்டர் தர்மாம்பாள் அம்மையார் நினைவு விதவை மறுமண நிதியுதவித் திட்டம் ஆகிய திட்டங்கள் எவ்வித மாற்றமுமின்றி தொடர்ந்து செயல்படுத்தப்படும்.

    செங்கல்பட்டு மாவட்டம் ஆத்தூரில் 27 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “சமூக மேம்பாட்டிற்கான ஒருங்கிணைந்த பயிற்சி மையம்” அமைக்கப்படும். இம்மையத்தில், குழந்தைகள் மற்றும் மகளிரின் நலன், உரிமைகள், மேம்பாடு, அதிகாரப் பரவலாக்கம் தொடர்பாக சமூகநலத் துறை அலுவலர்கள் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்களுக்கும் பயிற்சிகள் அளிக்கப்படும்.

    ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்திற்கு 2,542 கோடி ரூபாயும், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். சத்துணவுத் திட்டத்திற்கு 1,949 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத் துறைக்கு 5,922.40 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நலன்

    ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோரால் தொடங்கப்படும் புத்தொழில் நிறுவனங்களுக்கு உதவிடும் வகையில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்திற்கு (TANSIM)
    30 கோடி ரூபாய் நிதியாக வழங்கப்படும்.அரசு மற்றும் அரசு நிறுவனங்களின் பகுக்கக்கூடிய கொள்முதல்களில்,
    ஐந்து சதவீதம் தமிழ்நாட்டைச் சார்ந்த ஆதிதிராவிடர், பழங்குடியின தொழில் முனைவோர் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கென ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    விளிம்பு நிலையில் இருக்கும் இருளர்கள் போன்ற பண்டைய பழங்குடியினருக்கு(Particularly Vulnerable Tribal Groups)இந்த ஆண்டு 20.7 கோடி ரூபாய் மதிப்பீட்டில்
    443 வீடுகள் கட்டுவதற்கு அரசு அனுமதி வழங்கியுள்ளது.
    வரும் நிதியாண்டில் மேலும்,1000 புதிய வீடுகள்
    பண்டைய பழங்குடியினருக்கு 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.

    ஆதி திராவிட, பழங்குடியின மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக
    1,963 கோடி ரூபாயும், உணவுக் கட்டணத்திற்கு 512 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறைக்கு 4,281.76 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாணவர் விடுதிகள்

    அனைத்து அரசு மாணவர் விடுதிகளின் செயல்பாடுகளையும் ஆய்வு செய்து, அதன் கட்டமைப்பு
    வசதிகள், சுகாதாரம், கல்விச் சூழல், உணவுத் தரம்,
    பாதுகாப்பு, கண்காணிப்பு ஆகியவற்றை மறுசீரமைக்கத் தேவையான பரிந்துரைகளை வழங்க, ஓர் உயர்மட்டக் குழு அமைக்கப்படும்.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலன்

    பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூக, பொருளாதார முன்னேற்றம் அடையும் வண்ணம், தற்போது நடைமுறையில் உள்ள வாழ்வாதாரத் திட்டங்களை ஆய்வு செய்து, மாறி வரும் பொருளாதாரச் சூழலுக்கு ஏற்றவாறு மறுசீரமைக்கப்படும்.

    பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு வழங்கப்படும் உயர்கல்வி உதவித்தொகைக்காக 322 கோடி ரூபாயும், மாணவர்களுக்கு இலவச மிதிவண்டிகள் வழங்குவதற்காக 162 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

சிறுபான்மையினர் நலன்

    தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையினர் வழிபாட்டுத் தலங்களான தேவாலயங்கள், பள்ளிவாசல்கள், தர்காக்களைப் பழுதுபார்ப்பதற்காகவும், புனரமைப்பதற்காகவும் அரசு நிதியுதவி வழங்கி வருகிறது.இந்த ஆண்டு சென்னையில் உள்ள
    வெஸ்லி தேவாலயம், புனித தோமையர் மலை தேவாலயம்,திருநெல்வேலியில் உள்ளகால்டுவெல் தேவாலயம்,நாகர்கோவிலில் உள்ள தூய சேவியர் தேவாலயம், சென்னையில் உள்ள நவாப் வாலாஜா பள்ளிவாசல், ஏர்வாடி தர்கா,நாகூர் தர்காஆகிய தொன்மையான வழிபாட்டுத் தலங்கள்புனரமைக்கப்படும். இப்பணிகளுக்கு, வரும் நிதியாண்டில் 12 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது.

    இம்மதிப்பீடுகளில் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத் துறைக்கு1,230.37 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மாற்றுத் திறனாளிகள் நலன்

    சிறப்புத் தேவையுள்ள ஒவ்வொரு குழந்தையும் நன்கு வளர்வதற்கான வாய்ப்புகளை உறுதி செய்வதற்கு, ஆரம்பக் கட்டத்திலேயே குறைபாட்டைக் கண்டறிந்து சிகிச்சை வழங்குவது இன்றியமையாததாகும். தற்போது மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை, சமூகநலம் மற்றும் மகளிர் உரிமைத் துறை, பள்ளிக்கல்வித் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை ஆகிய துறைகள் இப்பணிகளைத் தனித்தனியாகச் செய்கின்றன. இத்துறைகளின் நடவடிக்கைகளை ஒருங்கிணைத்து, தகவல் பரிமாற்றத்திற்கு வழிவகை செய்து, பல்வேறு வகையான சிகிச்சை மையங்கள் மூலம் சிறப்புத் தேவைகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு அனைத்து சேவைகளையும் வழங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும்.

    தரமான ஆரம்ப நிலை பயிற்சி மற்றும் கல்வியை வழங்குவதற்காக, தன்னார்வத் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்படும் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி நிறுவனங்களுக்கு அரசு சம்பள மானியம் வழங்கி வருகிறது. இந்நிறுவனங்களில் பணியாற்றும் உடற்பயிற்சி பயிற்றுநர்
    மற்றும் சிறப்பு கல்வியாளர்களுக்கு வழங்கப்படும் மாத மதிப்பூதியம் 14,000 ரூபாயிலிருந்து 18,000 ரூபாயாக உயர்த்தப்படும்.

    கடுமையாகப் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான பராமரிப்புத் தொகைக்காக 450 கோடிரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் மாற்றுத் திறனாளிகள் நலத் துறைக்கு 838.01 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஊரக வளர்ச்சித் துறை

    பிரதமரின்வீட்டுவசதித் திட்டத்தின் கீழ், 2016-2020 ஆம் ஆண்டுகளில் ஒப்பளிக்கப்பட்ட 1,77,922வீடுகளின் கட்டுமானப் பணிகளை விரைவுபடுத்திட, மேற்கூரை அமைப்பதற்காககூடுதலாக வழங்கப்படும் 70,000 ரூபாய் உட்பட ஆண்டுதோறும் வீடு ஒன்றிற்கு மொத்தம் 1,68,000 ரூபாய் மாநில அரசு வழங்கி வருகிறது.2021-22 ஆம் ஆண்டில் 2,30,788புதிய வீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இத்திட்டத்திற்காக,4,848 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    கட்டமைப்புப் பற்றாக்குறையை நிறைவு செய்து,கிராமங்களை பன்முக வளர்ச்சியடையச் செய்வது,அனைத்துக் கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டம்– II ன் குறிக்கோளாகும். வரும் ஆண்டில், 1,455 கோடி ரூபாய் செலவில் 2,657 கிராம ஊராட்சிகளில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். அரசின் முன்னோடித் திட்டமான கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரசுத் திட்டங்களை ஒருங்கிணைத்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.

    சமத்துவம் தழைக்கும் ஏற்றத்தாழ்வுகளற்ற தமிழ்ச் சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில்,முத்தமிழறிஞர்கலைஞர் அவர்களால் பெரியார் நினைவு சமத்துவபுரங்கள்அமைக்கப்பட்டன. முதற்கட்டமாக, கடந்த பத்தாண்டுகளாக பராமரிப்பு இன்றி புறக்கணிக்கப்பட்ட149 சமத்துவபுரங்கள் 190 கோடி ரூபாய் செலவில் சீரமைக்கப்படும்.

    பிரதமரின் கிராம சாலைத்திட்டம் III-ன் கீழ், 1,280 கி.மீ. நீளமுள்ள 280 சாலைகளை791 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும், 54 பாலங்களை221 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் அமைப்பதற்கான பணிகள் வரும் ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

    மகளிர்

    சுயஉதவிக்குழுக்களைதற்காலத்தியதொழில்நுட்பபொருளாதாரத்தேவைகளுக்குஏற்ப, திறன்மிகு
    சுயஉதவிக்குழுக்களாக (Smart SHG) மேம்படுத்த முன்னோடி பயிற்சித் திட்டமாக (pilot training basis)மதுரையில் தொடங்கப்படும்.தமது முன்னேற்றத்துடன் தாம் சார்ந்துள்ள சமுதாயத்தின் முன்னேற்றத்திற்கும் அவர்கள் பங்காற்றும் வகையில் சுய உதவிக் குழுக்களை மெருகேற்றிட பயிற்சி வழங்கப்படும்.

    மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்திற்கு 2,800 கோடி ரூபாயும், சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்திற்கு 705 கோடி ரூபாயும்,
    தேசிய ஊரக வாழ்வாதாரத் திட்டத்திற்கு 636 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறைக்கு 26,647.19 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

நகராட்சி நிர்வாகம்

    திடக்கழிவு மேலாண்மை உட்பட,முழுமையானசுகாதாரத்தை உறுதி செய்வதற்கான, இரண்டாவது தூய்மை இந்தியா இயக்கம், ஒன்றிய அரசின் நிதி உதவியுடன் அரசால் செயல்படுத்தப்படும். இத்திட்டத்திற்கான மாநிலப் பங்கீடாக
    2,169 கோடி ரூபாயுடன் மொத்தமாக 5,465 கோடி ரூபாய் ஒப்பளிக்கப்பட்டுள்ளது.கொடுங்கையூரில் பல ஆண்டுகளாகத் தேங்கியுள்ள குப்பைகளை பிரித்து அகற்றும் பணிகள் ‘Bio-mining’முறையில் வரும் நிதியாண்டில் மேற்கொள்ளப்படும்.

    அம்ருத் 2.0 திட்டத்திற்கான ஒட்டுமொத்த
    திட்டமதிப்புசுமார் 13,000 கோடிரூபாயாகநிர்ணயிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு, உள்ளாட்சி அமைப்புகள், பன்னாட்டு
    நிதி நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு ஆகியவற்றின் பங்களிப்பின் வாயிலாக இத்திட்டத்தின் மூலம் பல்வேறு குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீர் மேலாண்மைத் திட்டங்களை
    அரசு செயல்படுத்தும். இம்மதிப்பீடுகளில்அம்ருத்திட்டத்திற்கு 2,130 கோடிரூபாய்ஒதுக்கீடுசெய்யப்பட்டுள்ளது.

    புதிதாகத்தோற்றுவிக்கப்பட்டதாம்பரம், காஞ்சிபுரம், கும்பகோணம், கரூர், கடலூர், சிவகாசி ஆகிய ஆறு மாநகராட்சிகளில்அடிப்படைக்கட்டமைப்பைஉருவாக்குவதற்கு, தலா 10 கோடி ரூபாய் என மொத்தம்
    60 கோடிரூபாய்சிறப்புநிதியாகவழங்கப்படும்.
    மேலும் புதிதாக தோற்றுவிக்கப்பட்ட 28 நகராட்சிகளுக்கு தலா 2 கோடி ரூபாய் என மொத்தம் 56 கோடி ரூபாய்
    சிறப்பு நிதியாக வழங்கப்படும்.

    200 ஆண்டுகளுக்கு முன், ஜூன், 1822 இல்
    ஜான் சல்லீவன் என்ற ஆங்கிலேய அதிகாரியால் முதன்முதலாகக் கண்டறியப்பட்டு கட்டமைக்கப்பட்டதே இன்றைய நீலகிரி மாவட்டத்தின் தலைமையிடமான உதகை நகரமாகும். இதனை நினைவுகூறும் வகையில் சிறப்புத் திட்டங்களும் நிகழ்ச்சிகளும் மேற்கொள்ள 10 கோடி ரூபாய் சிறப்பு நிதி வழங்கப்படுகிறது.

    நகர்ப்புரப் பகுதிகளைப் பசுமையாக்கி, மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு 500 பூங்காக்கள் உருவாக்கப்படும்.

    அண்மையில் நகர்ப்புர உள்ளாட்சித் தேர்தல்கள் நடைபெற்று, புதிய மக்கள் பிரதிநிதிகள் பதவியேற்றுள்ளனர். நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய, கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டத்திற்கு
    1,000 கோடி ரூபாயும், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்திற்கு
    500 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. மேலும், திறன்மிகு நகரங்கள் திட்டத்திற்கு1,875 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறைக்கு 20,400.24 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

குடிநீர் வழங்கல்

    மாநிலத்தின்அனைத்துமக்களுக்கும்போதுமானகுடிநீர்வழங்குவதைஉறுதிசெய்வதற்குஅரசுமுன்னுரிமைஅளித்துவருகிறது. தற்போது, தமிழ்நாடுகுடிநீர்வடிகால்வாரியத்தால்542 கூட்டுக்குடிநீர்திட்டங்கள் பராமரிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.மேலும்,
    2,208 கோடிரூபாய்மொத்தமதிப்பீட்டில்5.64 இலட்சம்மக்கள்பயன்பெறும்வகையில்அரசால்ஒப்புதல்அளிக்கப்பட்ட 6 புதியகூட்டுகுடிநீர்திட்டங்கள்வரும்நிதியாண்டில்செயல்படுத்தப்படும்.குடியிருப்புக்கு குடிநீர் (ஜல்ஜீவன்) திட்டத்திற்காக 3,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சி

    மெட்ரோ இரயில் தடங்கள், புறநகர் இரயில்
    தடங்கள், தேசிய நெடுஞ்சாலைகள், புறவழிச்சாலைகள், வெளிவட்டச்சாலைகள்போன்ற போக்குவரத்து வழித்தடங்களை ஒட்டியுள்ள பகுதியில் நகர்ப்புர வளர்ச்சியை ஊக்குவிப்பதற்காக, அப்பகுதிகளில் தற்போதுள்ள தளப்பரப்புக் குறியீட்டை (FSI) உயர்த்த
    அரசு முடிவு செய்துள்ளது. இதனுடன், இந்தப் பகுதிகளுக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளும் முன்னுரிமை அடிப்படையில் ஏற்படுத்தப்படும்.

    தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின்பழுதடைந்த, பழைய குடியிருப்புப் பகுதிகளின் மறுமேம்பாடு (re-development) மேற்கொள்ளப்படும். இதற்காக, அரசு ஒரு “மறுமேம்பாட்டுக் கொள்கையை” இந்த ஆண்டு வெளியிடும். இதுவரை அறுபது திட்டங்கள் இதற்காகஅடையாளம் காணப்பட்டு, தொடக்கப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இத்திட்டங்களில் அதிகபட்ச தளப்பரப்பை அடைவதற்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து இந்தத் திட்டம்செயல்படுத்தப்படும்.

    மீஞ்சூரில் இருந்து வண்டலூர் வரை
    62 கிலோமீட்டர் நீளமுள்ள வெளிவட்டச் சாலையின் (ORR) கிழக்குப் பகுதியில் 50 மீட்டர் அகலமுள்ள நிலம், வளர்ச்சிப் பெருவழியாக (Development Corridor)மேம்படுத்தப்படும். இந்தப் பெருவழியை அடுத்துள்ள
    பகுதிகளில், குடியிருப்பு நகரியம், சிப்காட் தொழிற்பூங்காக்கள், பொழுதுபோக்குப் பகுதிகள், சேமிப்புக் கிடங்குகள், தோட்டக்கலைப் பூங்காக்கள், இயற்கை உணவு பதப்படுத்தும் மண்டலம் மற்றும் தயார் நிலையில் உள்ள தொழிற்கூடங்கள் (plug-and-play) ஆகியவற்றை அமைத்திடதிட்டமிடுவதற்கான விரிவான ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இந்தப் பெருவழியில் முழுமையான வளர்ச்சியை அடைய, தளப்பரப்புக் குறியீடும் (FSI) உயர்த்தப்படும்.

    திட்ட அனுமதி, கட்டடம் கட்டுதல்,மனைகள் ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கும் நடைமுறையை துரிதப்படுத்துவதற்காக சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம், நகர் ஊரமைப்பு இயக்ககம், பெருநகர சென்னை மாநகராட்சி, உள்ளூர் திட்டக் குழுமங்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளால் ஒற்றைச் சாளர முறை இந்த ஆண்டில் செயல்படுத்தப்படும்.

    பிரதம மந்திரி வீட்டுவசதித் திட்டத்திற்காக (நகர்ப்புரம்) 3,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    இம்மதிப்பீடுகளில் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித் துறைக்கு 8,737.71 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக