வெள்ளி, 25 மார்ச், 2022

தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை: அண்ணாமலை

 மின்னம்பலம் : மத்திய அரசின் திட்டங்களை முழுமையாக செயல்படுத்தினாலே போதும், தமிழகத்திற்கு பட்ஜெட் தேவையில்லை என்று பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
'மக்களை ஏமாற்றிய திமுக பட்ஜெட்' என்ற தலைப்பில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பாஜக சார்பில் இன்று(மார்ச் 25) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பாஜக மூத்த தலைவர்கள் ஹெச்.ராஜா, திருப்பதி நாராயணன், கருநாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 700க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டத்தில் 'தாலி இங்கே தங்கம் எங்கே', 'ஆயிரம் ரூபாய் என்னாச்சி' போன்ற பதாகைகளை கைகளில் ஏந்திக்கொண்டு பாஜகவினர் திமுக அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, “ஆட்சியில் இருப்பவர்கள் சொல்லும் வாக்குறுதி முக்கியமானது. நிறைவேற்ற சாத்தியமே இல்லாத வாக்குறுதிகளை தேர்தல் நேரத்தில் அறிவித்து ஆட்சிக்கு வந்துவிட்டது திமுக. சொன்ன வாக்குறுதிகளையும் திமுக அரசு நிறைவேற்றவில்லை. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு எண்ணிக்கையை சொல்கின்றனர். ஒரு அமைச்சர் 300 என்கிறார், மற்றொரு அமைச்சர் 292 வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டோம் என்கிறார். மேடையில் உட்கார்ந்து கொண்டு அவர்களின் வாய்க்கு வந்ததை சொல்கின்றனர்.

உண்மையில் நகை கடன், கல்விகடன் தள்ளுபடி இல்லை. பெட்ரோல் விலை குறைப்பை காணோம், சமையல் சிலிண்டர் மானியத்தை காணோம், மகளிருக்கு ரூபாய் ஆயிரத்தை காணோம். அதை எல்லாம் தாண்டி இந்த அரசு கோயில்கள் மீது பற்று இருப்பதாக காட்டி கொள்கிறது.

பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.36 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து நிதியமைச்சர் பேசும்போதும் கடந்த ஆண்டை விட 4 ஆயிரம் கோடி அதிகமாக ஒதுக்கி சாதனை செய்திருப்பதாக கூறியிருக்கின்றார். இந்த 36,000 கோடி ரூபாயில் 84 சதவீதம் அங்கு பணியாற்றக்கூடிய ஆசிரியர்களுக்கு ஊதியமாக செல்கிறது. அதாவது 31 ஆயிரத்து 10 கோடி ரூபாய் ஆசிரியர்களுக்கு ஊதியமாகச் செல்கிறது. மிச்சமிருக்கக்கூடிய 16 சதவீதத்தில் சீருடை, புத்தகங்கள் மற்றும் பள்ளிகளுக்குக் கொடுக்கக்கூடிய தொகை. தமிழகத்தில் நிறைய பள்ளிகளில் கழிப்பறை கிடையாது, பல கட்டிடங்கள் பாழடைந்த நிலையில் உள்ளது. அண்மையில் கூட, நாகர்கோவில், மதுரையில் மழைக்காலத்தில் கட்டிடங்கள் இடிந்துவிழுந்த சம்பவங்கள் நடந்தன.

அரசுப் பள்ளி உண்மையாகவே முன்னேறி, நம்முடைய மக்கள் தனியார் பள்ளிக்குச் செல்லாமல், அரசுப் பள்ளிகளுக்குச் சென்று, அங்கு படித்து பெரிய ஆட்களாக வருவதற்காக இந்த பட்ஜெட்டில் எதுவுமே கிடையாது.

ஏனென்றால், தனியார் பள்ளிகளை ஊக்குவிக்கத்தான் இந்த அரசு இருக்கிறதே தவிர, அரசுப் பள்ளியை இழுத்துமூடும் அளவுக்குத்தான் இந்த அரசின் ஒவ்வொரு பட்ஜெட்டும் இருக்கிறது. புலியை பார்த்து பூனை சூடு போட்டுக் கொண்டதுபோல், புலியாக இருக்கக் கூடிய பிரதமரை பார்த்து பூனையாக இருக்கக் கூடிய தமிழக முதல்வர் மற்றும் நிதியமைச்சர் சூடு போட்டுக் கொள்கிறார்கள். காழ்ப்புணர்ச்சி காரணமாக பள்ளிகளில் நடைபெறும் நீட் பயிற்சியை நிறுத்திவிட்டு, மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவதை தடை செய்து, அதன்மூலம் நீட் தேர்வு சரியில்லை என்று சொல்கின்றனர்” என்று குற்றம்சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், “தாலிக்கு தங்கம் என்ற அற்புதமான திட்டத்தை இழுத்து மூடிவிட்டு, அரசு பள்ளியில் படித்து கல்லூரி செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கப்படும் என்கிறார்கள். அப்படியென்றால் கல்லூரி மாணவிக்கு மூன்று வருஷத்துக்கு ரூ. 36 ஆயிரம் மட்டுமே கிடைக்கும். இதுவே தாலிக்கு தங்கம் திட்டத்தின் கீழ் பள்ளி படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.65 ஆயிரமும், பட்ட படிப்பை முடித்தவர்களுக்கு ரூ.90 ஆயிரமும் வழங்கப்பட்டது. இதற்கு இவர்கள் சொல்லும் காரணம் விசித்திரமாக உள்ளது.

ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால், இதை தமிழக பட்ஜெட் என்பது சொல்வதற்கு பதிலாக, கோபாலபுரத்தைச் சேர்ந்த அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, செந்தில் பாலாஜி, பிடிஆர் ஆகிய நான்கு பேரை சமாளிப்பதற்கு போட்டிருக்கக் கூடிய பட்ஜெட். இவர்களை திருப்திப்படுத்த வேண்டும் என்பதற்காக போடப்பட்ட பட்ஜெட். அமைச்சர் பிடிஆரின் சொந்த துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நிதித் துறைக்கு போன வருடம் 104 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், இந்த வருடம் ரூ.600 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால், மாற்றுத் திறனாளிகளுக்கு கடந்த வருடம் 34 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்ட நிலையில், இந்தாண்டு 4 கோடி ரூபாய் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளது. எல்லாத்தையும் சட்டப்பேரவையில் சொல்கிற பிடிஆர், இந்தியாவிலேயே அதிக கடன் வாங்கும் மாநிலத்தில் தமிழகம் முதலிடத்தில் இருக்கிறது என்பதை மட்டும் ஏன் சொல்லவில்லை” என்று கேள்வி எழுப்பினார்.

தொடர்ந்து பேசிய அவர், ”பூனை என்னதான் கனவு கண்டாலும் புலிக்கு நிகராக முடியாது என்பதை முதல்வரும், நிதியமைச்சரும் புரிந்துக் கொண்டு திருந்த வேண்டும். மத்திய அரசுடன் இணைந்து, அவர்களின் திட்டத்தை முழுமையாக செயல்படுத்தினாலே போதும், தமிழகத்திற்கு பட்ஜெட்டை போட வேண்டாம்” என்று தெரிவித்துள்ளார்.

-வினிதா
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக