வியாழன், 17 மார்ச், 2022

புகாரி ராஜாவும் தெருப்பாடகர்கள் மயில்சாமி சத்தியா காதல் கதையும்

 Buhari Raja  : மிகவும் வருத்தத்தோடே இதனை பதிவு செய்கிறேன்..
ஜர்னலிசம் பொறுத்தவரை காண்டாக்ட்களை சேகரிப்பதும், மெயிண்டெயின் செய்வதும் ஒரு கலை என்பதை எனக்கு முந்தைய அண்ணன்களும், ஆசிரியர்களும் , விகடன் மாணவப்பத்திரிகையாளராக இருந்த போது கற்றுக்கொடுத்தது.எல்லா தகவல்களும் அவர்களிடம் இருக்கும் ,ஆனால் அசைமெண்ட் குடுத்து ,அதற்கு நாம் எவ்வாறு தயார்படுத்திக்கொள்கிறோம் என பரிட்சை வைப்பார்கள், எந்த அளவுக்கு தேடுகிறோம் என்பதனை பொறுத்து,முடியாதபட்சத்தில் அவர்களே யாரை அணுக வேண்டுமென வழிவகுத்துக்கொடுப்பார்கள்.


இங்கே யாரும் வானத்துல இருந்து தானாகவே எல்லாவற்றையும் எடுத்துக்கொள்ள முடியாது,அவரவர் தேடுதலின் பொருட்டு , நண்பர்கள் மற்றும் முகம் தெரியாத,முன் பின் தெரியாதவர்களின் நம்பிக்கையின் பொருட்டே இன்னார் இன்னாரென ஒரு தொடர்பு கிடைக்கும்,செய்தியாக்குவதை விட சுவாரஸ்யமனாது செய்திக்கான நபரை தேடி அடைவதென்பது. என் நண்பர்கள் ,அண்ணன்கள் யார் எதாவது காண்டாக் கேட்டால் மறுபேச்சு எதுவுமில்லாமல் குடுத்துவிடுவேன் அதே தான் அவர்களும் எனக்கு செய்வார்கள்.மீடியாவை விட்டு வெளியே போயி இஞ்சினியரிங்கில் வேலை பார்த்தபோது இது மிகப்பெரிய உதவியாக இருந்தது.
சேனல் வீடியோ பார்க்கிற பெரும்பாலானோர் கேட்பது எப்படி இவர்களை எல்லாம் தேடிக்கண்டுபிடிக்கிறீங்க என்பது தான். இது மாணவப்பத்திரிகையாளர் காலத்தில் விகடன் கத்துக்குடுத்தது தான். சேனல் ஆரம்பகாலகட்டத்தில் இருந்து என் வீடியோக்களை பார்த்து அவர்களுடைய காண்டாக்ட் எண் கேட்டு behindwoods, indiaglits,  galataa என பெரிய நிறுவனங்களிலிந்து கேட்டிருக்கிறார்கள், வெறும் நூறு இருநூறு பேர் பார்க்கிற இந்த வீடியோக்கள் அவர்கள் மூலமா அதில் இருக்கிற விசயம் பெரிய அளவில் போய்ச்சேருமே என்கிற விதத்தில் கேட்கும்போது குடுத்துவிடுவேன்..
எப்போ அது தப்பென உரைக்க ஆரம்பித்தது என்றால். ஒரு வீடியோவிலே சம்பந்தப்பட்ட நபருடைய தொலைபேசி எண்ணையே இணைத்திருந்தும் அந்த வீடியோவையே பார்க்காமல் , நம்ப்ர் தரமுடியுமா என கேட்டது ஆச்சர்யமாகவும் அபத்தமாகவும் இருந்தது. “ என்கிட்ட பேசுன அஞ்சு நிமிஷத்துல, வீடியோவோட நாலாவது நிமிஷம் வரைக்கும் வீடியோ பார்த்திருந்தாலே நம்பர் எடுத்திருக்கலாமே பிரதர் என்றால், சாரி பிரதர் யாரும் டீம்ல பார்க்கல என கூலாக பதில் சொன்னார்கள்.
இன்னும் குறிப்பிட்டு சொல்லவேண்டுமென்றால்,கோத்தகிரி செல்வி அக்காவை பேட்டி எடுக்க விரும்பிய behindwoods channel , நாங்கள் வீடியோ எடுத்து அவர்கள் குடும்பத்திற்கு உதவலாம் இருக்கிறோம் என்றார்கள், ஏற்கனவே அகரம்ல பண்ணிட்டாங்க பிரதர், இப்போ தேவை எதும் இருக்காது என முடித்துவிட்டேன். அப்படியே ஜார்ஜுக்கு போன் செய்து (ஜார்ஜ் தான் அந்த வீடியோவை பதிவாக்கியவர் என தெரியாமல்) ஏற்கனவே எங்க டீம் மூலமாக செல்வி அக்காவிற்கு அகரம் மூலம் உதவிகள் ஏற்பாடு செய்திருக்கிறோம், அவர்களை வீடியோவாக்க உதவி செய்ய முடியுமா என கேட்டிருக்கிறார்கள்.
மேட்டுப்பாளையம் மயில்சாமி தம்பதியினரை எனக்கு அறிமுகப்படுத்தியது ஜார்ஜ் தான், அதுவும் எப்படியென்றால் அவசர வேலையாக கோத்தகிரியிலிருந்து மேட்டுப்பாளையம் போக இருந்த ஜார்ஜ் அவர்களை பார்த்து, அன்று நாள் முழுதும் அவர்களோடு பயணித்து உருவாக்கிய தொடர்பு அது. சமீபத்திய பருத்தி வீரன் விமல்ராஜை நான் சந்தித்ததும் அப்படித்தான். காலை ஆறுமணியில இருந்து பதினோரு மணி வரைக்கும் கறிக்கடையில நின்னு அதுக்கு பிறகு  ,அவரிடம் போன் இல்லாத காரணாத்தால் அவர் வேலை பார்க்கிற இடத்திற்கு பத்து நாட்களாக தொடர்ச்சியாக எதாவது ஒரு நேரத்தில் பார்த்திடலாம் என காத்திருந்து  கண்டுபிடித்தவர்தான் விமல்ராஜ், ஆனால் பெரிய நிறுவனத்தில் வருகிற அழைப்பெல்லாம், இங்க இருந்து பேசுறோம் நம்பர் கிடைக்குமா என அண்ணனுக்கு ஒரு ஊத்தாப்பம் அளவில்  முடித்துவிடுவார்கள்,ஒவ்வொரு செய்திக்கு பின்னும் , செய்தியாக்க முயல்கிறவரை பெரிய உழைப்பு இருக்கிறது, காண்டாக்ட்களை தேடி எடுக்க அதற்கென தனி துறைகளில் வேலைபார்ப்பவர்களுக்கு தேடுதல் என்பதோ அல்லது களத்தில் இருந்து தேடுவது என்பதோ காணாக்கிடைக்காத விசயம் என்பது  வருத்தத்திற்குரியதாகவே இருக்கிறது.
வெறும் ஐநூறு பார்வையாளரோ ஐயாயிரம் சப்ஸ்கிரைபர்களோ அது எனக்கு பிரச்சனை இல்லை, என் மன அமைதிக்காகவும், பிடித்தமான ஒரு வேலை என்பதாலுமே அதில் இயங்குகிறேன், இங்கு வலியது தான் பிழைக்கும் என யாரேனும் சொன்னாலும் எனக்கது பிரச்சனையும் அல்ல. வலியது பிழைக்கும், எளியது வாழும்.
பிழைத்தல் வேறு ,வாழ்தல் வேறு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக