வெள்ளி, 25 பிப்ரவரி, 2022

Ex. Min ஜெயக்குமார் கைதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம்

 தினத்தந்தி : முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது செய்யப்பட்டதை கண்டித்து வரும் 28-ம் தேதி அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக ஓபிஎஸ்-இபிஎஸ் கூட்டாக அறிவித்துள்ளனர்.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின்போது ராயபுரம் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் கள்ள ஓட்டு போட முயன்றதாக தி.மு.க. பிரமுகரை அ.தி.மு.க.வினர் பிடித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் முன்னிலையில் அரைநிர்வாணப்படுத்தி தாக்கினர்.


 இதற்கிடையே, தி.மு.க. பிரமுகரை  தாக்கியது தொடர்பாக, முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் உள்பட 40 பேர் மீது தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்குப் பின் போலீசார் ஜெயக்குமாரை கைது செய்து வரும் மார்ச் 7-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைத்தனர்.
 
இதற்கு கண்டனம் தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் தமிழகம் முழுவதும் வரும் 28-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்த இருப்பதாக கூட்டாக அறிவித்துள்ளனர்.

இதுகுறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

 ஆளும் திமுகவின் கையாளாகாத் தனத்தையும், திமுக அமைச்சர்களின் அராஜகத்தையும், மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசின் செயல்பாடுகளையும் மக்களுக்கு தெளிவாக புரிகின்ற வகையில் விளக்கிக் கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை கைது செய்து நீதிமன்றக் காவலில் வைத்திருப்பதைக் கண்டிக்கிறோம்.

பிணையில் வரமுடியாக அளவிற்கு தொடர் வழக்குகளை அவர் மீது பதிய முயற்சிக்கும் திமுக அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் வரும் 28-ம் தேதி காலை 10.30 மணியளவில் தமிழகம் முழுவதும் வருவாய் மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் கண்டன ஆப்பாட்டங்கள் நடைபெறும்.

இவ்வாறு அதில் குறிப்பிட்டிருந்தது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக