வியாழன், 24 பிப்ரவரி, 2022

உலகப் பொருளாதாரம் மிகுந்த அச்சத்தில் இருக்கிறது.. உக்கிரேன் ரஷ்ய போர்

 Karthikeyan Fastura  :  உக்ரைன், ரஷ்யா போர் சூழல் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்திருக்கிறது.
அதிபர் புட்டின் படைகளையும் ஆயுத தளவாடங்களையும் உக்ரைன் பக்கம் நிறுத்தியிருக்கிறார். அணுவாயுதம் உள்ளிட்ட அனைத்து விதமான ஏவுகணைகளையும் தயார் நிலையில் வைத்திருக்கிறார்கள்.
உக்ரைன் நேற்று நள்ளிரவு 12 மணி முதல் எமர்ஜென்சி அமல்படுத்தி இருக்கிறார்கள்.
உக்ரேனிய மக்கள் ஆயுதம் ஏந்தி கொள்ளவும் அனுமதி அளித்து சட்டத்திருத்தம் கொண்டு வந்திருக்கிறார்கள்.
 ஆனால் இந்தப் போரினை நிறுத்த அனைத்து விதமான நடவடிக்கைகளையும் பேச்சுவார்த்தைகளையும் ஒரு பக்கம் நடத்திக்கொண்டு மறுபக்கம் ஐரோப்பா நாடுகளில் உக்ரைனுக்கு ஆதரவாக சில நாடுகளும் அமெரிக்காவும் தங்களது படைகளை தயார்ப்படுத்தி வைத்திருக்கிறார்கள்.


உக்ரைனில் இரண்டு விதமான மக்கள் இருக்கிறார்கள்.
பெருவாரியான மக்கள் ஆதரவாக இருந்த போதிலும், சிலர் ரஷ்யாவுடன் இணைய விரும்புகிறார்கள். அவ்வாறு இணைய விரும்புபவர்கள் ஒரு மக்கள் படையைக் நடத்துகிறார்கள். ரஷ்யாவின் ராணுவமும் அவர்களுக்கு ஆதரவளித்து வருகிறது.

இந்த நிலையில் உலகப் பொருளாதாரம் மிகுந்த அச்சத்தில் இருக்கிறது. அனைத்து சந்தைகளும் மேலேயும் செல்லாமல், கீழேயும் செல்லாமல் பக்கவாட்டில் மெதுவாக நகர்ந்து வருகிறது. நியாயமாக இந்த வாரமே மேலே வந்து இருக்க வேண்டும். ஆனால் இந்தப் போர் சூழல் அதனை தடுத்திருக்கிறது.
சர்வதேச சந்தையில் குருடாயில் மற்றும் இயற்கை வாயுவின் விலை ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை அடைந்து வருகிறது. போர் பதட்டம் குறைந்தால் மட்டுமே விலை குறைவதற்கான வாய்ப்பு இருக்கிறது.
இந்தியாவில் தேவைக்கும் அதிகமாகவே பெட்ரோல் டீசல் விலை ஏற்றப்பட்டு விட்டதால், இனியும் ஏற்றினால் பணவீக்கம் அதிகரிக்கும் என்பதால் கடந்த மூன்று மாதங்களாக விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. ( உ.பி தேர்தல் காரணம் அல்ல) முன்பு குரூட் ஆயில் விலைக்கும் நமது பெட்ரோல் விலைக்கும் சம்பந்தமே இல்லாமல் இருக்கும். இன்று குருடாயில் விலை நமது பெட்ரோல் விலைக்கு நிகராக வந்து அதையும் தாண்டி சென்று கொண்டிருக்கிறது என்பதால் ரூபாயின் மதிப்பு கணிசமான அளவு கூடியிருக்கிறது.

உண்மையில் இப்பொழுது தான் மிக மிக ரிஸ்கான சூழலில் இந்திய பொருளாதாரம் இருக்கிறது. இதுநாள் வரை இந்திய பொருளாதாரத்தின் காயங்களை, பங்குச்சந்தை ஏற்றத்தை காட்டி பூசி மழுப்பி வந்திருக்கிறோம். போர் முழு அளவில் நடந்தால் இவை எதுவும் உதவாது. காயங்கள் வெளியே தெரிய ஆரம்பிக்கும். வலி தாங்காமல் இந்திய பொருளாதாரம் வாய்விட்டு கத்தவும் செய்யலாம்.
ஆகவே எந்த விதத்திலும் ரஷ்யா உக்ரைன்  போர் நடந்து விடக்கூடாது என்று சங்கிகள், ராமபக்தர்கள் தங்கள் கடவுள்களிடம் மனதார வேண்டிக்கொள்ளுங்கள்.  நாமும் இயற்கையிடம் வேண்டிக்கொள்வோம். ஏனென்றால் போர் சாமானியர்கள் யாருக்கும் நன்மை தரப்போவதில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக