திங்கள், 7 பிப்ரவரி, 2022

தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம்: முதல்வர் ஸ்டாலின் திட்டவட்டம்

 Mathivanan Maran -   Oneindia Tamil :  சென்னை: தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, காணொலி வாயிலாக, கோவை மாவட்டத்தில் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:
நடைபெற இருக்கிற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு, "உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி" என்ற முழக்கத்தோடு நாம் தேர்தலைச் சந்திக்கிறோம்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்கள் தங்கள் விடியலுக்கும் எதிர்காலத்துக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி அமைந்தால்தான் சரியாக இருக்கும் என்று தொலைநோக்குப் பார்வையுடன் வாக்களித்தார்கள்.


பத்தாண்டுகாலம் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியை வீழ்த்தி நம்மைத் தமிழ்நாட்டு மக்கள் ஆட்சியில் அமர வைத்தார்கள்.
ஒரு ஆட்சி என்பது ஐந்தாண்டு காலம். அந்த ஐந்தாண்டு காலத்துக்குள் பொதுமக்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றித்தர வேண்டும்.
இதுதான் நல்லாட்சியின் இலக்கணம்.
ஆனால், ஆட்சிக்கு வந்து இன்னமும் ஓராண்டு காலம் கூட நிறைவடைவதற்கு முன்னரே, கொடுத்த வாக்குறுதிகளில் முக்கால் பங்குக்கு மேல் நிறைவேற்றிக் கொடுத்த ஆட்சியைத் தலைசிறந்த ஆட்சி என்றுதானே சொல்ல முடியும்.
அத்தகைய தலைசிறந்த ஆட்சிக்கு இலக்கணமாக நமது திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி நடந்து வருகிறது.

பெரும்பான்மை பலத்தால் சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றதைப் போல, உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால்தான் நாம் நிறைவேற்றும் திட்டங்களை மக்களுக்கு முழுமையாகக் கொண்டு போய்ச் சேர்க்க முடியும். அந்த எண்ணத்தோடுதான் 'உள்ளாட்சியிலும் தொடரட்டும் நம்ம ஆட்சி' என்ற முழக்கத்தை நாம் முன்னெடுத்திருக்கிறோம். கொரோனா காலக் கட்டுப்பாடுகள் இருப்பதால் உங்களை நேரில் சந்தித்து வாக்கு கேட்க முடியாத சூழல் இப்போது இருக்கிறது. அதனால்தான் காணொலி மூலமாக இக்கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
காணொலி மூலம் நடைபெறும் தேர்தல் பிரச்சாரத்தின் முதல் கூட்டம் நம்முடைய செந்தில் பாலாஜி சொன்னதுபோலவே கோவையில் நடைபெறுகிறது. வழக்கம் போலவே மிகப் பிரம்மாண்டமாகவும் - எழுச்சியோடும் இக்கூட்டத்தை மாண்புமிகு அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் ஏற்பாடு செய்துள்ளார். சுமார் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் இருந்து கழகத் தோழர்களும், பொதுமக்களும் இந்தக் கூட்டத்தில் பங்கெடுத்து இருக்கிறார்கள்.

நாம் நேருக்கு நேராகச் சந்திக்கவில்லை என்றாலும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்கவில்லை என்றாலும் - நாம் ஒரு தாய்ப் பிள்ளைகள் என்ற உணர்வால் - பாசத்தால் - அன்பால் நீங்கள் வேறு நான் வேறு இல்லை என்கிற உணர்வோடுதான் இந்த மேடையில் நான் நின்றுகொண்டு இருக்கிறேன். தமிழ்நாட்டு உழவர் வாழ்வுக்காகவும் - உரிமைக்காகவும் தனது வாழ்நாளின் இறுதி வரையிலும் உழைத்தவர்தான் 'உத்தமத் தியாகி' நாராயணசாமி நாயுடு அவர்கள். அவரது பிறந்தநாளான இன்று, இந்தக் கூட்டம் நடப்பது பொருத்தமானது.

கோவை மாவட்டம், அவிநாசி வட்டம் வையம்பாளையம் என்கிற சிறிய ஊரில் பிறந்து - தமிழ்நாட்டின் அனைத்து உழவர்களின் தலைவராக உயர்ந்து கம்பீரமாக நின்றவர்தான் மரியாதைக்குரிய நாராயணசாமி நாயுடு அவர்கள். பச்சைத் துண்டுக்கு இந்த நாட்டில் ஒரு மரியாதையையும் கம்பீரத்தையும் உருவாக்கிக் கொடுத்தவர் அவர்தான். நடு வீட்டில் திருடன் மாட்டிக்கொண்டது போல அதிமுகவினர் மாட்டிக்கொண்டார்கள்..

கிண்டலடித்த ஸ்டாலின் -  நடு வீட்டில் திருடன் மாட்டிக்கொண்டது போல அதிமுகவினர் மாட்டிக்கொண்டார்கள்.. கிண்டலடித்த ஸ்டாலின் உழவர் இயக்கம் உழவர் இயக்கம் தமிழ்நாட்டில் மட்டுமில்லாது, இந்தியா முழுமைக்கும் உழவர்கள் இயக்கத்தை உருவாக்குவதற்கு எல்லா முயற்சிகளையும் எடுத்தவர் அவர். நாராயாணசாமி நாயுடு அவர்கள் முன்னெடுத்த போராட்டத்துக்கு மதிப்பளித்து 1989-ஆம் ஆண்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சராக ஆனபிறகு, உழவர்கள் செலுத்த வேண்டிய கட்டணத்தில் சலுகை என்று அறிவிக்காமல், இனிக் கட்டணமே செலுத்தத் தேவையில்லை என்கிற நிலையை உருவாக்கினார்.

உழவர்களுக்கு இலவச மின்சாரம் என்று அறிவித்தார் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள். மரியாதைக்குரிய நாராயணசாமி நாயுடு அவர்களின் மிக முக்கியமான கோரிக்கைகள் நான்கு. முதல் கோரிக்கை - உழவர் பெருமக்களுக்குக் கட்டணம் இல்லாமல் மின்சாரம் வழங்க வேண்டும். -

இதனை வழங்கிய ஆட்சி நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி. இரண்டாவது கோரிக்கை - கட்ட இயலாத நிலையில் உள்ள உழவர்களின் வங்கிக் கடனைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.
1989 ஆட்சியாக இருந்தாலும் - 1996 ஆட்சியாக இருந்தாலும் - 2006 ஆட்சிக் காலமாக இருந்தாலும் - இப்போதும் - உழவர்களின் கடனைத் தள்ளுபடி செய்த ஆட்சிதான் நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியாகும்.

வேளாண் பொருட்களுக்கு அடிப்படை விலையை அரசு நிர்ணயம் செய்ய வேண்டும் என்பது அவரது மூன்றாவது முழக்கம். அதற்காகத்தான் ஒன்றிய அரசால் கொண்டுவரப்பட்ட மூன்று வேளாண் சட்டங்களை நாம் கடுமையாக எதிர்த்தோம். அந்தக் கோரிக்கையை இறுதி வரை வலியுறுத்தினோம். வேளாண்மையை ஒரு தொழிலாக அங்கீகரிக்க வேண்டும் என்பது அவரது நான்காவது முழக்கம். தொழிலாக மட்டுமல்ல; நம்முடைய வாழ்க்கைமுறையாக - பண்பாடாக மாற்றுவதற்காகத்தான் வேளாண்மைத் துறைக்கு எனத் தனி நிதிநிலை அறிக்கையை நாம் தாக்கல் செய்துள்ளோம்.

கழக ஆட்சியில்தான் நெல்லுக்கு ஊக்க விலை தரப்பட்டது! கோவைக்கான திமுக ஆட்சி வழங்கியவை கோவைக்கான திமுக ஆட்சி வழங்கியவை திமுக ஆட்சியில்தான் கரும்புக்கு உரிய விலை தரப்பட்டது! உணவுதானியக் கழகம் உருவாக்கப்பட்டது! ஏராளமான உணவுதானியக் கிடங்குகள் அமைக்கப்பட்டன! ரேசன் விநியோகம் முறைப்படுத்தப்பட்டது! வேளாண்மை - உணவு ஆகிய இரண்டு துறைகளையும் இரண்டு கண்களைப் போல இணைத்துச் செயல்பட்ட அரசுதான், கழக அரசு. நிலமற்ற ஏழை வேளாண் தொழிலாளர்களுக்கு நிலம் வழங்குவேன் என்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.

அந்த அடிப்படையில் நிலமும் வழங்கப்பட்டது. 1 லட்சத்து 89 ஆயிரத்து, 719 ஏக்கர் நிலத்தை - 1 லட்சத்து 50 ஆயிரத்து 159 பேருக்கு வழங்கிய ஆட்சிதான் கழக ஆட்சி. வேளாண் துறையைப் பொறுத்தவரையில் 'உத்தமத் தியாகி' திரு. நாராயணசாமி நாயுடு அவர்களின் கனவுகளை நிறைவேற்றும் ஆட்சியாகத்தான் கழக அரசு செயல்பட்டு வருகிறது. எனவே இந்தக் கூட்டத்தின் வாயிலாக, அவருக்கு நான் எனது வணக்கத்தை இக்கூட்டத்தின் வாயிலாக தெரிவித்துக் கொள்கிறேன்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் வாழ்ந்த ஊர் கோவை. அந்த வகையில் தலைவர் கலைஞரின் வாழ்க்கை வரலாற்றோடு இணைந்த ஊர் இந்தக் கோவை. கோவையில் இந்தியாவின் முதல் வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை - அவிநாசி சாலையில் பாலம், சிறுவாணிக் கூட்டுக்குடிநீர்த் திட்டம், பொள்ளாச்சி - தாராபுரம் சாலையில் பாலம், உடுமலைபேட்டை குமாரலிங்கம் சாலை பாலம், அமராவதி ஆற்றுப்பாலம், கிராஸ்கட் சாலை மேம்பாலம், பில்லூர் அணையை ஆதாரமாகக் கொண்டு கோவை மாநகருக்கான கூட்டுக்குடிநீர் திட்டம், பில்லூர் அணை இரண்டாம் கட்டக் குடிநீர்த் திட்டம், இப்படி என்னால் நாள் முழுக்க இந்தக் கோவை மாவட்டத்துக்காகக் திமுக கொண்டு வந்த திட்டங்களை - செய்த சாதனைகளைச் சொல்லிக் கொண்டே போக முடியும்.

பிசி பட்டியலில் கொங்கு வேளாள கவுண்டர்கள் பிசி பட்டியலில் கொங்கு வேளாள கவுண்டர்கள் கோவை பகுதியில் பெருமளவில் வாழும் கொங்கு வேளாளக் கவுண்டர் சமூக மக்களின் கோரிக்கையை ஏற்று அவர்களைப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்த்தது தி.மு.க. என்பதை யாரும் மறந்திருக்க மாட்டீர்கள். அருந்ததியினர் இன மக்களுக்கு உள் இடஒதுக்கீடு வழங்கியதும் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிதான் என்பதும் உங்கள் எல்லாருக்கும் தெரியும்.

இப்படிப்பட்ட சாதனைச் சரித்திரத்துக்குச் சொந்தக்காரர்கள் நாம் என்பதை தலைநிமிர்ந்து நான் இந்தக் கூட்டத்தின் வாயிலாகக் கோவை மாவட்ட மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். கடந்த பத்தாண்டுகாலத்தில் ஆட்சியில் இருந்த ஒரு கட்சியால் இப்படிக் கோவை மாவட்டத்துக்குச் செய்த சாதனைகளைச் சொல்ல முடியுமா? இப்போ ஆட்சிப் பொறுப்புக்கு வந்த பிறகு நாம் செய்திருக்கிற சாதனைகளைப் பட்டியலிடுகிறேன். கோவை மாவட்டத்துக்கு உட்பட்ட நகராட்சி, பேரூராட்சியைச் சேர்ந்த 24 ஆயிரம் பேருக்கு பட்டா, முதியோர் உதவித் தொகை வழங்கப்பட்டிருக்கிறது.

10 லட்சத்து 22 ஆயிரத்து 715 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 4 ஆயிரம் ரூபாய் கொடுத்திருக்கிறோம். 27 ஆயிரத்து 295 உழவர்களுக்கு பயிர்க்கடனும் நகைக்கடனும் தள்ளுபடி செய்துள்ளோம். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 620 பேர் உயிரைக் காப்பாற்றியிருக்கிறோம். 128 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டிருக்கிறது. பஞ்சுக்கான 1 விழுக்காடு நுழைவு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. 'உங்கள் தொகுதியில் முதலமைச்சர்' திட்டத்தின்கீழ் 24 ஆயிரத்து 369 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மகளிர் சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த 12,816 உறுப்பினர்களுக்குக் கடனுதவி வழங்கப்பட்டிருக்கிறது. 2,076 உழவர்களுக்கு இலவச மின் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது. 10 லட்சத்து 50 ஆயிரத்து 767 குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசு வழங்கப்பட்டிருக்கிறது.

மகளிர்களுக்கு பேருந்தில் இலவசப் பயணம் - ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறோம். பெட்ரோல் விலை குறைப்பு பெட்ரோல் விலை குறைப்பு பெட்ரோல் விலையையும் லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்திருக்கிறோம். கோவையில் நடந்த முதலீட்டாளர் மாநாட்டில் 34,723 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 52 நிறுவனங்களுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகி இருக்கிறது. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்க்கு சம்பளம் உயர்த்த அரசாணை வெளியிடப்பட்டு இருக்கிறது. காந்திபுரத்தில் 200 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செம்மொழிப் பூங்கா அமைப்பட இருக்கிறது. கூடலூர், கருமத்தம்பட்டி, மதுக்கரை ஆகிய மூன்று பேரூராட்சிகள் நகராட்சிகளாகத் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

கோவை விமான நிலைய விரிவாக்கத்துக்கு 1,132 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டிருக்கிறது. பொதுப்பணித்துறையில் கோவையைத் தலைமையகமாகக் கொண்ட மண்டலம் உருவாகி உள்ளது. கோவை மாநகரத்தின் வளர்ச்சியை முறைப்படுத்த கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் ஏற்படுத்தப்பட உள்ளது.- இந்தப் பட்டியல் போதுமா? இல்லை இன்னும் சொல்லட்டுமா? நேரத்தின் அருமை கருதி முத்தாய்ப்பான சாதனைகள் சிலவற்றை மட்டும்தான் சொல்லியிருக்கிறேன். எட்டுமாதக் காலத்தில் இவ்வளவு திட்டங்களையும் நாங்கள் முன்னெடுத்துச் செய்துள்ளோம். எந்த அரசாவது இந்த அளவுக்கு வேகமாகச் செயல்பட்டிருக்கிறதா?

கொரோனா - மழை வெள்ளம் என்று பல இடர்களைத் தாண்டி இவ்வளவு வேகமாகச் செயல்பட்டிருக்கோம். வெளிப்படை தன்மை உறுதி வெளிப்படை தன்மை உறுதி எங்களைப் பொறுத்தவரை நான் முதலில் இருந்து சொல்லி வருவது இதுதான் - இந்த ஸ்டாலினின் அரசு, உங்களின் அரசு - உங்கள் எல்லோருக்குமான அரசு! இது ஒரு கட்சியின் ஆட்சி அல்ல; இனத்தின் ஆட்சி! ஒரு நல்லாட்சி - தலைசிறந்த ஆட்சி எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம்தான் இந்த அரசு. பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களையும் செய்து தருவோம். அதேபோல் ஒரு சாதாரணத் தனிமனிதரின் கோரிக்கையையும் நிறைவேற்றித் தருவோம்.

போன ஆட்சியில் உங்கள் பணத்தைக் கொள்ளையடித்தவர்களைத்தான் பார்த்திருப்பீர்கள். இந்த ஆட்சியைப் பொறுத்தவரையில் மக்களுக்குத் தேவையான திட்டங்களைக் கொடுக்கும் ஆட்சி! கோவை மாநகர் முழுதும் அனைத்துச் சாலைகளும் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் பராமரிக்காமல் விட்டதன் விளைவுதான், இப்போது நகரின் முக்கியச் சாலைகள், குடியிருப்புச் சாலைகள் என எல்லாமே குண்டும் குழியுமாக இருப்பது. உள்ளாட்சித் தேர்தல் முடிந்தவுடன் சாலைகள் அமைக்கப்படும் என்று உறுதியளிக்கிறேன். நீண்டநாட்களாகக் கட்டப்பட்டு வரும் மேம்பாலங்கள் எந்த நிலையில் இருக்கின்ற என உங்களுக்குத் தெரியும். அவை தேதி குறிப்பிட்டு முடிக்கப்படும் என்றும் உறுதியளிக்கிறேன்.

 குடிநீர் இணைப்பு கேட்டு காத்திருப்போருக்கு வெளிப்படைத் தன்மையோடு இணைப்பு வழங்கப்படும். வீடுகட்ட அனுமதி பெற எளிமையான வழிமுறைகள் கையாளப்படும். சிறு குறு தொழில் முனைவோர்க்கு அடிப்படை தேவைகள் பூர்த்தி செய்து கொடுக்கப்படும். வார்டு வாரியாகக் குறைதீர்ப்பு முகாம் மாதம்தோறும் நடத்தப்படும். தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வளரவேண்டும் - அனைத்துத் துறைகளும் வளரவேண்டும் என்பதை மட்டுமே ஒரே நோக்கமாகக் கொண்டு செயல்படும் ஆட்சி நமது ஆட்சி. தமிழ்நாட்டில் மட்டுமல்ல, ஒன்றிய அரசிடமும் நம்முடைய தமிழ்நாட்டுக்கான உரிமைகளைப் போராடியும் வாதாடியும் பெறுகிற இயக்கமாக - ஆட்சியாக திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி இருக்கும். தமிழ்நாட்டின் ஏழை - எளிய மாணவர்களின் மருத்துவக் கல்விக் கனவைச் சிதைப்பதாக நீட் தேர்வு இருக்கிறது.

அரியலூர் அனிதா தொடங்கி பத்துக்கும் மேற்பட்ட மாணவ - மாணவியரை நாம் இழந்தோம். நீட் தேர்வு என்பது பல லட்சம் கொடுத்துப் பயிற்சி மையங்களில் படிக்க வசதி உள்ள மாணவர்களுக்குத்தான் வசதியானது. முதல் ஆண்டு இடம் கிடைக்கவில்லையா? அடுத்த ஆண்டும் லட்சக்கணக்கில் பணம் கட்டிப் பயிற்சி பெறுகிறார்கள். இது எல்லா மாணவ, மாணவியராலும் முடியுமா? ஏழைகளால் முடியுமா? முடியாது. அரசுப் பள்ளியில் படிப்பவர்களால் முடியுமா? முடியாது! நீட் எதிர்ப்பு ஏன்? நீட் எதிர்ப்பு ஏன்? நீட் தேர்வில் இருந்து விலக்கு தர வலியுறுத்தும் மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பினார் என்று தெரிந்ததும் - மறுநாளே - அதாவது, நேற்று அனைத்துக்கட்சிக் கூட்டம் நடத்தினோம்.

அடுத்ததாக, வரும் 8-ஆம் நாள் - அதாவது நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை, தமிழ்நாடு சட்டமன்றம் கூட இருக்கிறது. மீண்டும் அதே மசோதாவை இன்னும் வலிமையோடு நிறைவேற்றப் போகிறோம். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் இரண்டு சட்ட மசோதாக்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்டன. அதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு மதிக்கவே இல்லை; பல மாதம் கிடப்பில் போட்டது. காரணம் எதுவுமே சொல்லாமல் - குடியரசுத் தலைவரால் நிராகரிக்கப்பட்டது. இந்தத் தகவல் தமிழ்நாடு அரசுக்குச் சொல்லப்பட்டும், சட்ட அமைச்சராக இருந்த சி.வி. சண்முகம் அதனை மூடி மறைத்துவிட்டார்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் என்ற முறையில் நான்தான் கேள்வி எழுப்பினேன். "ஒன்றிய அரசில் இருந்து ஏதாவது தகவல் வந்ததா?" "நீங்கள் போய்க் கேட்டீர்களா?" "இப்படியே எத்தனை நாட்கள் நாம் காத்திருப்பது?"- என்று கேட்டேன். "எந்த தகவலும் வரவில்லை"-என்று அன்று சட்ட அமைச்சராக இருந்த சி.வி.சண்முகம் அவர்கள் சட்டமன்றத்தில் சொன்னார். எல்லாவற்றுக்கும் முந்திக் கொண்டு பதில் சொல்லுபவரான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் என்ன சொன்னார் என்றால், "கவர்னருக்கு நாம் அனுப்பத்தான் முடியும். அவரைப் போய் நாம் கேள்வி கேட்க முடியாது"-என்று கையை விரித்தார்.

உண்மை என்னவென்றால், ஒன்றிய அரசு அதனைத் திருப்பி அனுப்பிவிட்டது, அதை வெளியில் சொல்ல வெட்கப்பட்டு மறைத்துவிட்டார்கள். இது சம்பந்தமான ஒரு வழக்கு உயர்நீதிமன்றத்தில் வந்தபோது, ஒன்றிய அரசின் சார்பில் வாதாடிய வழக்கறிஞர், 'நாங்கள் எப்போதோ திருப்பி அனுப்பிவிட்டோமே'-என்று பதிவு செய்தார். அதன்பிறகுதான் உண்மை நமக்குத் தெரிந்தது. 'நடுவீட்டில் திருடன் மாட்டிக்கொண்டதைப் போல' அ.தி.மு.க. மாட்டிக் கொண்டது. அவர்களின் கொத்தடிமைத்தனம் காரணமாக - எல்லாவற்றுக்கும் தலையாட்டிக் கொண்டு இருந்ததன் காரணமாக - அடிமைச் சேவகம் காரணமாக - அன்று நீட் மசோதாவை மீண்டும் நிறைவேற்ற மறுத்தார்கள்.

நூற்றாண்டுகளாக மறுக்கப்பட்ட கல்வி உரிமையை பல போராட்டங்களுக்குப் பிறகு மீட்டு, சில பத்தாண்டுகளாகத்தான் பலரும் படிக்கத் தொடங்கியிருக்கிறார்கள். படித்தால் தானாகத் தகுதி வந்து வாழ்க்கையில முன்னேறிவிடுவார்கள். ஆனால் படிப்பதற்கே உனக்குத் தகுதி வேண்டும் என்று தடுக்கும் பழைய சூழ்ச்சியின் புது வடிவம்தான் நீட்! நாசகார திட்டங்களுக்கு எதிர்ப்பு நாசகார திட்டங்களுக்கு எதிர்ப்பு அதனால்தான் நாம் தொடர்ந்து நீட் தேர்வை எதிர்க்கிறோம்.

மருத்துவப் படிப்புகளில் சேர்வதாலேயே யாரும் மருத்துவர் ஆகிவிட மாட்டார்கள். மருத்துவப் படிப்புகளில் தேர்ச்சி அடைந்தால்தான் டாக்டர் ஆவார்கள். அப்படித்தான் உலகின் தலைசிறந்த டாக்டர்களாக நமது தமிழ்நாட்டு டாக்டர்கள் இருக்கிறார்கள். நீட் தேர்வை மேலோட்டமாகப் பார்க்கக் கூடாது. அதன் முகமூடியைக் கழட்டிப் பார்க்க வேண்டும். வெறுமனே அரசியலுக்காக எதிர்க்கவில்லை. மக்கள் விரோத ஒன்றிய பா.ஜ.க. அரசை எதிர்ப்பதற்கு எத்தனையோ விஷயங்கள் கொட்டிக்கிடக்கின்றன. மக்களுக்கு எதிரான அவ்வளவு செயல்களை அவர்கள் செய்துகொண்டு இருக்கிறார்கள்.

 எனவே நீட் தேர்வை வைத்துதான் அரசியல் நடத்த வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. நீட் தேர்வு என்பதே 2016-ஆம் ஆண்டு பா.ஜ.க. அரசாங்கத்தால் திணிக்கப்பட்டதுதான். அந்தத் தேர்வுக்கு 2016-ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவும் எதிர்ப்பு தெரிவித்தார். அதனால் 2016-17-ஆம் ஆண்டுக்கான தேர்வில் தமிழ்நாட்டுக்கு விலக்கு கிடைத்தது; நான் மறுக்கவில்லை. இதே எதிர்ப்பைத் தொடர்ந்து காட்டி இருந்தால் தேர்வை நடத்தாமல் விட்டிருப்பார்கள். ஆனால், அடிமை அ.தி.மு.க. அரசாங்கம் 2017-18 ஆம் கல்வி ஆண்டில் நீட் தேர்வைத் தலையாட்டி ஏற்றுக் கொண்டதுதான் இவ்வளவு பிரச்சினைக்கும் காரணம்.

இதோ இப்போது நாம் துணிச்சலோடு, ஆளுநர் திருப்பி அனுப்பிய சட்டமசோதாவை மீண்டும் நிறைவேற்றி அவருக்கு அனுப்ப இருக்கிறோம். நீட் எதிர்ப்புல பின்வாங்க மாட்டோம். நீட் மட்டுமல்ல; தமிழ்நாட்டுக்கு விரோதமான திட்டம் எது வந்தாலும் அனுமதிக்க மாட்டோம். மக்களைப் பற்றியே நித்தமும் சிந்திக்கிற திமுக அரசாங்கம் மாநில ஆட்சியை நடத்தி வரும் இந்த மகத்தான நேரத்தில் உள்ளாட்சி அமைப்புகளிலும் நாம் முழுமையான வெற்றியைப் பெற்றால் - கோட்டையில் இருந்து உருவாக்கும் அனைத்துத் திட்டங்களும் - அனைத்து கிராமங்களுக்கும் - நகரங்களுக்கும் செல்லும். அனைத்து வீதிகளுக்கும் வீடுகளுக்கும் போய்ச் சேரும். விடியலில் வரும் சூரியனின் வெளிச்சம் போல, தமிழ் மக்களின் வாழ்வுக்கு ஒளி கொடுக்கும் நம் ஆட்சி உள்ளாட்சியிலும் தொடர வேண்டும்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக