திங்கள், 7 பிப்ரவரி, 2022

தொட்டாலும் தீட்டு பட்டாலும் தீட்டு குளிப்பத்தில் உள்ள கஷ்டம் .. கலைஞரின் மதத்தில் புரட்சி செய்த மகான்

 Arul Prakasam  : ராமானுஜர் –  மதத்தில் புரட்சி செய்த மகான் என்று கலைஞர் தொலைக்காட்சியில்  கலைஞர்  கைவண்ணத்தில் ஒரு தொடர் ஒளிபரப்பானது.!
இந்த தொடரை தெலுங்கில் மொழிப்பெயர்த்து  ஒளிபரப்புவதைப்பற்றி பேச, திருமலை திருப்பதி தேவஸ்தானத்தை சேர்ந்தவர்கள் சிலர் கலைஞரை சந்தித்தார்கள். ஆம், அவர் வீடு தேடி வந்துதான் பார்த்தார்கள்.!
கலைஞர், இந்த தொடர் எழுதபோகிறார் என்றபோதே பல விமர்சனங்கள் வந்தன.! அதற்கு அவரும் மற்றவர்களும் விடை தந்து சற்று அடங்கிய தருணத்தில் இந்த நிகழ்ச்சி பலருக்கு  வெறும்  வாய்க்கு அவல்  கிடைத்ததுபோல் ஆனது.!


எனக்கு இந்த நிகழ்ச்சி அவல் போலல்லாமல், அல்வா போல் இனிமையும் சுவையுமாக இருந்தது. அந்த தொடரை வெகு ஈடுபாட்டுடன் பார்த்த  நேயன் நான். காரணம் சிறுவயதில் இருந்தே தத்துவ நூல்கள் படிப்பதிலும் தத்துவாசிரியர்களை தெரிந்து கொள்வதிலும் ஆர்வம் உடையவன்.
தந்தை பெரியாரை தமிழகம் தந்த மிகப்பெரிய  தத்துவராக கருதுபவன் நான். இந்த ஆர்வம் கூட எனக்கு தந்தை பெரியாரின் தத்துவ விளக்கம் என்ற சிறு நூலை சின்னவயதில் படித்ததிலிருந்துதான்.
பள்ளிப்பாடப் புத்தகத்தில் இந்துமத தத்துவ போதகர்கள்  என்று சங்கரர் – ராமானுஜர் – மத்வர் இந்த மூன்று பெயர்களைத்தான் குறிப்பிடுவார்கள். இம்மூவரும் தென்னகத்தில்  தோன்றியவர்கள்.
சங்கரர் தத்துவம், அத்வைதம்.
மத்வர் தத்துவம் துவைதம்.
ராமானுஜர் தத்துவம், விசிஷ்டாத்வைதம்.
உண்மையில் மூன்றும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவைகள். ஆதிசங்கரர் நிறுவிய அத்வைதத்திற்கு எதிரானதுதான் ராமானுஜர் கொள்கையான் விசிஷ்டாத்வைதம்.!
இந்துமதம் என்பதற்கு குறிப்பிட்ட கொள்கை வடிவம் நெறிமுறைகள் கிடையாது என்பதற்கு இந்த மூவரின் தத்துவ முரண்களே சாட்சிகளாக அமையும்.!
வர்ணாசர முறை, பிறப்பின் அடிப்படையில் பின்பற்றப்பட்டு மக்களை படிநிலையில் அமர்த்தி ஒருவருக்கு ஒருவர் உயர்வு தாழ்ச்சி கற்பித்து மிகக் கடுமையாக பின்பற்றி வந்த காலத்தில் ராமானுஜர் தோன்றினார்.
தாழ்த்தப்பட்டவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட காலத்தில்.., வேதங்களை சூத்திரன் காதாலும் கேட்கக்கூடாது என்று கண்டிப்பு இருந்த காலத்தில்.., ராமானுஜர் சீர்த்திருத்தம் செய்ய விரும்பினார்.!!
அவர் செய்ய முன்வந்த சீர்திருத்தங்கள்தான் என்ன.!?
1. சாதி வேறுபாடின்றி எல்லோரும் கோயிலுக்குள் போக உரிமை உண்டு என்று சொன்னார்.,  
2. வேத மந்திரத்தை அனைத்து சாதியினரும் அறிந்து கொள்ளவும் ஓதவும் தடை கூடாது. அதை அறிந்து ஓதி எல்லோரும் வைகுண்ட மோட்சத்தை அடையலாம் என்று சொன்னார்.!
சொன்னது மட்டுமின்றி அவர் காலத்தில் நடைமுறைப்படுத்தவும் செய்தார்.
தன்னுடைய குருவாக பார்ப்பனரல்லாத திருக்கச்சி நம்பிகளை மதித்தார்.!
காவிரியில் குளித்துவிட்டு வில்லிதாசன் என்னும் தாழ்த்தப்பட்டவரின் தோளில் கைபோட்டுக் கொண்டு திருவரங்கக் கோயிலுக்குத் திரும்பி வருவாராம்.!
 

பார்த்தாலும், தொட்டாலும் தீட்டு என்று பலமுறை குளிப்பதில் பார்ப்பனருக்கு எவ்வளவு கஷ்டங்கள் தெரியுமா என்று சொல்லும் பழமைவாதிகள் பெரியவாக்கள் பற்றி தெரிந்த நமக்கு ராமானுஜர் சரித்திரம் அதிசயமாகத்தான் இருக்கிறது.!
மதத்தை எதிர்க்காமல் சாதி வேற்றுமையை ஒழிக்க, மதத்துக்குள்ளிருந்தே சீர்திருத்தம் செய்து சமதர்மத்தை உருவாக்க அவர் எடுத்த முனைப்பு பிற்காலத்தில் பலராலும் முயற்சிக்கப்பட்டு இருக்கிறது. ஆனால் முடிந்ததா.!?
எதோ சிலரால் சில மூடப்பழக்க வழக்கங்கள் முறியடிக்கப்பட்டன. அவ்வளவுதான்.!
 

ஆனால் இன்னும் சாதியின் பெயரால், மதத்தின் பெயரால், கடவுளின் பெயரால் மக்களைப் பிரித்து மனங்களைக் கெடுத்து சிலர் ஆதிக்கம் செய்வது தொடரத்தான் செய்கிறது.!
தாழ்த்தப்பட்டவர்களுக்கு திருக்குலத்தார் என்று பட்டம் இட்டு அவர்கள் கோயிலுக்குள் நுழைய அனுமதிப் பெற்றுத் தந்தார். இதைத்தான் 900  ஆண்டுகளுக்குப் பிறகு அரிஜன் என்று பெயரிட்டு காந்தியார் முயற்சி செய்தார். பூநூல் போட்டு பாரதியார் முயற்சி செய்தார். யாராவது இதுவரை முழு வெற்றி அடைந்து இருக்கிறார்களா? இல்லை.!
 

இந்த சீர்திருத்தம் பெரியார் முறையில்தான் உருவாகும்.! அவர் சொன்னபடிதான் செப்பனிட முடியும்.!
ராமானுஜர் தொடர் இதைதான் நமக்கு உணர்த்தும். இது தெரிந்துதான் கலைஞர் சொன்னார் இந்த தொடரை தொடர்ந்து பார்ப்பவர் அதன் மெய் உணர்ந்து  நாத்திகராக மாறவும் வாய்ப்பு உண்டு என்றார்.!
 

ஒருமுறை, அப்போது  திருவல்லிக்கேணியில் ஒருவர் வீட்டுக்கு சென்றிருந்தேன். அவர்கள் வைணவ சம்பிரதாயத்தில் மூழ்கியவர்கள். அந்த வீட்டுப் பாட்டியிடம் கேட்டேன் “ராமானுஜர் சீரியல் பார்க்கிறீங்களா” என்று. அவர் சொன்னார் “ஆமாம்.. என்ன பிரமாதமா இருக்கு தெரியுமா? கருணாநிதி இப்படி எழுதுவார்னு நினைக்கவே இல்லை” அப்படின்னு சொன்னார்.
அந்த பாட்டி ௧0௮ (108) திவ்விய சேத்திரத்தில் வைகுண்டம், திருப்பாற்கடல் இரண்டைத் தவிர எல்லா சேத்திரத்திற்கும் சென்று வந்தவர். 

பல விஷயங்கள்  கருத்துகள் பரிமாறப்பட்ட அந்த உரையாடலின் போது, அவரோடு இருந்த இன்னொரு பெண்மணி சொன்னார் “கடவுள் இல்லேன்னு சொல்றவங்களுக்குதான் கடவுளைப் பற்றி நெறைய தெரிகிறது.! கமலஹாசனும் அப்படிதான்.. கலைஞரும் அப்படிதான்”  என்று சொல்லிவிட்டு அந்த லிஸ்டில் என்னையும் சேர்த்து “நீங்களும் அப்படிதான்”  என்று சொன்னார்.!
 

நான் “ராமானுஜர் ௯00 (900) ஆண்டுகளுக்கு முன்பு உயிரோடு இருந்த காலத்தில் எண்ணியதை எண்ணியாங்கு செய்ய இயலாமல் போனாலும் இராமானுஜர் தொடர் நாடகத்தின் மூலம் சமுதாய சீர்கேடுகள் அகற்றுவதில் இப்போது வெற்றி அடைவார்”  என்று சொன்னேன்.
திருமலை திருப்பதி தேவஸ்தானத்திலிருந்து அதிகாரிகளும் அலுவலர்களும் வந்து கலைஞரைப் பார்த்தபிறகு நான் சொன்னது நிறைவேறும் என்ற நம்பிக்கை வலுத்தது.!
 

தெலுங்கானா முதல் அமைச்சர் குறிப்பிட்டது போல், இராமானுசர் சிலை முதலில் தமிழ்நாட்டில் வைக்க சின்ன ஜீயர் இடம் தேடி சரியான இடம் கிடைக்கவில்லை என்று தெலுங்கானாவில் தகுந்த இடம் கிடைத்ததால் வைக்கப்பட்டு இருக்கிறது.! 

அதுவும் கூட தமிழ்நாட்டில் பிறந்தவர் என்பதால் நமக்கு பெருமை தான். குறைவு ஒன்றும் இல்லை. சமத்துவத்தை சிலைக்கு மட்டுமல்லாமல் நம் மக்கள் நிலையிலும் அமைய வேண்டும். அதுவே அவருக்கு இன்னும் உயரமான புகழைக் கொடுக்கும்.!
தோழர் Arul Prakasam

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக