திங்கள், 7 பிப்ரவரி, 2022

ஹிஜாப் - காவித் துண்டுக்கு எதிராக நீலத் துண்டு ! கர்நாடக மாணவர்கள்

hindutamil.in : கர்நாடகாவில் காவித் துண்டு அணிந்து வந்த மாணவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக, தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்து 'ஜெய் பீம்' கோஷம் எழுப்பினர்.
கர்நாடக மாநிலம் உடுப்பி அரசு மகளிர் பி.யூ. கல்லூரியில் கடந்த டிசம்பர் மாதம் ஹிஜாப் அணிந்து வந்த 6 முஸ்லிம் மாணவிகளுக்கு வகுப்பறையில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது. இதனால், கல்லூரி நிர்வாகத்தைக் கண்டித்து 6 மாணவிகளும் ஹிஜாப் அணிந்து தர்ணாவில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கல்லூரி நிர்வாகம் தங்களது உடை விவகாரத்தில் தலையிடுவதாக கர்நாடக உயர் நீதிமன்றத்திலும், தேசிய மனித உரிமை ஆணையத்திலும் அவர்கள் முறையிட்டுள்ளனர்.ஹிஜாப் போராட்டத்துக்கு எதிராக, சில மாணவர்கள் காவித் துண்டு அணியும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இந்த நிலையில், ஐடிஎஸ்ஜி கல்லூரியில் இன்று காலை, காவித் துண்டு அணியும் மாணவர்களுக்கு தங்களது எதிர்ப்பைத் தெரிவிக்கும் வகையிலும், ஹிஜாப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் நோக்கிலும் தலித் மாணவர்கள் நீல நிறத் துண்டை அணிந்துவந்து ’ஜெய் பீம்’ என்று முழுக்கமிட்டனர்.

அப்போது எதிரே காவித் துண்டை அணிந்த மாணவர்களுக்கும், இவர்களுக்கும் இடையே வாக்குவாதம் எழுந்தது. உடனடியாக கல்லூரி நிர்வாகம் தலையிட்டு, மாணவர்களை கலைந்து செல்ல வலியுறுத்தியது. இதனைத் தொடர்ந்து மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதனிடையே, முஸ்லிம் மாணவிகள் பள்ளி வரை ஹிஜாப் அணிந்து வரலாம்; ஆனால் பள்ளி வளாகத்திற்குள் ஹிஜாபுக்கு அனுமதியில்லை என்று கர்நாடக கல்வி அமைச்சர் நாகேஷ் விளக்கமளித்துள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக