வெள்ளி, 4 பிப்ரவரி, 2022

ஐ.எஸ். தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டை வெடிக்கவைத்து உயிரிழப்பு. அமெரிக்க படையால் சுற்றிவளைக்கப்பட்டார்

veerakesarai :  அமெரிக்காவின் விசேட படைப்பிரிவினர் சிரியாவின் மேற்குபகுதியில் மேற்கொண்ட சுற்றிவளைப்பு விசேட நடவடிக்கையில் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி கொல்லப்பட்டுள்ளார்.
தங்களது படைகளால் சுற்றிவளைக்கப்பட்டவேளை ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி குண்டைவெடிக்கவைத்ததாகவும், அவரும் அவரது குடும்பத்தினரும் இதன்போது கொல்லப்பட்டதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 2019 இல் ஐ.எஸ். அமைப்பின் தலைவர் அபுபக்கர் அல் பக்தாதி கொல்லப்பட்ட பின்னர் ஐ.எஸ். அமைப்பின் தலைவராக அபு இப்ராஹிம் அல் ஹஸ்மி அல் குராய்சி புதிய தலைவராக நியமிக்கப்பட்டார்.

இந்த தாக்குதல் சம்பவம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவிக்கையில்,

“ எங்களது படைவீரர்களின் திறமை காரணமாக போர்க்களத்திலிருந்து அவரை அகற்றியுள்ளோம். இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட அனைவரும் பாதுகாப்பாக திரும்பியுள்ளனர் ” என அமெரிக்க ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, குறித்த தாக்குதலின் பின்னர் 13 உடல்களை பார்த்ததாக சிரியாவில் பொதுமக்கள் தெரிவித்துள்ளதுடன் சிரியாவின் மனிதாபிமான அமைப்பான வெள்ளை ஹெல்மட் ஆறு சிறுவர்களின் உடல்கள் உட்பட 13 பேரின் உடல்களை மீட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இட்லிப்மாநிலத்தில் கிளர்ச்சிக்குழுவின் கட்டுப்பாட்டின் உள்ள துருக்கி எல்லைக்கு அருகில் உள்ள அட்மே நகரில் பல அமெரிக்க ஹெலிக்கொப்டர்கள் தரையிறங்கியதாகவும் இதன்போது அமெரிக்க படையினர் கடும் எதிர்ப்பை எதிர்கொண்டதாகவும் குறித்த பகுதியில்  இரண்டுமணிநேரம் துப்பாக்கி சத்தங்களும் எறிகணை சத்தங்களும் கேட்டதாகவம் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

Isis leader killed by US counterterrorism forces in north-west Syria, Joe Biden announces

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக