வியாழன், 17 பிப்ரவரி, 2022

உத்தரப்பிரதேச தேர்தலில் நடப்பது இதுதான்! சிறப்பு நேர்காணல்: உ

சிறப்பு நேர்காணல்:  உ.பி. தேர்தலில் நடப்பது இதுதான்!

மின்னம்பலம்  -  ராஜன் குறை, ஸ்ரீரவி  : உத்தரப்பிரதேசத் தேர்தல் குறித்து அசோகா பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜீல் வெர்னியர்ஸுடன் ஒரு நேர்காணல்
ஜீல் வெர்னியர்ஸ் (Dr. Gilles Verniers) அசோகா பல்கலைக்கழகத்தில் பொலிடிகல் சயின்ஸ் எனப்படும் அரசியல் கோட்பாட்டுத் துறையில் பணியாற்றுபவர். உத்தரப்பிரதேச மக்களாட்சி அரசியல் குறித்து தொடர்ந்து ஆய்வுகள் மேற்கொள்பவர். ஆங்கில ஊடகங்களில் அரசியல் நிகழ்வுகள் குறித்து கட்டுரைகள் எழுதி வருபவர். அவருடன் உரையாடி உத்தரப்பிரதேசத் தேர்தல் நிலவரம் குறித்து அறிந்துகொள்ள விரும்பினோம். ஜனவரி மாத இறுதியில் அவருடன் உரையாடியதன் சுருக்கப்பட்ட நேர்காணல் வடிவத்தைத் தருகிறோம்.


கேள்வி: உத்தரப்பிரதேசத் தேர்தலைக் குறித்து அறிந்துகொள்ள தமிழ்நாட்டில் பரவலான ஆர்வம் இயல்பாகவே இருக்கிறது. ஆனால், ஆங்கில ஊடகங்கள் வழி முழுமையான தகவல்களைப் பெற முடிவதில்லை. ‘மண்டல் X கமண்டல்’ என்பதுபோல அங்குள்ள அரசியல் களத்தைக் குறித்த எண்ணமுள்ளது. இந்தத் தேர்தலின் முக்கியத்துவத்தை எப்படி பார்க்கிறீர்கள்?

ஜீல் வெர்னியர்ஸ்: நாம் ஐந்தாண்டுகள் பின்னோக்கி பார்த்தால் பாரதீய ஜனதா கட்சி எப்படி ஆட்சிக்கு வந்தது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். அவர்கள் பல்வேறு சமூக பிரிவுகளையும் உள்ளடக்கிய கூட்டணி அமைப்பதாக ஓர் அணுகுமுறையை உருவாக்கினார்கள். சுருங்கச் சொன்னால் யாதவ் (சமாஜ்வாதி கட்சி), ஜாதவ் (பகுஜன் சமாஜ் கட்சி), முஸ்லிம்கள் ஆகிய மூன்று பிரிவினரை தவிர மீதமுள்ள அனைத்து பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட ஜாதியினரையும் தங்கள் அணியில் இணைக்க முற்பட்டார்கள். ஆதிக்க ஜாதிகளையும், பிற்படுத்தப்பட்ட ஜாதிகளையும் ஒரே அணியில் இணைப்பது என்பது பாரதீய ஜனதா கட்சியின் பழைய சூத்திரம்தான். ஆனால், இந்த முறை அவர்கள் பல சிறிய ஜாதிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்தார்கள். அந்த ஜாதிகளின் சிறிய அமைப்புகள், அப்னா தள், நிஷாத் கட்சி போன்ற அமைப்புகளுக்கெல்லாம் தொகுதிகளை ஒதுக்கினார்கள். அதன்மூலம் பாஜகவுக்கு எதிராக உள்ள கட்சிகளின் ஆதரவு பிரிவினரை (யாதவ், ஜாதவ், முஸ்லிம்) தவிர அனைத்து பிரிவினரையும் உள்ளடக்கிய கூட்டணி என்ற ஒரு பிம்பத்தை உருவாக்கினார்கள். இது பாஜக ஆதிக்க ஜாதிகளின் கட்சி என்ற பிம்பத்தை மாற்றி, பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் இணக்கமான கட்சி என்ற எண்ணத்தை உருவாக்கியது. அவ்வாறு தொகுதிகள் வழங்கப்பட்ட சமூகப் பிரிவினரும் பெருமளவு அந்தக் கூட்டணிக்கு வாக்களித்ததால் தேர்தலில் வெற்றி பெற்றார்கள்.

ஆனால், ஐந்தாண்டுகள் கழிந்தபின், ஆட்சியைக் கைப்பற்றிய பிறகு இதுபோன்ற ஒரு `பெரிய கூடார’ அணுகுமுறை என்பதைத் தொடர்ந்து தக்கவைப்பது கடினமானது என்பது புரிகிறது. ஏனெனில் அதிகாரப் பகிர்வு என்பது சாத்தியமாகவில்லை. பாரதீய ஜனதா கட்சியின் ஆதரவு தளமான ஆதிக்க ஜாதிகளின் மேலாதிக்கத்தைத் தவிர்க்க முடியவில்லை. அமைச்சரவையில், சட்டமன்ற உறுப்பினர்களில் கிட்டத்தட்ட பாதியளவு ஆதிக்க ஜாதியினர்தான் நிரம்பியுள்ளார்கள்.

ஆதிக்க ஜாதிகள் என்பவை எவை எவை?

முக்கியமான ஜாதிகள் பிராமணர்களும், தாக்கூர்களும். இவர்களைத் தவிர காயஸ்துகளும், பனியாக்களும் உள்ளார்கள். கிழக்கு உத்தரப்பிரதேசத்தில் பூமிஹார் உள்ளார்கள். மேற்கு உத்தரப்பிரதேசத்தில் தியாகி என்ற வகுப்பு உள்ளது. பஞ்சாபில் கத்ரிகள் உள்ளார்கள். முக்கியமான பிரிவுகள் என்றால் பிராமணர்களும், தாக்கூர்களும்தான் என்றாலும், பாஜகவில் பல ஆதிக்க ஜாதிகளும் இடம்பெற்றுள்ளன. மொத்தமாக மக்கள்தொகையில் இருபது சதவிகிதம் இருக்கக்கூடிய இவர்கள் ஐம்பது சதவிகிதத்துக்கு மேல் அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளார்கள். இது ஒரு பிரச்சினை என்றால், பிற்படுத்தப்பட்டு வகுப்பினரில் எண்ணிக்கையில் குறைவான பிரிவினர் இந்தக் கூட்டணியில் தங்களுக்கு முக்கியத்துவமின்றி போவதை உணர்ந்தார்கள். அதனால் பிற்படுத்தப்பட்டு பிரிவினருக்குள்ளும் அதிகாரப் போட்டி என்பது கூர்மையடைந்தது.

மூன்றாவது பிரச்சினை, பிற்படுத்தப்பட்ட பிரிவினர் பதவிகள் என்பதைக் கடந்து பல்வேறு சலுகைகளை, நலத்திட்ட உதவிகளை, கொள்கை முடிவுகளை எதிர்பார்த்தார்கள். உதாரணமாக இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடுகளைப் பல சிறிய பிரிவுகள் எதிர்பார்த்தார்கள். இவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த சொன்னார்கள். இந்த எதிர்பார்ப்புகளுக்கு எதிராக பாரதீய ஜனதா அரசு ஆதிக்க ஜாதி ஏழைகளுக்கு 10 சதவிகித இட ஒதுக்கீட்டினை வழங்கியது இவர்களுக்கு ஏமாற்றமளித்தது. வளர்ச்சியில் தங்கள் இடம் என்ன என்ற கேள்வி எழுந்தது.

பாரதீய ஜனதா கட்சியால் பிற கட்சிகளிலிருந்து பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் தலைவர்களைத் தங்கள் கட்சிக்குக் கொண்டுவர முடிந்தது. அப்படி வந்தவர்கள் நிறைய எதிர்பார்ப்புகளுடன் வந்தார்கள். அவர்கள் ஏற்கனவே இருந்த கட்சிகளில் புறக்கணிக்கப்பட்டதால்தான் பாரதீய ஜனதா கட்சியை ஒரு வாய்ப்பாகக் கருதி வந்தார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்ப்புகள் நிறைவேறவில்லை எனும்போது அவர்கள் விலகத் தொடங்கிவிட்டார்கள். சமீபத்தில் சுவாமி பிரசாத் மெளர்யா உள்ளிட்ட பலர் விலகியிருப்பது இதைத்தான் காட்டுகிறது.

இவ்வாறான சிறிய பிற்படுத்தப்பட்ட சமூகங்கள் மாநிலத்தின் ஒரு சில பகுதிகளில் மட்டும் அதிக எண்ணிக்கையில் இருக்கக் கூடியவர்களா? உதாரணமாக வன்னியர்கள் தமிழகத்தின் வட மாவட்டங்களில் மட்டும் அதிகம் வசிப்பது போல...

சில சமூகங்கள் குறிப்பிட்ட நிலப்பகுதியில் கணிசமாக இருக்கின்றன. வேறு சில சமூகங்கள் பரவலாக சிறிய எண்ணிக்கையில் வாழ்கின்றன. வரலாற்று ரீதியாக இந்தச் சிறிய சமூகங்கள் அரசியலில் முக்கியத்துவம் பெறாததற்கு காரணம் அவர்கள் மிகவும் சிறிய பரப்பளவில், சொல்லப்போனால் ஒரு சில தொகுதிகளில் மட்டும் கணிசமான எண்ணிக்கையில் வசிப்பதுதான். வேறு சில சமூகங்கள் மிகவும் பரவலாக சிறிய எண்ணிக்கையில் வசிப்பதையும் காண முடிகிறது. அதனாலும் அவர்களால் வாக்கு வங்கியாக திரள முடியவில்லை. மண்டல் அலையில் அனைத்து பிற்படுத்தப்பட்ட சமூகங்களையும் இட ஒதுக்கீடு போன்ற கோரிக்கைகள் மூலமாக அணிதிரட்ட முடிந்தது. அந்தக் கோரிக்கைகள் நிறைவேறிய பிறகு, பிற்படுத்தப்பட்ட சமூகங்களிடையில் அதிகாரப் போட்டி என்பது உருவாகியது. அப்போது தொகுதிவாரியாக யாரையெல்லாம் அணியில் சேர்த்தால் வெற்றி பெற முடியும் என்ற கணக்கீட்டின் அடிப்படையில் அரசியல் கூட்டணிகள் உருவாகத் தொடங்கின. கொள்கைகள் என்பதைவிட, வெற்றிக்கான கணக்கு என்பதே அனைவரையும் உள்ளடக்கி செயல்படும் உத்தி என்றானது. அதாவது... உள்ளூர் கள நிலவரங்களே அரசியலைத் தீர்மானித்தன. பாஜக மட்டுமல்ல, அதற்கு முன்னால் சமாஜ்வாதி கட்சி, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் இவ்வாறான கணக்குகள் அடிப்படையிலேயே தேர்தல் வியூகங்களை அமைத்தன. உதாரணமாக, பகுஜன் சமாஜ் கட்சி 2007-லும், சமாஜ்வாதி கட்சி 2012-லும் ஆதிக்க ஜாதிகளையும் தங்கள் அணியில் இணைத்துக்கொண்டன. தங்கள் ஆதரவு தளத்துக்கு அப்பாலும் தங்கள் கூட்டணியை விரிவுபடுத்துவதன் மூலம் வெற்றிகரமாக அரசை அமைத்தன. அவர்களைப் பார்த்துதான் பாரதீய ஜனதா கட்சியும் கற்றுக்கொண்டது. ஆனால், பாஜக தேர்தல் கணக்கு, சமூக தலைவர்கள், உள்ளூர் பெருந்தலைகள் ஆதரவு என்று மட்டும் செயல்படாமல் தேசியம், மத அடையாளம் போன்ற சொல்லாடல்களையும் துணைக்கு அழைத்துக்கொண்டது. அத்துடன் நரேந்திர மோடி, பொருளாதார வளர்ச்சி என்பது போன்ற கதையாடல்களையும் சேர்த்துக்கொண்டது. அதன் மூலம் தேர்தல் கணக்குக்கு ஏற்றபடியான ஒரு பரவலான சொல்லாடல் களத்தை உருவாக்கியதால் பெரியதொரு வெற்றியை ஐந்தாண்டுகளுக்கு முன் பெற்றது.

முசாஃபர் நகர் கலவரங்கள் போன்றவை அதற்கு உதவியிருக்குமல்லவா?

ஆம், சமூகத்தை பிளவுபடுத்துவதன் மூலம் முதலில் பாரதீய ஜனதா கட்சி தனக்கு எதிரான அணி சேர்க்கையைத் தவிர்க்கிறது; இரண்டாவதாகத் தேர்தல்கள் எதைக் குறித்தது என்பதற்கான ஒரு பெரும்பான்மைவாத சொல்லாடலை உருவாக்குகிறது.

ஒரு முக்கியமான ஐயம் தோன்றுகிறது. பொதுவாக ஜாதி கட்சிகளின் தலைவர்கள் என்பவர்களால் எந்த அளவு வாக்குகளை தாங்கள் இணையும் அணிக்குக் கொண்டுவர முடிகிறது? ஒரு குறிப்பிட்ட தலைவர் ஒரு கட்சிக்கு ஆதரவாகச் செயல்படலாம்; அவரால் அவர் சார்ந்த ஜாதியினர் அனைவரையும் தான் சொல்லும் அணிக்கு வாக்களிக்க வைக்க முடிகிறதா?

இது ஒரு முக்கியமான கேள்வி. பெரும்பாலும் அப்படி நிகழ்வதில்லை. இது விரிவான ஆராய்ச்சிக்குரியது. ஒவ்வொரு ஜாதிக்குள்ளும் பிரிவுகள், ஏற்றத்தாழ்வுகள், போட்டிகள் இருக்கின்றன. ஒரு பிரிவினரின் தலைவராக ஒருவரைச் சுட்டும்போது, அவரை யார் தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற கேள்வி எழுகிறது. பெரும்பாலும் அவரேதான் தன்னை தலைவராக முன்னிறுத்திக் கொள்கிறார். சில நேரம் கட்சிகள் ஒருவரைக் குறிப்பிட்ட வகுப்பினரின் தலைவராக அங்கீகரிக்கின்றன. இந்தத் தலைவர்கள், அவர்கள் உருவாக்கும் கூட்டணிகள், தேர்தல் பரப்புரைகள் என்பவை ஒரு தளத்திலும், வாக்காளர்களின் அதிருப்தி, அவர்கள் எதிர்பார்ப்புகள், களமட்ட எண்ணவோட்டங்கள் வேறொரு தளத்திலும் இயங்குகின்றன. இந்த இரண்டு தளத்துக்கும் தொடர்பேயில்லை என்று சொல்ல முடியாது. அதே நேரம் ஒன்றோடொன்று நெருங்கிய தொடர்புடையவை என்றும் சொல்ல முடியாது. பெரும்பாலும் தலைவர்களாக உருவாகக்கூடியவர்கள் வசதி படைத்தவர்களாக இருப்பது, அவர்கள் பிரதிநிதித்துவம் செய்யும் ஜாதியின் சராசரி மனிதரிடமிருந்து அவர்களை அந்நியப்படுத்தத்தான் செய்கிறது. மேலும், எந்த ஒரு ஜாதிக்குள்ளும் பலவிதமான பிரிவுகள், போட்டிகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் 50 சதவிகிதம் பேர் ஒரே கட்சிக்கு வாக்களித்தால் அதுவே கணிசமான அணி திரட்டல் என்றுதான் சொல்ல வேண்டும். ஜாதவ்களைத் தவிர பிற ஜாதியினர் அவ்வளவு கணிசமாக அணி திரள்வதில்லை. மேலும் இவ்வாறான அணி திரளல் தேர்தலுக்குத் தேர்தல் வேறுபடவும் செய்கிறது.

பேட்டி தொடர்ச்சி நாளை (பிப்ரவரி 18) காலை 7 மணி பதிப்பில்...

கட்டுரையாளர் குறிப்பு:

ராஜன் குறை கிருஷ்ணன் - பேராசிரியர், அம்பேத்கர் பல்கலைக்கழகம், புதுதில்லி. இவரைத் தொடர்புகொள்ள: rajankurai@gmail.com.

.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக