புதன், 16 பிப்ரவரி, 2022

மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிகள் தீவிரம்: உத்தவ் தாக்கரே - சந்திரசேகர ராவ் விரைவில் சந்திப்பு!

 நக்கீரன் செய்திப்பிரிவு :     2024 ஆம் ஆண்டு மக்களவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இப்போதிலிருந்தே அத்தேர்தலுக்கு எதிர்க்கட்சிகள் தயாராகி வருகின்றன. இந்தச்சூழலில் மம்தாவின் அதிரடி நடவடிக்கைகளால் அவரது தலைமையில் மூன்றாவது அணி அமையலாம் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மம்தாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள், காங்கிரஸ் இல்லாமல் எதிர்க்கட்சி கூட்டணி இல்லை எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தனர். இதனால் மூன்றாவது அணி உருவாக வாய்ப்பில்லை எனக் கருதப்பட்டது.


இந்தநிலையில் தெலங்கானா முதல்வரும், தெலுங்கானா ராஷ்டிர சமிதி தலைவருமான சந்திரசேகர ராவ், பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒன்றுதிரட்ட திட்டமிட்டு வருவதாக தகவல்கள் வெளியாகின. கடந்தாண்டு இறுதியில் தமிழக முதல்வர் ஸ்டாலினை சந்தித்தபோதும் இதுகுறித்து சந்திரசேகர ராவ் பேசியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அதனைத்தொடர்ந்து ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் தேஜஸ்வி யாதவையும் சந்திரசேகர ராவ் சந்தித்தார். மேலும் லாலு பிரசாத் யாதவுடன் தொலைபேசி வாயிலாகவும் சந்திரசேகர ராவ் உரையாடினார். இது சந்திரசேகர ராவ் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருவதை உறுதி செய்வதாக அரசியல் வல்லுநர்கள் கூறிய நிலையில், அதனை சந்திரசேகர ராவே அண்மையில் உறுதிப்படுத்தினார்.

(பாஜக தலைமையிலான) தேசிய ஜனநாயகக் கூட்டணி  மற்றும் (காங்கிரஸ் தலைமையிலான) ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆகியவற்றுக்கு மாற்றாக ஒரு கூட்டணியை உருவாக்கப்போவதாகவும், அதுதொடர்பாக மஹாராஷ்ட்ரா முதல்வரும், சிவசேனா தலைவருமான உத்தவ் தாக்கரேவை சந்திக்கபோவதாகவும் தெரிவித்தார். இதனை சிவசேனாவும் உறுதி செய்தது. சிவசேனா எம்.பி சஞ்சய் ராவத், 2024 மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்காக ஒரு தனியான அமைப்பை (கூட்டணியை) உருவாக்க முயற்சித்து வருகிறோம் என்றார்.

இந்தநிலையில் சந்திரசேகர ராவ், வரும் 20 ஆம் தேதி உத்தவ் தாக்கரேவை சந்திக்கவுள்ளார். இதுதொடர்பாக தெலங்கானா மாநிலத்தின் முதல்வர் அலுவலகம், உத்தவ் தாக்கரேவும் சந்திரசேகர ராவும் தொலைபேசியில் உரையாடியதாகவும், அப்போது உத்தவ் தாக்கரே, சந்திரசேகர ராவை மும்பைக்கு அழைத்ததாகவும், பாஜகவுக்கு எதிரான அவரது நாடு தழுவிய போராட்டத்தில் முழு ஆதரவு அளிப்பதாக கூறியதாகவும் தெரிவிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

கர்நாடகாவின் மதச்சார்பற்ற ஜனதா தளத்தின் தலைவரும், முன்னாள் பிரதமருமான தேவகவுடா, நேற்று சந்திரசேகர ராவுடன் தொலைபேசி வாயிலாக உரையாடியிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக தெலங்கானாவின் முதல்வர் அலுவலகம், “வாழ்த்துக்கள், நீங்கள் பெரிய போரில் ஈடுபட்டுள்ளீர்கள். நாங்கள் உங்களுடன் இருக்கிறோம். நாம் வகுப்புவாத சக்திகளுடன் போராடி நாட்டைக் காப்பாற்ற வேண்டும்” என  தேவகவுடா சந்திரசேகர ராவிடம் தெரிவித்ததாக கூறியுள்ளது.

அதற்கு பதிலளித்த  சந்திரசேகர ராவ், விரைவில் பெங்களூர் வந்து தங்களை சந்திக்கிறேன் என கூறியதாகவும் தெலங்கானா முதல்வர் அலுவலகம் கூறியுள்ளது. சந்திரசேகர ராவ், விரைவில் மம்தா பானர்ஜியை சந்திக்கவும் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக