வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

எனக்குள்ளிருந்த இளையராஜாவை நான் கண்டுபிடிக்கவில்லை பஞ்சு அருணசலம்தான் கண்டுபிடித்தார்.

 Kalaichelvan Rexy Amirthan  :  இராசையாவுக்குள் இருந்த இளையராஜாவைக் கண்டுபிடித்தது எப்படி ?
இசைஞானியை இசையமைப்பாளர் விஜய் அன்ரனி எடுத்த பேட்டியை 3 பகுதியாக யூடியூப்பில் பார்க்க முடிகிறது முடிந்தவர்கள் பாருங்கள்
ஏனென்றால் இசை ஜாம்பவான் ஒருவரை அவரின் பாதையில் பயணிக்கும் அவரின் ரசிகர் பேட்டி எடுக்கும்போது அந்தப்பேட்டியில் பல சுவராஸ்யமான விஷயங்கள் வெளிவரும்
அப்படிப்பட்டதொரு உரையாடல் இது. இந்தப்பேட்டியில் "உங்களை நீங்கள் அடையாளம் கண்டது எப்போது"  என்ற கேள்விக்கு ராஜாவின் பதில் :
சினிமாவில் வாய்ப்புப் பெறுவதற்காக 10 பாடல்கள் மட்டில் உருவாக்கி முழு Orchestration உடன் மண்டபம் ஒன்றில் அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களை அழைத்து இசைத்துக் காட்டினேன்


அந்த நிகழ்வுக்கு அப்போது பிரபலமாக இருந்த வி.சி.குகநாதன், தேவராஜ் மோகன் போன்றவர்களும் வந்திருந்தார்கள்
நிகழ்ச்சியின் முடிவில் எல்லோருமே பாடல்கள் நன்றாகவிருந்தன. என்று மட்டும் கூறிவிட்டுச் சென்றுவிட்டார்கள் ஒருவருமே வாய்ப்புத் தரவில்லை.
அந்தக் காலகட்டத்தில் பஞ்சு அருணாசலம் சிறிய நகைச்சுவப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார் அவர் ஜிகே வெங்கெடேஷிடம் வந்திருந்த சமயங்களில் எனக்கு அறிமுகம் அவரிடமும் சில பாடல்களைப் பாடிக் காட்டியிருந்தேன்
அவற்றைக் கேட்டுவிட்டு இவை நன்றாக இருக்கின்றன ஆனால் நான் எடுக்கும் நகைச்சுவைப் படங்களுக்கு இவை பொருத்தமில்லை அதனால் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையுள்ள படமெடுக்கும்போது கூப்பிடுகிறேன் என்றார்.
 

சிறிது காலத்தின்பின்னர் ஒருநாள் கதாசிரியர் செல்வராஜ் பஞ்சு அருணாசலம் புதிய படமொன்று எடுக்கத் தயாராகிறார் அவரை முயற்சித்துப்பார் என்றார். அப்போது பஞ்சு ஒரு சிறிய ஹோட்டேல் அறையில் தங்கியிருந்தார் ஒரு கட்டில், Chair, தலையணைதான் அங்கிருந்தன. அவரைச் சென்று சந்தித்தேன் அங்கே நான் அமைந்திருந்த இருக்கையில் தட்டியபடி பாடலொன்றைப் பாடிக்காட்டினேன் அந்தப்பாடல் "முத்துச் சம்பா பச்சரிசி "
என்றபாடல் அதைக் கேட்ட பஞ்சு அடடே இது நல்லாக இருக்கிறதே இந்தப்பாடலை திருமணம் ஒன்றுக்கு முதல்நாள் ஆயத்தவேலைகளின்போது ஒலிக்கவிட்டால் காட்சிக்கு மிகப்பொருத்தமாக நன்றாக இருக்குமே எனக்கூறி தன் படத்துக்கு இசையமைக்கும் வாய்ப்பைக் கொடுத்தார் 

அந்தப்படம்தான் அன்னக்கிளி. அடுத்து எனக்கு சினிமாவில் என்ன பெயர் வைக்கலாம் என்ற கேள்வி எழுந்தபோது ராஜா என்று வைக்கலாம் எனக்கூறினார் பஞ்சு ஆனால் அந்தக்காலத்தில் A.M.ராஜாவும்
தமிழ் சினிமாவில் இருந்ததால் ( குழப்பத்தைத் தவிர்க்க )இளையராஜா எனப் பெயர் வைத்தார் .
அப்போது பிரபலமாக இருந்த இயக்குனர்களை அழைத்து முழு இசைக்கலைஞர்களுடன் Orchestra ஏற்பாடு பண்ணி பாடிக்காட்டியபோது யாரும் இளையராஜாவை அடையாளம் காணவில்லை 

ஆனால் சிகரட் புகையே வெளியே செல்ல முடியாமல் அடங்கிக்கிடந்த ஒரு சிறிய சாதாரண அறைக்குள் என்கையால் அங்கிருந்த இருக்கையில் தாளம் தட்டிப் பாடியபோது பஞ்சு அருணாசலம் அடையாளம் கண்டுகொண்டார்,  எனக்குள்ளிருந்த இளையராஜாவை நான் கண்டுபிடிக்கவில்லை பஞ்சு அருணசலம்தான் கண்டுபிடித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக