சனி, 12 பிப்ரவரி, 2022

வவுனியாவில் புதிய பல்கலைக்கழகம்! திறந்து வைத்தார் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச!

 எழுக்கதிர் : வவுனியா பல்கலைக்கழகம், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவினால் நேற்று (11) திறந்து வைக்கப்பட்டது.
இது, இலங்கையின் 17வது பல்கலைக்கழகமாகும். வவுனியா பல்கலைக்கழகமூடாக தொழில்நுட்ப சவால்களை முறியடிப்போம் என ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தெரிவித்தார்.
வவுனியா பல்கலைக்கழகத்தினை சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த ஜனாதிபதி ராஜபக்‌ஷ, “இது ஒரு விசேஷமான நாள் சுபீட்சத்தின் நோக்கு வேலைத்திட்டத்துக்கு அமைய இந்த பல்கலை கழகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த பிரதேசத்தை கல்வி, பொருளாதார ரீதியில் உயர்வடைய இந்த வவுனியா பல்கலைக்கழகம் இன்று திறந்து வைக்கப்படுகிறது.



எனது தேர்தல் அறிக்கையில்  குறிப்பிட்டது போல நாட்டில் புதிய பல்கலைகழகம் உருவாக்கப்பட்டு இந்த பிரதேச மாணவர்களிடம் கையளிக்கபடுவதில் பெருமையடைகிறேன். இந்த பல்கலைகழகம் ஊடாக இளமாணி பட்டங்களை மட்டுமல்ல மேலதிக பட்டங்களையும் வேலை வாய்ப்புகளையும் வெளிநாட்டு வாய்ப்புகளையும் உருவாக்கி எமது இளைய சமுதாயத்துக்கு பெற்று கொடுக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து முன்னெடுத்து செல்ல தயாராக வேண்டும்.

எதிர்வரும் காலங்களில் எமது நாட்டில் தொழில் வாய்ப்புகளை உருவாக்க கூடிய கல்வி முறைகளை நாம் உருவாக்க அயராது உழைக்க வேண்டும். எமது நாடு விவசாய நாடு என்பதால் எதிர்காலத்தில் விவசாய துறையில் பாட திட்டங்களை உருவாக்கி அவற்றில் பட்டங்களை பெற்று கொடுத்து உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் தொழில் வாய்ப்புகளை பெற்று கொடுக்க பல்கலைக்கழகங்கள் முன்வர வேண்டும்.

எதிர்காலத்தில் மிக அதிகளவான மாணவர்களை பல்கலைக்கழகங்களுக்கு உள்ளீர்க்க எதிர்பார்த்து இருக்கிறோம். அதிகளவான மாணவர்கள் உயர்தரத்திலே சித்தியடைந்தாலும் அனைவரையும் பல்கலைகழகங்களுக்கு உள்ளீர்க்க முடியவில்லை எதிர்காலத்தில் இந் நிலைமை மாற்றியமைக்கப்படும்.

பல்கலைகழகங்களில் பட்ட படிப்பு கற்கை நெறிகளுக்கு மேலதிகமாக டிப்ளோமா, சான்றிதழ் கற்கை நெறிகள் புதிது புதிதாக ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும். நாங்கள் 30 வருட யுத்த நிலையை முடிவுக்கு கொண்டு வந்து எமது இளைய சமுதாயத்தை அபிவிருத்தி பாதையில் அழைத்து செல்ல உங்கள் அனைவரையும் அழைக்கின்றேன்” என தெரிவித்தார்.

இந்த நிகழ்வில், கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன, பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, பாராளுமன்ற உறுப்பினர் கே.காதர் மஸ்தான் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக