சனி, 26 பிப்ரவரி, 2022

டிஜிட்டல் திண்ணை: ஸ்டாலின் வார்னிங்- அமைச்சர்கள் அதிர்ச்சி!

டிஜிட்டல் திண்ணை:  ஸ்டாலின் வார்னிங்- அமைச்சர்கள் அதிர்ச்சி!

மின்னம்பலம் : மொபைல் டேட்டா ஆன் செய்ததும் ஃபேஸ்புக்கில் சில படங்கள் வரிசையாக வந்து விழுந்தன.
திருப்பதியில் கூடும் கூட்டத்தை கட்டுப்படுத்த அவர்கள் பயன்படுத்தும் ஒரே ஒரு வார்த்தை 'ஜருகண்டி' என்பதுதான். கிட்டத்தட்ட அதே போல நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்ற திமுகவின் வேட்பாளர்கள் திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலினை சந்திக்க அறிவாலயத்தில் கடந்த சில நாட்களாக நீண்ட வரிசையில் நின்றிருந்தனர். அனைவருக்கும் வாழ்த்து சொல்லி அனுப்பிக் கொண்டே இருக்கும் ஸ்டாலின் சில பேரிடம் சில நிமிடங்கள் பேசுகிறார்.


அது தொடர்பான படங்கள் ஃபேஸ்புக்கில் வந்து விழுந்ததை பார்த்து விட்டு வாட்ஸ்அப் தனது மெசேஜ்ஜை டைப் செய்ய தொடங்கியது.
"நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இந்த அளவுக்கு திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என உண்மையிலேயே ஸ்டாலின் எதிர்பார்க்கவில்லை. குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு அறிவிக்கப்பட்ட போது அதனோடு ரொக்கத்தொகை ஏதும் அளிக்கப்படவில்லை ‌‌‌‌. மேலும் பொங்கல் பரிசு தொகுப்பில் அளிக்கப்பட்ட பொருட்களில் தரம் குறைந்து இருப்பதாக எதிர்க்கட்சிகள் கடுமையாக குற்றஞ்சாட்டினர். அதுமட்டுமல்ல பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் அளிப்போம் என்ற சட்டமன்ற தேர்தல் வாக்குறுதியும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை.

இது மக்கள் மத்தியில் சற்று அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக உளவுத்துறை அரசுக்கு அறிக்கை தந்தது. இந்த அதிருப்தி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுக்கு எதிராக திரும்பும் வாய்ப்பு உள்ளதாக ஸ்டாலினுக்கு தகவல்கள் கிடைத்தன.

இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டுமா தள்ளிப்போட வாய்ப்பு ஏதும் இல்லையா என்று கூட ஸ்டாலின் தனக்கு நெருக்கமானவர்களிடம் மனம்விட்டு அப்போது பேசியிருக்கிறார்.

ஆனாலும் தேர்தலை தள்ளிப்போட அரசு விரும்புவதாக வெளிப்படையாக தெரிந்தால் அது எதிர்க்கட்சிகளுக்கு மேலும் சாதகமாகி விடும் என்றும் கணக்குப் போட்டார் ஸ்டாலின்.

இந்தப் பின்னணியில்தான் உள்ளாட்சித் தேர்தலை திமுக எதிர் கொண்டது. ஆனால் ஸ்டாலின் எதிர்பார்க்காத வகையில் பெருமளவுக்கு வெற்றி கிடைத்திருக்கிறது.

இதனால் நெகிழ்ச்சி அடைந்த ஸ்டாலின் அதேநேரம் சில விஷயங்களில் கடுமையான உறுதி காட்டவும் முடிவெடுத்திருக்கிறார்.

கடந்த சில தினங்களாக வெற்றி பெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகளோடு மாவட்ட செயலாளர்கள், அமைச்சர்கள் ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்று வருகின்றனர்.

புதிய பிரதிநிதிகளுக்கு வாழ்த்து சொல்லி அனுப்பிய ஸ்டாலின்

அவ்வப்போது அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்களோடு தனியாகவும் பேசியிருக்கிறார்.

'உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் நமக்கு முழுமையான வெற்றியை கொடுத்திருக்காங்க. மக்களோட நம்பிக்கையை எந்த வகையிலும் நாம கெடுத்துக்கக் கூடாது.

அடுத்தடுத்து நடக்கும் தேர்தல்கள்ல நாமளே மறுபடியும் ஜெயிக்கிற அளவுக்கு நம்முடைய உள்ளாட்சி பணிகள் அமையணும். இதுவரைக்கும் அமைச்சர்கள் மாவட்டச் செயலாளர்கள் பத்தி எனக்கு நிறைய ரிப்போர்ட் வந்திருக்கு.

எல்லாத்தையும் நிறுத்திட்டு ஒழுங்கா மக்கள் பணிகளை பாருங்க. சீனியர் ஜூனியர், அந்த சாதி இந்த சாதி இப்படி எல்லாம் சொல்லி என்னை சரிக்கட்டலாம்னு நினைக்காதீங்க. ரூமுக்குள்ள வந்து சிணுங்கி அழுதா உருகிப் போய் மன்னிக்கறதுக்கு நான் தலைவர் கலைஞர் இல்லை. ஸ்டாலின் அப்படிங்கறத ஞாபகத்துல வெச்சுக்கோங்க.

நான் கை சுத்தமா இருக்கேன்.

என்னைப் போல ஒவ்வொருவரும் கை சுத்தமா இருக்கணும்னு எதிர்பார்க்கிறேன். அப்படி இல்லேன்னா நான் என்ன நடவடிக்கை எடுப்பேன்னு இப்ப உங்ககிட்ட சொல்லிட்டு இருக்க மாட்டேன். அதனால பாத்து நடந்துக்கங்க' என்று கடுமையாக எச்சரித்து அனுப்பி இருக்கிறார் ஸ்டாலின்.

உள்ளாட்சித் தேர்தலில் பெற்ற வெற்றிக் களிப்போடு அறிவாலயம் சென்ற மாவட்டச் செயலாளர்களும் அமைச்சர்களும் ஸ்டாலினின் இந்த சம்மட்டியடியால் திகைத்துப் போய் இருக்கிறார்கள்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து சில நிமிடங்களில் ஆஃப் லைன் சென்றது வாட்ஸ்அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக