சனி, 26 பிப்ரவரி, 2022

குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று மிரட்டிய வெங்கடேஷ் குமார் பாபு கைது!

குழந்தைகளை தூக்கிலிட வேண்டும் என்று மிரட்டியவர் கைது!

மின்னம்பலம் : தொலைக்காட்சி நிகழ்ச்சியில் பெரியார் வேடமிட்டு நாடகத்தில் நடித்த குழந்தைகளை கொலை செய்ய வேண்டும் என சமூக வலைத்தளத்தில் பதிவிட்டவரை காவல்துறை இன்று கைது செய்தது.
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஜூனியர் சூப்பர் ஸ்டார்ஸ் என்ற நிகழ்ச்சியில் சிறுவர் -சிறுமியர் தங்களது நடிப்பு திறமையை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த நிகழ்ச்சியில், கடந்த சில நாட்களுக்கு முன்பு சமுதாய விழிப்புணர்வு நிகழ்ச்சியாக தந்தை பெரியார் நாடகம் நடத்தப்பட்டது. அதில், பெரியார் போன்று வேடமணிந்து ஜூனியர் சிறுவர்கள் அருமையாக நடித்திருந்தனர்.


பெரியார் ஏன் கடவுளை எதிர்த்தார்? கடவுள் மறுப்பு அவரது கொள்கையா? மதத்தை தூக்கியெறியச் சொல்லியது ஏன்? பெண் அடிமைத் தனத்தை ஒழிக்க பெரியார் முன்னெடுத்த போராட்டம் ஆகியவை குறித்து சிறுவர்கள் அழகாக பேசி நடித்திருந்தனர்.

இந்த காட்சி சமூகவலைதளங்களில் வைரலாக பரவியதையடுத்து, இந்த நாடகத்தில் நடித்த சிறுவ-சிறுமியர்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் அழைத்து பரிசு வழங்கி பாராட்டினார். முதல்வர் முன்பும் சிறுவர்கள் நடித்து காட்டினார்கள்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த வெங்கடேஷ் குமார் பாபு, கயத்தாறு பேரூராட்சி அலுவலகத்தில் டிரைவராக தற்காலிக பணியாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் தனது முகநூல் பக்கத்தில், “பெரியார் வேஷம் போட்ட இந்த குழந்தைகளை அடித்து கொன்று நாலு முக்கு ரோட்டில் தூக்கில் தொங்கவிட வேண்டும். அப்போதுதான் மற்ற குழந்தைகளுக்கும், பெற்றோருக்கும் பயம் வரும். ஏன் வ.உ.சி., தேவர், பாரதி , நேதாஜி இவர்கள் வேஷம் போட முடியாதா?” என்று சர்ச்சைக்குரிய வகையில் பதிவிட்டிருந்தார்.

குழந்தைகள் என்றுகூட பார்க்காமல், அவர்களை தூக்கில்போட வேண்டும் என்று விஷமத்தனமாக கருத்து தெரிவித்த வெங்கடேஷ்குமாருக்கு பலரும் கண்டனம் தெரிவித்ததுடன், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர்.

இதுகுறித்து கயத்தாறு பேரூர் திமுக செயலாளர் சுரேஷ் கண்ணன் கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார். அந்த புகாரின்படி, காவல்துறையினர் வெங்கடேஷ் குமார் பாபு மீது காவல் நிலைய குற்ற எண் 100/22 U/S 153(A), 505(1), 506(1) IPC & Sec 67 IT Act கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

-வினிதா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக