சனி, 12 பிப்ரவரி, 2022

பாகிஸ்தான் மனித உரிமை போராளி அஸ்மா ஜஹாங்கீர்

Saadiq Samad Saadiq Samad  : அஸ்மா ஜஹாங்கீர்  ! பாகிஸ்தானின் மனித உரிமைப் போராளி.
பாகிஸ்தானில் ஆணின் சாட்சியத்துக்கு என்ன மதிப்போ, அதில் பாதி மதிப்புதான் பெண்ணின் சாட்சியத்துக்கு என்று கூறுகிற வகையில் (இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில்) சட்டம் ஒன்று வர இருந்தது. அதை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்.
பாலியல் வன்முறைக்கு ஆளான பெண், தான் குற்றமற்றவர் என்று அவரேதான் நிரூபிக்க வேண்டும், இல்லையேல் தண்டனை உண்டு என்ற அவசரச் சட்டத்தை எதிர்த்துப் போராடினார்.
சஃபியா என்றொரு சிறுமிக்கு 13 வயது. பார்வையற்றவர். அந்தச் சிறுமியின் எஜமானரால் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டார்.
அதில் கருவுற்றார். குற்றவாளியைத்தானே சட்டம் தண்டிக்கும்?
ஆனால் இங்கே பாதிக்கப்பட்டவரைத்தான் தண்டித்தது. ‘ஜினாஹ்’ என்னும் முறைபிறழ்ந்த உடலுறவுச் சட்டத்தின்கீழ் அந்தச் சிறுமிக்கு சாட்டையடியும் மூன்றாண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. அதை எதிர்த்து முறையீடு செய்து, போராட்டத்தையும் நடத்தினார்

அஸ்மா. இறுதியில் தண்டனை ரத்து செய்யப்பட்டது.
மதச்சட்டங்களின் ஆட்சியை (குடும்பச் சட்டங்கள்) நிறுவ ஜியா உல் ஹக் முடிவு செய்தபோது, அதையும் எதிர்த்துப் போராடினார். “குடும்பச் சட்டங்களில் பெண்களுக்கு எந்த உரிமையும் கிடையாது. பாகிஸ்தான் உலகிலிருந்து தனிமைப்பட்டிருக்க முடியாது. உலகின் மற்றெல்லா பெண்களும் முன்னேறிக்கொண்டிருக்கும்போது நம் பெண்கள் தளைகளுக்குள் பிணைந்துகிடக்க முடியாது” என்று குரல் கொடுத்தார் அஸ்மா.
குடும்பத்தில் ஒரு பெண்ணின் காப்பாளராக இருக்கும் ஆணின் அனுமதியின்றி ஒரு பெண் தானாக திருமணம் செய்ய முடியாது என்றது லாகூர் உயர்நீதி மன்றம். அதையும் எதிர்த்துப் போராடினார்.
குழந்தை உழைப்பு, இறைப்பழி, மனித உரிமைகள் என பல்வேறு பிரச்சினைகளில் சக மனிதர்களுக்காக, பெண்களுக்காக, குரலற்றவர்களுக்காக, ஒடுக்கப்பட்டவர்களுக்காக, போராடினார். பல முறை சிறைவைக்கப்பட்டார்.
அஸ்மா ஜஹாங்கீர் மறைந்த தினம் இன்று. (11-2-2018)
பி.கு. - அறிஞர் பெருமக்கள், இஸ்லாமியரான அஸ்மா ஏன் ஹிஜாப் அணியவில்லை என்று ஆராயாமல், அவர் எந்தெந்த பிரச்சினைகளுக்காகப் போராடினார், ஹுதூத் என்றால் என்ன, ஜினா  என்றால் என்ன, ஷஹாதா என்றால் என்ன போன்ற விவரங்களைத் தேடிப்படித்தறிந்தால் மகிழ்ச்சி.
நன்றி ஷாஜஹான்R பதிவிலிருந்து

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக