சனி, 22 ஜனவரி, 2022

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்? சேகர்பாபு vs மா.சுப்பிரமணியன்

டிஜிட்டல் திண்ணை: சென்னை யார் கையில்?  சேகர்பாபு vs  மா.சுப்பிரமணியன்

மின்னம்பலம் : வைஃபை ஆன் ஆனதும் வாட்ஸ் அப் ஆன் லைனில் வந்தது. ”மாநகரத் தந்தை என்று சென்னை மேயரை அழைக்க முடியாது. மாநகரத் தாய் என்றுதான் அழைக்க வேண்டும். அந்த தாய் யார்?” என்று மாநகராட்சி அலுவலகமான ரிப்பன் பில்டிங் படத்தோடு ஒரு கேள்வியையும் இணைத்து அனுப்பியிருந்தது இன்ஸ்டாகிராம்.
இந்த இன்ஸ்டாகிராம் கேள்விக்கு வாட்ஸ் அப் சுடச் சுட பதிலை டைப் செய்யத் தொடங்கியது.
“தமிழகத்தில் உள்ள 21 மாநகராட்சிகளில் 50% பெண்களுக்கான இட ஒதுக்கீட்டின்படி 11 மேயர் பதவிகளை பெண்களுக்கு ஒதுக்கி அறிவித்துள்ளார் முன்னாள் சென்னை மேயரும் முதல்வருமான ஸ்டாலின்.


அதுவும் இந்தியாவிலேயே மிக மூத்த மாநகராட்சியும், உலகின் மிகக் குறிப்பிடத் தகுந்த மாநகராட்சியுமான சென்னை மாநகராட்சியின் மேயர் பதவியை பட்டியல் சமுதாய பெண்களுக்கு ஒதுக்கியதன் மூலம் தமிழக முதல்வருக்கு வரலாற்றுப் பெருமை கிடைத்துள்ளது. சென்னை மாநகராட்சியை தனி தொகுதியாக அறிவிக்க வேண்டும் என்பது சுமார் இருபது முப்பது ஆண்டுகால கோரிக்கை. இதை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் 2012 ஆம் ஆண்டு தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், ‘ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு அரசியலமைப்புச் சட்டத்தின் பாகம் ஒன்பதில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை மறுப்பதற்கு நிர்வாகக் காரணங்களை சுட்டிக் காட்டக் கூடாது. அதுமட்டுமல்ல... உள்ளாட்சி அமைப்புகளின் துணைத்தலைவர் பதவிகளில் ஆதிதிராவிடர், பழங்குடியினர், மகளிர் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்க தமிழக அரசும் ஒரிசா மாநில அரசு போல சட்டத்திருத்தம் செய்ய வேண்டும்’ என வழிகாட்டுதல்களைப் பிறப்பித்தது. தமிழகத்தின் முக்கியமான பெண் தலைவரான ஜெயலலிதா முதல்வராக இருந்த நிலையிலும் சென்னை மாநகராட்சி பெண்ணுக்கு ஒதுக்கப்பட வில்லை. இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சியை பெண்களுக்கும், அதிலும் பட்டியல் சமுதாயப் பெண்களுக்கும் ஒதுக்கியிருக்கிறார் ஸ்டாலின்.

சென்னை என்பது வெறும் சென்னை மட்டுமல்ல. அது தமிழகத்தின் தலைநகரம். சென்னை மாநகராட்சியில் ஸ்டாலின் மேற்கொண்டுள்ள இந்த சமூக முன்னெடுப்பு தமிழகம் முழுதும் பட்டியல் சமுதாய வாக்குகளை திமுகவுக்கு பெற்றுத் தரும் அரசியல் முயற்சியாகவும் பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில்தான் சென்னை மாநகராட்சித் தேர்தலில் திமுகவின் மேயர் வேட்பாளர் யார் என்பதில் சென்னையின் மாவட்டச் செயலாளர்களுக்குள் பெரும் அதிகார யுத்தம் நடந்துகொண்டிருக்கிறது.

சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரான மா.சுப்பிரமணியனுக்கும், சென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சேகர்பாபுக்கும் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோதில் இருந்தே பனிப்போரும் போட்டியும் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. ஸ்டாலினை வைத்து மா.சு. ஒரு கூட்டமோ நிகழ்ச்சியோ நடத்திவிட்டால்... சேகர்பாபு தனது மாவட்ட எல்லைக்குள் ஒன்றுக்கு இரண்டு நிகழ்ச்சி நடத்திவிடுவார். மா.சுவை சுற்றி என்ன நடக்கிறது என்பதை சேகர்பாபுவும், சேகர்பாபுவின் கூடாரத்தில் என்ன நடக்கிறது என்பதை மா.சுவும் அவ்வப்போது அறிந்துகொண்டே இருக்கிறார்கள்.

91-96 காலகட்டத்தில் ஸ்டாலினை அன்பகத்தில் இருந்து தனது டூவீலரில் அழைத்துச் சென்று கோபாலபுரத்தில் கொண்டுவிட்டுச் சென்றவர் மா.சுப்பிரமணியன். அப்போதில் இருந்தே ஸ்டாலினுடன் மிகவும் நெருக்கமானவர். அதனால்தான் சென்னை மேயர் பதவியை தனக்குப் பிறகு இளைஞரணியின் தீவிர கட்சிக்காரரான மா.சுப்பிரமணியனுக்கு வழங்க அப்போதே கலைஞரிடம் சிபாரிசு செய்து பெற்றுக் கொடுத்தார் ஸ்டாலின்.

அதேநேரம் அதிமுகவில் சுமார் முப்பது ஆண்டுகள் கள அனுபவத்துக்குப் பிறகு 2010 ஆம் ஆண்டு திமுகவில் வந்து சேர்ந்தார் சேகர்பாபு. அவர் வந்ததில் இருந்து இரு தேர்தல்களில் திமுக ஆட்சியைப் பிடிக்க முடியவில்லை என்றாலும் ஸ்டாலினிடம் தனக்கென ஒரு குறிப்பிடத் தக்க இடத்தைப் பெற்றுவிட்டார். கொளத்தூர் தொகுதியை கிட்டத்தட்ட தானே தத்தெடுத்துக் கொண்டது மாதிரி பார்த்துப் பார்த்து கவனித்தார். ஸ்டாலினிடம் மட்டுமல்ல ஸ்டாலின் குடும்பத்தினர், கனிமொழி, தயாநிதி மாறன், உதயநிதி என கலைஞர் குடும்பத்தினரிடம் தனக்கான இடத்தைப் பிடித்துக் கொண்டார். கலைஞர் நினைவிடத்தை கவனிக்கும் பொறுப்பை கேட்டுப் பெற்று சென்டிமென்ட்டாக கலைஞர் குடும்பத்தினரைக் கவர்ந்தார். ஸ்டாலினை சுற்றி எப்போதும் தானே இருப்பதற்கான சூழலை உருவாக்கி வைத்துக் கொண்டார். இவர் சென்னை கிழக்கு மாவட்டத்துக்கு மட்டும் மாசெவா இல்லை ஒட்டுமொத்த சென்னைக்கே இவர்தான் மாசெவா என்று பலரும் கேட்கும் அளவுக்கு சென்னை திமுகவில் வேரூன்றினார் சேகர்பாபு.

ஆட்சிக்கு வந்ததும் இந்த வேகம் மாசு, பாபு இருவரிடையிலும் இன்னும் அதிகமானது. இருவரும் அமைச்சர்களாக ஆகிவிட்டார்கள். சென்னைக்கு இவர்கள் மட்டுமே அமைச்சர்கள் என்பதால் இருவரில் யார் தலைமையிடம் நற்பெயர் பெறுவது என்ற போட்டி அதிகமானது. இந்த நிலையில்தான் சென்னை மேயரை பெண்களுக்கு அதுவும் பட்டியல் சமுதாய பெண்களுக்கு ஒதுக்கி அறிவித்தார் ஸ்டாலின்.

இப்போது சென்னை மாநகராட்சியை மறைமுகமாக கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது யார் என்ற போட்டி மா.சுப்பிரமணியத்துக்கும், சேகர்பாபுவுக்கும் தீவிரமாகியிருக்கிறது. தனக்காக சென்னை மேயர் பதவியையே விட்டுக் கொடுத்த ஸ்டாலினிடம் சென்ற மா.சுப்பிரமணியன், தனது சார்பில் சில பெயர்களை பரிந்துரைத்து அவர்களில் ஒருவரை மேயர் ஆக்குமாறு நேரடியாகவே கேட்டுள்ளார்.

இதையறிந்த சேகர்பாபு ஸ்டாலினை அவரது வீட்டில் சந்தித்து, ‘அண்ணே... சென்னை மேயரை எஸ்.சிக்கு கொடுத்தது தமிழ்நாடு பூரா மட்டுமில்ல இந்தியா பூரா உங்களுக்கு பெருமையா இருக்கு. அதேநேரம் சமீபகாலத்துல மேயர்கள் எல்லாம் தெக்குப் பக்கத்துலேர்ந்துதான் வந்திருக்காங்க. இப்ப சென்னை மேயரா வடசென்னைக்கு ஒரு வாய்ப்பு கொடுங்க. சென்னையின் பூர்வ குடிகள் இருக்கிற ஒரிஜினல் சென்னைனு போற்றப்படுகிற வடசென்னை பிரதிநிதிக்கு மேயராகுற வாய்ப்பைக் கொடுங்க’ என்று கேட்டிருக்கிறார். மாசுவும், சேகர்பாபுவும் தங்களது சார்பில் சில பட்டியலையும் முதல்வரிடம் கொடுத்திருக்கிறார்கள். சென்னை மாநகராட்சியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர இருவருமே தீவிரமாக இருக்கிறார்கள்.

மா.சுப்பிரமணியனுக்கும், சேகர்பாபுவுக்கும் இடையே நடக்கும் இந்த அதிரடி மோதல் முதல்வரான ஸ்டாலினுக்கும் தெரியாமல் இல்லை. இளைஞரணியில் இருந்தே தன்னோடு நீண்ட காலம் பயணிக்கும் மா.சுப்பிரமணியன், சமீபத்தில் திமுகவுக்கு வந்தாலும் செயல்பாடுகளால் தன்னை ஈர்த்த சேகர்பாபு இந்த இருவரையுமே ஸ்டாலின் விட்டுக் கொடுப்பவர் இல்லை.

இந்த பின்னணியில்தான் திருவனந்தபுரத்தில் 21 வயது சட்ட கல்லூரி மாணவி ஆர்யா ராஜேந்திரனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மேயராக்கியதை போல.... ஒரு சர்ப்ரைஸ் மேயரை சென்னைக்குக் கொடுக்க திட்டமிட்டு வருகிறார் ஸ்டாலின். பெரிய அளவிலான அரசியல் சாயம் இல்லாத ஆனால் திமுக அபிமானியாக இருக்கும் பொதுவான சமூக சேவை இமேஜ் கொண்ட ஓர் இளம்பெண்ணை சென்னையின் மேயராக ஆக்கலாம் என்ற திட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் இருப்பதாகவும் ஒரு தகவல் கசிகிறது. ஆனபோதும் மா.சுப்பிரமணியனும், சேகர்பாபுவும் தங்களது போராட்டத்தைத் தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்" என்ற மெசேஜுக்கு சென்ட் கொடுத்து ஆஃப் லைன் சென்றது வாட்ஸ் அப்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக