புதன், 19 ஜனவரி, 2022

PTR ராஜன் டு TRB ராஜ ஐடி விங் மாற்றப் பின்னணி!

பிடிஆர் டு டிஆர்பி ராஜா:  ஐடி விங் மாற்றப் பின்னணி!

 மின்னம்பலம் :  தமிழக நிதியமைச்சரும், திமுகவின் ஐடி விங் மாநிலச் செயலாளருமான பி.டி.ஆர். தியாகராஜன் தனது கட்சிப் பதவியை ராஜினாமா செய்திருக்கிறார். அதை ஏற்றுக் கொண்ட திமுக தலைமையும் புதிய ஐடி விங் மாநில செயலாளராக மன்னார்குடி சட்டமன்ற உறுப்பினரான டி.ஆர்.பி.ராஜாவை நியமித்திருக்கிறது.
இதுகுறித்து திமுக தலைமை நேற்று (ஜனவரி 18) வெளியிட்ட அதிகாரபூர்வ அறிவிப்பில், “ திமுக தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளராக பணியாற்றி வந்த தமிழக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் அரசுப் பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த வேண்டியிருப்பதால் அப்பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக தலைமைக்குக் கொடுத்திருந்த கடிதத்தை ஏற்றுக் கொண்டு... அவரை அப்பொறுப்பில் இருந்து விடுவித்து, கழக சட்டதிட்ட விதி 31 பிரிவு 19 இன்படி தகவல் தொழில் நுட்ப அணிச் செயலாளராக டி.ஆர்.பி.ராஜா எம்.எல்.ஏ. நியமிக்கப்படுகிறார்.

ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் இவருடன் இணைந்து பணியாற்றுவார்கள்” என்று பொதுச் செயலாளர் துரைமுருகன் குறிப்பிட்டுள்ளார்.

பிடிஆரின் ராஜினாமா சில மாதங்களாகவே கட்சிக்குள் பேசப்பட்டு வந்த நிலையில் தலைமையால் அது இப்போது அதிகாரபூர்வமாக ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளது போல அமைச்சகப் பணி அவருக்கு அதிகம் என்றாலும், அதையும் தாண்டிய சில காரணங்களும் இருக்கிறது என்கிறார்கள் ஐடி விங் வட்டாரத்திலேயே.

“நிதியமைச்சர் பிடிஆர் அரசியல் ரீதியாக சமூக தளங்களில் ஆக்டிவ் ஆக இருந்தார். ஆனால் கடந்த செப்டம்பரில் அவரை மையமாக வைத்து சுழன்ற அரசியல் சர்ச்சைகளை அடுத்து அவரது ட்விட்டரில் கடந்த சில மாதங்களாக தீவிர அரசியல் பதிவுகள் இடுவதையே தவிர்த்துவிட்டார். அரசு நிகழ்ச்சிகள், பிறந்தநாள், நினைவு நாள் குறிப்புகள், பொருளாதாரம் தொடர்பான செய்திகளையே தனது ட்விட்டரில் அவர் அதிகம் பகிர்ந்து வந்தார்.

காரணம் கடந்த செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டி கூட்டத்துக்கு அவர் செல்லாதது பற்றி பாஜக எழுப்பிய சர்ச்சைகளை அவர் கையாண்ட விதம்தான். லக்னோவில் நடந்த ஜிஎஸ்டி கூட்டத்துக்கு பிடிஆர் செல்லாததற்கு காரணம் அவரது கொழுந்தியாள் மகளுக்கு வளைகாப்பு என்று பாஜக தலைவர் அண்ணாமலை வாட்ஸப்பில் வந்த தகவலை பேட்டியாகக் கொடுக்க அதற்கு பதிலடி கொடுத்தார் பிடிஆர். ஆனால் அந்த பதில்களே அடுத்தடுத்து பல சர்ச்சைகளைக் கிளப்பின.

குறிப்பாக இந்த விவகாரத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த திமுகவின் செய்தித் தொடர்பாளரும் எம்பியுமான டி.கே.எஸ். இளங்கோவன் குறித்து தனது ட்விட்டர் தளத்தில் மலினமான கடுமையான வார்த்தைகளைக் கொட்டினார் பிடிஆர். அதை கொஞ்ச நேரத்தில் நீக்கியும் விட்டார்.

இந்தப் பிரச்சினைகளால், ‘துறை ரீதியான கருத்தை மட்டும் வெளியிடுங்கள். பிரஸ்மீட், பேட்டிகள் கொடுக்கும்போது தலைமை அனுமதி இல்லாமல் அரசியல் கருத்துகளை வெளியிடாதீர்கள்’ என்று பிடிஆருக்கு கடிவாளம் போட்டார் முதல்வர் ஸ்டாலின்.

இந்த நிலையில்தான் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து திமுகவுக்கு வந்த மகேந்திரனுக்கு திமுக ஐடி விங் இணைச் செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. மகேந்திரனை ஐடி விங் இணை செயலாளராக நியமித்தது பற்றி தன்னிடம் ஆலோசிக்கவில்லை என்று பிடிஆர் வருத்தத்தில் இருந்தார். அதை மனதில் வைத்து மகேந்திரன் தன்னை சந்திக்க நேரம் கேட்டபோது அவருடன் போனில் கடுமையாகவே பேசினார் பிடிஆர். அதை அப்படியே ஸ்டாலினிடம் தெரிவித்து மகேந்திரன் வருத்தப்பட்டிருக்கிறார்.

ஏற்கனவே டிகேஎஸ் இளங்கோவன் மீதான பிடிஆரின் கமென்ட்டால் கோபத்தில் இருந்த ஸ்டாலினுக்கு இதையும் அறிந்து பிடிஆர் மீது கோபமும் அதிருப்தியும் அதிகமானது. ஐடி விங் மீது கவனம் செலுத்தி வரும் தனது மாப்பிள்ளை சபரீசனிடம் தொடர்புகொண்டு, பிடிஆரை கட்சிப் பதவியிலிருந்து ரிசைன் பண்ண சொல்லுமாறு கேட்டுக் கொண்டார். இதுபற்றியெல்லாம் மின்னம்பலம் இதழில் செப்டம்பர் 25 ஆம் தேதியே, பிடிஆரின் கட்சிப் பதவிப் பறிப்பு? என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியானது.

அப்போது சபரீசனின் தலையீட்டுக்குப் பின் செப்டம்பர் முதலே அரசியல் சர்ச்சைகளைத் தவிர்த்து சைலண்ட் மோடுக்கு போய்விட்ட பிடிஆர், தனது நிதியமைச்சகப் பணிகளில் அதிக கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். தனது வாய் கட்டப்பட்ட நிலையில்... ஐடி விங் மாநிலச் செயலாளர் பதவியில் இருந்து ராஜினாமா கடிதத்தையும் பிறகு தலைமையிடம் கொடுத்துவிட்டார்.

நிதியமைச்சகத்தின் கீழ் வரும் மதிப்பீட்டுக் குழு, பொதுக் கணக்குக் குழு, பொது நிறுவனங்கள் குழு ஆகியவற்றை ஒருங்கிணைத்து சட்டமன்றத்தில் தனி செயலம் அமைக்கப்படுமென்று கடந்த பட்ஜெட்டில் அறிவித்திருந்தார் பிடிஆர். அது தொடர்பான பணிகள், அடுத்த பட்ஜெட் தயாரிப்புப் பணிகள், நிதியமைச்சககத்தின் ஏராளமான ஃபைல்கள் என பிடிஆருக்கு அரசியல் வம்பு பேசவே நேரமில்லாமல் போனது.

ஒரு கட்டத்தில் திமுக ஆட்சியின் மீது சமூக தளங்களில் எதிர்க்கட்சியினரின் விமர்சனங்கள் அதிகமானது. இவற்றுக்கு பதிலளித்து செயலாற்ற வேண்டிய பொறுப்பு ஐடிவிங்குக்கு இருப்பதை உணர்ந்த திமுக தலைமை பிடிஆரின் இடத்தில் வேறு யாரை நியமிக்கலாம் என்று ஆலோசித்தது.

மநீமவிலிருந்து வந்த மகேந்திரனுக்கு இந்தப் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று முதலில் ஆலோசிக்கப்பட்டது. ஆனால் பிற கட்சியில் இருந்து வந்தவருக்கு இவ்வளவு பெரிய பொறுப்பா என்று கட்சிக்குள் விமர்சனங்கள் வருவதைத் தவிர்க்க... இளைஞரும் சமூக தளங்களில் தீவிரமாக செயல்பட்டு வருபவருமான டி.ஆர்.பி.ராஜாவுக்கு ஐடிவிங் மாநிலச் செயலாளர் பொறுப்பைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்தார் ஸ்டாலின். அண்மையில் தமிழக அரசு செயல்படுத்திய மஞ்சப் பை திட்டத்தை... சட்டமன்றத்துக்கு மஞ்சள் பை எடுத்து வந்ததன் மூலம் சமூக தளங்களில் டிரண்ட் ஆக்கினார் டி.ஆர்.பி.ராஜா.

அரசியல் ரீதியாகவும், அரசு ரீதியாகவும் ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட தளங்களில் ஆக்டிவ்வாக செயல்பட்டு வரும் ராஜாவை ஐடி விங் செயலாளர் ஆக்கியுள்ள அதேநேரம், மகேந்திரன் உள்ளிட்ட நிர்வாகிகளை அரவணைத்து செயல்படும்படி அவருக்கு அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. இதன் மூலம் ஐடிவிங்கில் மகேந்திரனுக்கு கூடுதல் சுதந்திரம் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

தனக்கு ஐடி விங் மாநில செயலாளர் பொறுப்பு அளிக்கப்பட்டிருப்பது குறித்து கருத்து வெளியிட்டுள்ள டி.ஆர்.பி.ராஜா, “திராவிட முன்னேற்றக் கழகம் எனும் முதுபெரும் மக்கள் இயக்கத்தின் கொள்கைகளை பறைசாற்ற,கழகத்தின் ரத்தநாளங்களான உடன்பிறப்புகளின் கர்ஜனை திக்கெட்டும் ஓங்கி ஒலிக்கச் செய்ய,புதிய பொறுப்பளித்துள்ள பாசமிகு கழகத் #தலைவர் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றிகள். தலைவர் நான் பயணிக்க ஒரு புதிய பாதைக்கான விளக்கேற்றி வைத்திருக்கிறார் என்ற பொறுப்புணர்வில் மூழ்குகிறேன். முதல்வரின், உடன் பிறப்புகளின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவேன் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

தேர்தலுக்குப் பிறகு திமுகவின் ஐடி விங் சோம்பலாகியிருக்கிறது என்ற விமர்சனங்கள் கட்சிக்குள்ளேயே இருக்கின்றன. இந்த நிலையில்.... பிடிஆரிடம் இருந்து டிஆர்பிக்கு வந்திருக்கும் திமுக ஐடி விங்குக்கு நிறைய வேலை இருக்கிறது என்கிறார்கள் சமூக தளங்களில் புழங்கும் திமுகவினர்.

-ஆரா


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக