திங்கள், 17 ஜனவரி, 2022

குடியுரிமை நோக்கிய நெடும்பயணம் நம்பிக்கையை விதைத்த முதல்வர் ஸ்டாலின் - கோவி லெனின்

May be an image of 14 people, outdoors and text

Govi Lenin  : குடியுரிமை நோக்கிய நெடும்பயணம்
தமிழ்நாட்டில் உள்ள மறுவாழ்வு முகாம்களிலும், முகாம்களுக்கு வெளியேயும் வசிக்கும் இலங்கைத் தமிழரின் வாழ்வுரிமையைக் கருத்திற்கொண்டு மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இலங்கைத் தமிழர் நலன் ஆலேசானைக் குழுவை உருவாக்கினார்.
அதற்கான அரசாணை வெளியிடப்பட்டபோதே, முகாம்களின் உள்கட்டமைப்புகள், இலங்கைத் தமிழர்களின் வாழ்க்கை மேம்பாடு ஆகியவற்றுடன், குடியுரிமை மற்றும் இலங்கைக்குத் தாமாக விரும்பிச் செல்லுதல் போன்ற நீடித்த தீர்வுகள் தொடர்பான சட்டப்பூர்வ அம்சங்கள் குறித்து வகை செய்வதே இந்தக் குழுவின் முதன்மைப் பணி என்பது குறிப்பிடப்பட்டிருந்தது.


 ஆலோசனைக் குழுவின் தலைவரும் மாண்புமிகு சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நலன் துறை அமைச்சருமான திரு.மஸ்தான் அவர்களின் தலைமையில் 2021 டிசம்பர் 29ஆம் நாளன்று தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையில் நடைபெற்ற ஆலோசனைக் குழு உறுப்பினர்களின் முதல் கூட்டத்தில், மறுவாழ்வு முகாம்களிலும்,   வெளியிலும் வாழ்கிற இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை தொடர்பாக, ஒன்றிய அரசின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய தீர்வு காண்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
 

மறுவாழ்வுத் துறை ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள், இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளையும், அதில் உள்ள நடைமுறைச் சிக்கல்களையும் விளக்கினர். ஆலோசனைக் குழு உறுப்பினர்களில் குடியுரிமை குறித்து ஏற்கனவே ஆய்வுகளை மேற்கொண்டிருந்த நண்பர்கள், குடியுரிமைப் பெறுவதற்கான இந்திய ஒன்றிய அரசின் சட்டங்கள், ஐ.நா.மன்றத்தின் வழிகாட்டுதல்கள், முகாம்களிலும் வெளியிலும் வசிப்பவர்களை வகைப்படுத்த வேண்டிய நடைமுறைகள் ஆகியவற்றை எடுத்துரைத்தனர்.
 

    ஆலோசனைக் குழுவின் துணைத் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் கலாநிதி வீராசாமி அவர்கள், குடியுரிமை பெற விரும்புகிறவர்கள் குறித்த எண்ணிக்கை, அதற்குரிய ஆவணங்கள் அடங்கிய தரவுகளை சேமித்து, அதனடிப்படையில் ஒன்றிய அரசின் குடியுரிமைச் சட்டங்களின் வாயிலாக மேற்கொள்ள வேண்டிய நிரந்தரத் தீர்வுக்கான வழி முறைகளை விளக்கினார். அதற்கானத் துணைக் குழுவும் உடனடியாக அமைக்கப்பட்டு, பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
 

      சட்டமன்றத்தில் முதல்வர் அறிவித்த கட்டமைப்பு-வாழ்வாதார மேம்பாடு தொடர்பான 12 நலத்திட்டங்களும் முகாமில் வசிக்கும் இலங்கைத் தமிழச் சொந்தங்களுக்கு செயல்பாட்டுக்கு வந்துள்ளதுடன், தமிழ்நாடு அரசின் பொங்கல் பரிசுத் தொகுப்பும் முழுக் கரும்புடன் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 

      தங்கள் சொந்த மண்ணில் பொங்கல் விழாவைக் கொண்டாடும் அதே உணர்வுடனும் மகிழ்வுடனும் தாய்த் தமிழ்நாட்டில் இம்முறை அவர்கள் பொங்கல் கொண்டாடினார்கள். ‘வெல்லம் உருகிடிச்சி’ என்ற வெற்று அரசியல்வாதிகள் போல பொய்ப் பரப்புரை செய்யாமல், உள்ளம் உருகிட மாண்புமிகு முதல்வர் அவர்களுக்கும் அவர் தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் நன்றி தெரிவித்து, பொங்கல் விழாவினைப் போற்றி மகிழ்ந்தனர்.
 

      பல ஆண்டுகள் கழித்து, மறுவாழ்வு முகாம் என்ற பெயருக்கேற்ப புதுவாழ்வுக்கான நம்பிக்கைப் பூத்துள்ள நிலையில், அனைவரும் சேர்ந்து வைத்த பொங்கலுக்கு, ‘குடியுரிமைப் பொங்கல்’ என்று பெயர் சூட்டி, அதனை முன்மொழிந்தனர். முகாம்களில் வசிக்கும் இலங்கைத் தமிழர்களில் மூன்று தலைமுறையாக இங்கே வசிப்பவர்கள் இருக்கிறார்கள். நான்கு தலைமுறையாக வசிப்பவர்களும் உண்டு. அவர்களின் இரண்டு தலைமுறையினர் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
  

    ஒட்டுமொத்த குடும்பத்தினரும் தமிழ்நாட்டுப் பண்பாட்டு வழி வளர்ந்தவர்கள். குழந்தைகள் தமிழ்நாட்டு அரசினரின் கல்வியைக் கற்றவர்கள். தமிழ்நாட்டு மக்களுடன் சகோதர-சகோதரிகளாகப் பழகுபவர்கள். இந்திய இறையாண்மைக்கு உட்பட்டு வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வாழ்பவர்கள். முதல்வர் மு.க.ஸ்டாலின் அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளால்,  இந்திய ஒன்றிய அரசு தங்களுக்கு சட்டப்பூர்வமான குடியுரிமையை வழங்கும் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடே, அரசு வழங்கிய பொருட்களுடன் கொண்டாடப்பட்ட குடியுரிமைப் பொங்கல்.
   

   பயணம்  தொடங்கியிருக்கிறது. பாதை நெடியது. கால்கள் வலிமையானவை. மனது திடமானது. தமிழினத் தலைவர் கலைஞரின் புதல்வர் புதிய வரலாற்றைப் படைப்பார்.
  திருவள்ளுவர் ஆண்டு 2053 தை 4

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக