புதன், 26 ஜனவரி, 2022

பெரியார், கப்பலோட்டிய தமிழன் , வேலு நாச்சியார் . தீரன் சின்னமலை .. தமிழ்நாடு ஊர்திகளில் இடம்பெற்ற சிலைகளின் விபரம்

 Shyamsundar  - Oneindia Tamil  :  சென்னை: சென்னை குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழ்நாடு அரசு சார்பாக 3 அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது.
டெல்லி குடியரசுத் தின அணிவகுப்பில் பங்குபெற இருந்த தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி இந்த முறை நிராகரிக்கப்பட்டுள்ளது.
வ.உ.சி, வேலுநாச்சியார், பாரதியார் ஆகியோரை மையமாக வைத்து வாகனம் உருவாக்கப்பட்டது.
ஆனால் மத்திய அரசின் நிபுணர் குழு இந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி அளிக்கவில்லை.
தமிழ்நாடு அரசு இது தொடர்பாக பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியும் கூட அலங்கார ஊர்திக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
புதுடில்லியில் குடியரசு தின அலங்கார அணிவகுப்பில் வாய்ப்பு மறுக்கப்பட்ட நிலையில் சென்னையில் நடைபெறும் குடியரசு தின விழாவில் தமிழ்நாடு அலங்கார ஊர்திகள் காட்சிப்படுத்தப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.



இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், எந்தவிதக் காரணங்களையும் குறிப்பிடாமல் தமிழ்நாட்டின் அலங்கார ஊர்தி பங்கேற்பதற்கான வாய்ப்பு மறுக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திற்கும் சற்றும் சளைக்காத வகையில், விடுதலைப்போரில் தமிழகம் செய்த இருநூற்றி ஐம்பது ஆண்டு காலத் தொடர் பங்களிப்பு சுதந்திரப் போராட்ட வரலாற்றில் மிக முக்கியமானதாகும்.
முதல் இந்திய சுதந்திரப் போர் என போற்றப்படும் சிப்பாய் புரட்சிக்கு (1857) அரை நூற்றாண்டுக்கு முன்பே நடந்தேறிய வேலூர் புரட்சி ஆங்கிலேய வல்லாதிக்க எதிர்ப்பு வரலாற்றில் முக்கிய தொடக்கமாகும். அதேபோல், ஜான்சிராணி வாள் வீசுவதற்கு முக்கால் நூற்றாண்டுக்கு முன்பே, ஆங்கிலேயர்களைத் தீவிரமாக எதிர்த்துப் போரிட்டு, தான் இழந்த நாட்டை வென்ற ஒரே ராணி என்ற புகழைப் பெற்றவர் வீரத்தாய் வேலுநாச்சியார்.

ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகப் பலமுறை போரிட்ட பூலித்தேவன், ஏகாதிபத்திய அடக்குமுறைக்கு எதிரான போரில் ஆங்கிலேயருக்கு சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த வீரபாண்டிய கட்டபொம்மன், வீரன் சுந்தரலிங்கம், மருது சகோதரர்கள், தீரன் சின்னமலை உள்ளிட்ட எண்ணிலடங்கா வீரத்திருமகன்களை விடுதலைத் தியாகத்திற்கு தந்த மண் தமிழ்நாடாகும். ஆங்கிலேயர்களின் வணிகத்திற்குப் போட்டியாக, சுதேசி கப்பல் கம்பெனி எனும் பெரும் கனவை நெஞ்சில் ஏந்தி, தன் உடல், பொருள், ஆவி என அனைத்தையும் இழந்து, ஆங்கிலேய அடக்குமுறைக்கு எதிராகச் செயல்பட்டு இரட்டைத் தீவாந்திர தண்டனை பெற்றவர் வ.உ.சிதம்பரனார்.
ஆங்கிலேயர்களைத் தீரமுடன் எதிர்கொண்ட நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் பங்களிப்பைப் பறைசாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்ட அலங்கார ஊர்தி டெல்லி குடியரசு தின அணிவகுப்பில் கலந்து கொள்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

எனவே இவர்களின் சிலைகள் அடங்கிய அலங்கார ஊர்திகள் சென்னை மட்டுமின்றி தமிழ்நாடு முழுக்க பல்வேறு இடங்களில் மக்கள் பார்வைக்கு வைக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார். அந்த வகையில் டெல்லியில் மறுக்கப்பட்ட தமிழ்நாடு வாகனங்கள் மாநிலம் முழுக்க காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. இன்று சென்னையில் 3 வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்ட உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் எப்போதும் ஒரு வாகனம் காட்சிப்படுத்தப்படும்.

இது தவிர்த்து மேலும் மூன்று வாகனங்கள் இங்கே இடம்பெறும். முதல்வதாக வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலுார் சிப்பாய் கழகம், பூலிதேவன் ஆகியோரின் சிலைகள் அடங்கிய வாகனம் இடம்பெறும்.
இரண்டாவதாக சுதேசி கப்பல், வ.உ.சிதம்பரனார், ஒண்டிவீரன், சுப்பிரமணிய சிவா, கக்கன், முத்துராமலிங்க தேவர் ஆகியோர் அடங்கிய வாகனம் இடம்பெறும்.
மூன்றாவதாக பெரியார் தீரன்சின்னமலை, ஜோசப் செல்லதுரை குமரப்பா, வாஞ்சிநாதன் ஆகியோரின் சிலைகள் அடங்கிய வாகனம் இடம்பெறும்.

வேலுநாச்சியார், மருது சகோதரர்கள், சுந்தரலிங்கம், பூலிதேவன், வீரன் அழகுமுத்துகோன், வேலுார் சிப்பாய் கழகம், பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், குயிலி ஆகியோரின் சிலைகள் ஒரு வாகனத்தில் இடம்பெறும்.
பெரியார், ஜோசப் செல்லதுரை குமரப்பா, வாஞ்சிநாதன், தீரன்சின்னமலை ஆகியோரின் சிலைகள் அடங்கிய இன்னொரு வாகனம் இடம்பெறும். அதேபோல், திருப்பூர் குமரன், சுதேசி கப்பல், திருப்பூர் குமரன், காமராஜர், வ.உ.சிதம்பரனார், முத்துராமலிங்க தேவர், இரட்டைமலை சீனிவாசன், கக்கன், காயிதே மில்லத், ராஜாஜி, சுப்பிரமணிய சிவா, விஜயராகவாச்சாரியார், ஒண்டிவீரன், ஆகியோரின் சிலைகள் மூன்றாவது வாகனத்தில் காட்சிபடுத்தப்பட உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக