புதன், 26 ஜனவரி, 2022

ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல,பேராசிரியர்! தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரவின் புகழுரைக்கு உரிய அண்ணாத்துரை

May be an image of 1 person
May be an image of 1 person

பாண்டியன் சுந்தரம்  : ஷேர் ஆட்டோ என்றாலே நம் கண் முன் வரும் ஒரே காட்சி ஒருவர் மடியில் ஒருவர் ஏறி இடித்தபடி விழிபிதுங்க உட்கார்ந்து நெரிசலாக அமர்ந்து செல்லும் பரிதாப பாவப்பட்ட பயணிகளின் முகங்கள் தான்.
ஆனால், சென்னையைச் சேர்ந்த அண்ணாதுரை என்ற இளைஞரின் ஷேர் ஆட்டோவில் பயணிக்கப் போட்டி போட்டுக்கொண்டு மக்கள் காத்திருப்பது,
வாடிக்கையாகவே இருக்கிறது. அப்படி என்ன விசேஷம் அந்த ஆட்டோவில்?
அந்த அளவு இவர் தன் ஆட்டோவில் ஏராள  வசதிகளைச் செய்து அசத்தி இருக்கிறார்; பயணிப்பது ஆட்டோவா அல்லது சொகுசு விமானமா என எண்ணி வியக்கும் அளவுக்கு இன்றும் நிற்காமல் பயணித்துக் கொண்டு இல்லை இல்லை பறந்து கொண்டு இருக்கிறார் அண்ணாதுரை.
சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இவரது ஆட்டோவை நீங்கள் பார்த்திருக்கலாம். அண்ணாதுரை தனது ஆட்டோவை சொகுசு ரதமாகவே வடிவமைத்து இருக்கிறார்.


ஆட்டோவில் வார இதழ்கள், நாளிதழ்கள், தொலைக்காட்சி, டேப், ஐபேட், இலவச வைஃபை, மினி பிரிட்ஜ் அதற்குள் குளு குளு ஐஸ் வாட்டர் மற்றும் பிஸ்கட், சாக்லேட், ஸ்னாக்ஸ், முகக் கவசம், சானிடைசர் இவற்றோடு பயணிகள் சிரமமில்லாமல் கட்டணம் செலுத்த ஸ்வைப்பிங் மிஷன் என பல அம்சங்கள் உள்ளது. எல்லாவற்றிற்கும் மேலாக அண்ணாதுரையின் கனிவான பேச்சும், வரவேற்கும் உபசரிப்பும் அவருக்கு வாடிக்கையாளர்களை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இவ்வளவுக்கும் கூடுதல் கட்டணம் கிடையாது. எல்லா ஷேர் ஆட்டோக்களையும் போலவே சரியான கட்டணத்தை மட்டுமே வாங்கி பயணிக்கிறார்.
இது மட்டுமா, மற்ற ஆட்டோக்காரர்கள் போலவே இவரும் இலவச பயண சேவையை மக்களுக்கு வழங்குகிறார்.
பொதுவாக பிரசவத்திற்கு இலவசம் என்பதை நாடு முழுவதும் உள்ள பெரும்பாலான ஆட்டோ ஓட்டுநர்கள் தங்கள் கொள்கையாக வைத்துள்ளனர். ஆனால், அதிலும் சற்று வித்தியாசமாக சிந்திக்கும் அண்ணாதுரை, அன்னையர் தினம், குழுந்தைகள் தினம் ஆகிய நாட்களில் தள்ளுபடி விலையில் ஆட்டோ சவாரி செய்ய முடியும் எனவும் அறிவித்து இருக்கிறார்.
மேலும், அண்ணாதுரையின் ஆட்டோவில் ஆசிரியர், ஆசிரியை யாராவது ஏறினால் அவர்களுக்கு முற்றிலும் இலவசம்.  "உலகிலேயே சிறந்த சேவையாக ஆசிரியர் பணியைத் தான் நான்  நினைக்கிறேன்" என்கிறார் இவர்.
கொரோனா பேரிடர் காலத்தில் என்று இல்லாமல் எந்த நேரத்திலும் நம்மைக் காக்க உயிரைப் பணயம் வைத்துப் போராடி வருகிற மருத்துவர்கள், செவிலியர்கள், அவர்களுக்கு உதவியாக இருக்கிற துப்புரவுத்தொழிலாளர்கள் உள்ளிட்ட முன்களப்பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக ஆட்டோ சேவை வழங்கி வருகிறார்.
இப்படியெல்லாம் விதவிதமாக யோசித்து வாடிக்கையாளர்களைக் கவர்கிறாரே, இவர் கண்டிப்பாகப் படித்துவிட்டு வேலை கிடைக்காமல் ஆட்டோ ஓட்டும் வசதியான வீட்டுப் பட்டதாரியாகத் தான் இருக்க வேண்டும் என நினைக்கிறீர்களா?
அண்ணாதுரை ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து படிக்க வசதி இல்லாமல் 12ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்து, கடன் மூலமே ஆரம்பத்தில் ஆட்டோ மற்றும் வசதிகளைச் செய்து வந்திருக்கிறார். ஆனால், பிசினஸ் ஸ்கூல் மாணவர்களுக்கு இன்று வகுப்பு எடுக்கிறார் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா?
அண்ணாதுரை வாடிக்கையாளர்களைக் கவரப் பயன்படுத்திய இந்த  வித்தியாசமான உத்திகளைப் பார்த்து வியந்து போன ‘இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்' என்ற அமைப்பு 2019-ஆம் ஆண்டு மொஹாலியில் நடந்த கூட்டத்தில் பிசினஸ் படிக்கும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க அழைப்பு விடுத்தது. இவரும் சென்று வகுப்பு எடுத்து வந்திருக்கிறார்.
வாடிக்கையாளர்களை எப்படித் தன்வயப்படுத்துவது அவர்களுக்கு எப்படி நம்பகத்தன்மை ஏற்படுத்துவது, தன்னிடம் எப்படித் தேடிவரவைக்க முடியும் என்பதை நிகழ்த்திக் காட்டிய அண்ணாதுரை தற்போது இந்திய அளவில் பிரபலமான பல மேடைகளில், எம்.பி.ஏ. மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக உரையாற்றி வருகிறார். இவர் டெட் எக்ஸ் பேச்சாளரும் கூட.
மேலும் கூகுள், ஹெச்பி முதலான தலைசிறந்த நிறுவனங்களும் வாடிக்கையாளர்களிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என தங்களது ஊழியர்கள் முன்பு உரையாற்ற அண்ணாதுரைக்கு அழைப்பு விடுத்துள்ளன. அதேபோல், பல நாளிதழ்கள், பிரபல சர்வதேச செய்தி நிறுவனங்களும் இவரின் பேட்டி மற்றும் செய்திகளை வெளியிட்டு வருகின்றன.
சமீபத்தில் The Better India என்ற பிரபல நிறுவனம், அண்ணாதுரையின் சிறப்பை வீடியோவாக தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.
அதனை ரீ-ட்வீட் செய்துள்ள இந்திய முன்னணி தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா,“எம்.பி.ஏ படிக்கும் மாணவர் இவருடன் ஒரே ஒரு நாள் இருந்தால் போதும், வாடிக்கையாளர் அனுபவத்தை மேம்படுத்துவது எப்படி என்பதை எளிதில் கற்றுக்கொள்ளலாம். இவர் வெறும் ஷேர் ஆட்டோ ஓட்டுநர் மட்டுமல்ல,பேராசிரியர்!” எனப் புகழாரம் சூட்டியுள்ளார்!

 May be an image of 1 person and sitting

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக