ஞாயிறு, 30 ஜனவரி, 2022

விஜய் மக்கள் இயக்கத்தினருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுப்பு

மின்னம்பலம் : வரவிருக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக, போட்டியிட முடிவு செய்துள்ள நிலையில்... இதுகுறித்த ஒரு முக்கியமான கூட்டம் நேற்று ஜனவரி 29ஆம் தேதி கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பனையூரில் அமைந்திருக்கும் விஜய் மக்கள் இயக்கத்தின் அலுவலகத்தில் நடைபெற்றுள்ளது.
சில தினங்களுக்கு முன் விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், விஜய்யைச் சந்தித்து பேசினார். அதற்கு முன்னதாகவே விஜய்யும் தனக்கு நெருக்கமான தனிப்பட்ட நண்பர்களுடன் தற்போதைய அரசியல் சூழல் தொடர்பான ஆலோசனைகளை செய்துள்ளார். இந்தப் பின்னணியில் தன்னை சந்தித்த புஸ்ஸி ஆனந்திடம் தேர்தல் தொடர்பான முக்கியமான சில முடிவுகளை விஜய் தெரிவித்துள்ளார்.

“நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் அனைத்து வார்டுகளுக்கும் நாம் போட்டியிட வேண்டாம். நமக்கு எங்கே வெற்றிக்கான வாய்ப்புகள் இருக்கிறதோ அங்கு மட்டும் போட்டியிடலாம்

அதிகமான இடங்களில் வேட்பாளரை நிறுத்தி குறைவான வாக்குகளைப் பெற்று நமது மதிப்பை குறைத்துக்கொள்ள வேண்டாம். நமது நிர்வாகிகள், ரசிகர்களின் உழைப்பும் வீணாக வேண்டாம்” என்று புஸ்ஸி ஆனந்த்திடம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார் விஜய்.

இந்த அடிப்படையில்தான் நேற்று பனையூரில் உள்ள விஜய் மக்கள் இயக்க அலுவலகத்தில் 11:15 மணிக்குத் தொடங்கிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மதியம் 1:45 வரை நீடித்தது. இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முழுவதிலும் இருந்து 150 விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள்.

ஏற்கனவே விஜய்யிடம் நடத்திய ஆலோசனையின்படி இக்கூட்டத்தில் பேசிய புஸ்ஸி ஆனந்த்,

“உள்ளாட்சித் தேர்தலில் நாம் யாருடனும் கூட்டணி இல்லை. நாம் தனித்து தான் போட்டியிட இருக்கிறோம். போட்டியிட விருப்பமுள்ளவர்கள் அந்தந்த மாவட்ட தலைவர்களிடம் உடனடியாக செல்லுங்கள்.

நமது மக்கள் இயக்கம் வலுவாக இருக்கும் பகுதிகள், நமது செல்வாக்கில் வெற்றி பெறுவோம் என்று நாம் உறுதியாக நம்பக்கூடிய பகுதிகளில் மட்டும் நாம் நின்றால் போதும். அனைத்து இடங்களிலும் நின்று நம் உழைப்பை விரயமாக்க வேண்டாம். இப்போதைக்கு யாரையும் பகைத்துக் கொள்ளவும் வேண்டாம்.

இப்போது நமக்கு பொது சின்னம் கிடைக்குமா என்பது தெரியவில்லை. அது குறித்த ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளோம். தலைவர் விஜய் நமது வேட்பாளர்களுக்கு ஆட்டோ சின்னம் கிடைப்பதற்கான முயற்சிகளில் இறங்க சொல்லி இருக்கிறார்” என்றவுடன் கைதட்டல் அதிகரித்தது.

தொடர்ந்து பேசிய ஆனந்த், “2025இல் நீங்கள் நினைக்கும் இடத்தில் நமது தளபதி இருப்பார். அனைவரும் ஒற்றுமையுடன் இருந்து தேர்தலை சந்தித்து வெற்றிகளைப் பெறுவோம்” என்று பேசியிருக்கிறார்.

இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட சில நிர்வாகிகளிடம் பேசினோம்.

“கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாங்கள் திமுக கூட்டணியை ஆதரித்தோம். விஜய் மக்கள் இயக்கத்தில் இருக்கும் பலர் திமுகவின் ஐ பேக் டீமில் வேலை செய்தோம். தேர்தலுக்குப் பிறகும் மக்கள் இயக்கத்தினர் சிலர் இப்போதைய திமுக எம்.எல்.ஏக்கள் சிலருடன் தொடர்ந்து பயணிக்கிறார்கள்.

திமுக இப்போது தான் ஆட்சிக்கு வந்துள்ளது. நல்ல பெயர் எடுத்துள்ளது. எனவே இப்போது அவசரப்பட தேவையில்லை என்று கருதுகிறார் விஜய். அதை நீங்கள் மின்னம்பலத்தில் உதயநிதிக்காக காத்திருக்கும் விஜய் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

2026 தான் எங்கள் இலக்கு. அதனால்தான் இப்போது அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் போட்டியிட வேண்டாம் என்றும் தேர்தல் களத்தைப் பழகுவதற்காக சில இடங்களில் போட்டியிடலாம் என்றும் விஜய் உத்தரவிட்டுள்ளார்‌. போட்டியிடாத இடங்களில் உங்கள் விருப்பப்படி தனிப்பட்ட முறையில் யாரை வேண்டுமானாலும் ஆதரியுங்கள் என்று கூட்டத்தில் சொல்லி இருக்கிறார்கள். திமுகவை கூட ஆதரிக்கலாம்” என்கிறார்கள் அவர்கள்.

பனையூரில் நடந்த கூட்டத்தை நடிகர் விஜய் தனது நீலாங்கரை வீட்டிலிருந்து காணொலி மூலமாகப் பார்த்திருக்கிறார்.

வணங்காமுடி

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக