வெள்ளி, 7 ஜனவரி, 2022

ஓபிசி பிரிவினருக்கு 27% இட ஒதுக்கீடு: உச்ச நீதிமன்றம் உறுதி!

 மின்னம்பலம் : மருத்துவ படிப்புகளில் அகில இந்திய இட ஒதுக்கீட்டில் ஓபிசி பிரிவினருக்கு 27 சதவிகிதம் மற்றும் பொருளாதாரத்தில் பின்தங்கிய பிரிவினருக்கு 10% இட ஒதுக்கீட்டை இந்த ஆண்டு அமல்படுத்துவது குறித்துக் கடந்த ஜூலை 19 ஆம் தேதி பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்தார்.
இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
ஆனால் இந்த அரசாணைக்கு எதிராக பல்வேறு முதுகலை நீட் மாணவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். இந்த சூழலில் திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இவ்விவகாரம் தொடர்பாக மனு ஒன்றும் தாக்கல் செய்யப்பட்டது.

அதில் 27 சதவிகித இட ஒதுக்கீடு முறையை இந்த ஆண்டு அமல்படுத்துவதில் எந்த தடையும் விதிக்கக் கூடாது என்று வலியுறுத்தியிருந்தது.

இந்த வழக்குகள் காரணமாக முதுகலை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நிறுத்தி வைக்கப்பட்டது.

கடந்த நவம்பர் மாதம் இந்த மனுக்களை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்தது. அப்போது மத்திய அரசு தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, 10 சதவிகித இட ஒதுக்கீட்டுக்கான வருமான வரம்பு 8 லட்சம் ரூபாய் என்ற வரையறையை மறுபரிசீலனை செய்யத் தயார் என்றும் அதுவரை மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு நடைபெறாது என்றும் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து ரிட் மனுக்கள் மீதான விசாரணையை உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்திருந்தது.

நேற்றும், நேற்று முன்தினமும் விசாரணை நடைபெற்ற நிலையில் மத்திய அரசு தரப்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வைத் தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

திமுக சார்பில் மூத்த வழக்கறிஞர் வில்சன் ஆஜராகி மருத்துவ கல்வியில் மதிப்பெண் அடிப்படையில் மட்டும் தகுதியை மதிப்பிடக்கூடாது. மனிதர்களின் விழுமியங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டார்.

அதுபோன்று பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள வகுப்பினரை அடையாளம் காண்பதற்கான வருமான உச்சவரம்பை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்திருந்த மத்திய அரசு, அந்த வகுப்பினருக்கான வருமான உச்ச வரம்பு 8 லட்சமாகவே தொடரும் என்றும் கூறியது.

இந்த சூழலில் இவ்வழக்கில் இன்று நீதிபதிகள் டிஓய் சந்திரசூட் மற்றும் போபண்ணா அமர்வு தீர்ப்பு வழங்கியது.

அப்போது, 8 லட்சம் ரூபாய் வருமான வரம்புக்கான சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட நிதித் துறை முன்னாள் செயலாளர் அஜய் பூஷன் பாண்டே குழுவின் பரிந்துரைகளை ஏற்பதாகக் கூறி, முதுநிலை மருத்துவ படிப்புக்கான கலந்தாய்வு நடத்த அனுமதி அளித்து நீதிபதிகள் இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.

அதேபோல மருத்துவம் மற்றும் பல் மருத்துவம் பட்டப்படிப்பு மற்றும் மேற்படிப்புகள் அகில இந்திய ஒதுக்கீட்டில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவிகித இட ஒதுக்கீட்டையும் நீதிபதிகள் உறுதி செய்தனர்.

மேலும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 10 சதவிகித இடஒதுக்கீட்டை நடப்பு கல்வியாண்டில் மட்டும் கடைப்பிடித்து கலந்தாய்வை நடத்த உத்தரவிட்ட நீதிபதிகள், 10 சதவிகித இட ஒதுக்கீடு தொடர்பான வரையறை குறித்து மார்ச் 3ஆவது வாரத்தில் விசாரிக்கப்படும் என்றும் கூறினர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக