செவ்வாய், 18 ஜனவரி, 2022

ஜாதி வெள்ளையர்கள் ஏற்படுத்தியதா? ஜாதியமைப்புக்கு சாமரம் வீசிய ஆங்கில பிரெஞ்சு அதிகாரிகள்! 1926 இல் வெளியான அவாள் நூல் விபரங்கள்

May be an image of 5 people and text that says '"தெய்வாம்ச அவதாரமாகிய விக்டோரியா சக்கரவர்த்தினியின் ராஜ பரம்பரையைச் சேர்ந்த நம்முடைய பிரிட்டிஷ்ராஜா அவர்களுடைய ஆளுகைக்குள் இந்திய புண்ய பூமியின் பிரஜைகளை வாழும்படி அமைத்த சர்வேஸ்வரன் ஸநாதனதர்மிகளாக நம்முடைய ஜாதி அமைப்பு மத தர்மத்திற்கு ஹானி ஸம்பவிக்கும்படி நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார் என்பது ஸத்தியம்' -ட.A.ரெங்கஸாமி அய்யர் அவர்கள் எழுதிய "ஹிந்து மதத்தின் பிராணாதாரம் ஜாதி அமைப்பும் ப்ராம்மண்யமுமே" எனும் நூல்!'

Dhinakaran Chelliah  : ஜாதி வெள்ளையர்கள் ஏற்படுத்தியதா?
சமீப காலங்களில் ஹிந்து மத மக்களுக்குள் வர்ண ஜாதிப் பிரிவினை துவேஷத்தை ஏற்படுத்தியவர்கள் வெள்ளையர்கள் எனவும்,ஜாதி ஹிந்துக்களுக்கு எதிராக பட்டியலினத்தவர்களை தூண்டியவர்கள் வெள்ளையர்கள்
எனவும் ஒரு பிரிவினர்,தொடர்ந்து பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறார்கள். வெள்ளையர்களுக்கு (ஆங்கிலேயர் மற்றும் பிரஞ்சுக்காரர்கள்) எதிராக இவர்கள் எழுதுவதையும் பேசுவதையும் தட்டிக் கேட்பதற்கு யாரும் இல்லை என்பதே இதற்குக் காரணம்.
இந்த வாதங்களை, 1926 ஆம் ஆண்டு வெளியான “ஹிந்து மதத்தின் பிராணாதாரம் ஜாதி அமைப்பும் ப்ராம்மண்யமுமே”எனும் நூல் தூள் தூளாக்குகிறது. சனாதனவாதிகளின் கடந்த கால  நடவடிக்கைகளை வெளிச்சம் போட்டுக் காட்டக் கூடிய  முக்கியமான ஆவணம் இந்த நூல் ஆகும்.இந்த நூலை எழுதியவர் L.A.ரெங்கஸாமி அய்யர் அவர்கள்.
சனாதனவாதிகள் எப்பேற்பட்ட விஷமப் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர்  என்பதை இந்த நூலினைப் படிக்கிற எந்த ஒரு பாமரனும் உணர்ந்து கொள்ள முடியும்.

இந்த நூல் முழுக்கவே வர்ண ஜாதி மற்றும் பிராமணீயத்தை ஆதரித்து அவ்வப்போது நாளிதழ்களில் வெளிவந்த 30க்கும் மேற்பட்ட ஆங்கிலேய,பிரெஞ்சு வெள்ளைய ஆட்சியாளர்கள், மதகுருமார்கள், பிரபுக்கள்,
அதிகாரிகள், பிரமுகர்கள், எழுத்தாளர்கள் போன்ற பலரது  அபிப்ராயங்கள் கருத்துகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளிவந்துள்ளது.
நூலின் இன்னொரு தலைப்பு “ஹிந்து மதத்திற்கு ஜாதி அமைப்பின் நன்மையும் அதின் அழிக்க முடியாத்தன்மையும்” ஆகும்.
இனி நூலில் குறிப்பிடப்பட்டுள்ள ஒரு சில வெள்ளையர்களின் அபிப்ராயங்களைப் பார்ப்போம்;
1.இந்தியாவிற்கு அனர்த்தத்தை உண்டாக்கும் உண்மையான அபாயமானது, எங்கே ஜாதிக்கட்டானது உடைக்கப்பட்டுப் போய்விடுமோ என்பதினாலேயே ஒழிய அது இருந்தால் தான் இத்தேசத்திற்கு ஷேமமென்றும் அது உடைக்கப்பட்டுப் போகும்  பட்சத்தில் இந்தியாவிற்கு வினாசம் சம்பவிக்குமென்றும் ஸர் ஜார்ஜ் பர்வுட் என்பவர் எழுதியிருக்கிறார்.
2. ஜாதி ஏற்பாடானது ஆத்மபரித்யாகத்தை அபிவிருத்தி செய்கிறதென்றும் ஒழுங்கு படுத்தப் பட்டிருக்கின்ற ஜன சமூகத்திற்கு வியக்தித்வத்தினுடைய  கீழ்ப்படிதலைச் சாதித்துக் கொடுக்கிறதென்றும் ஜனங்கள் பாவம் செய்வதைத் தடுத்துக் கொண்டிருக்கிறதென்றும் மானியர் விலியம்ஸ் என்பவர் எழுதியிருக்கிறார்.
3.ஹிந்துக்களின் மனதானது வழக்கத்தையும் அனுஷ்டானத்தையும் கெட்டியாய் ஒட்டிக் கொண்டிருக்கிறது என்றும் அதனுடைய விதிகளோ இன்னம் அதிகக்  கெட்டியாக்கப்பட்ட  வழக்கங்களாயிருக்கின்றன என்றும், அந்த உறுதிப்பாடானது மதத்தினுடையவும்  நீதிநெறிக்குரியவும் அனுபவ வித்தைக்குரியவும்  வியாபாரத் தொழிலினுடையவுமாகிய ஹிந்து மதக் கொள்கைகளை வற்புறுத்திக் கொண்டேயிருக்கும் முக்கிய சக்தியாயிருக்கின்றதென்றும் அது ஜன சமூக ஒழுங்குக்கு முக்கியமான சேவை புரிவிக்கின்றதென்றும் பிரெஞ்சு மிஷிணரியாகிய அப்பிடுபாய்ஸ் என்பவர் எழுதியிருக்கின்றார்.
4.ஜாதியிருப்பதினால் இந்தியாவின் ராஜரீகத்தினுடையவும் கைத்தொழிலினுடையவும்  முன்னேற்றத்திற்கு யாதொரு இடஞ்சலுமில்லையென்றும், ஹிந்துக்களானவர்கள் முஸ்லிம் பார்ஸி கிறிஸ்தவர்கள் அல்லது பஞ்சமர்களோடு ராஜீய வியாபாரக் கைத்தொழில் முதலிய விஷயங்களில் தாராளமாய்க் கலக்க ஜாதியிருப்பதினால் தடையில்லை என்றும் ஹெர்பர்ட் ஸ்பென்சர் என்பவர் எழுதியிருக்கிறார்.
5. கீழ்ஜாதியோர்கள் தங்களை மேல்ஜாதியோர்கள் நடத்தும் பாங்கைப் பற்றி தப்பாக அபிப்ராயம் கொள்ளவில்லையென்றும் கீழ்ஜாதியோர்கள் மேல் ஜாதியோர்களால் வழக்கமாயாவது ஓரோர் சமயத்திலேனுமாவது  கெடுதலாய் நடத்தப்படுகிறார்களென்று  சொல்வது உண்மை அல்லவென்றும் ஜாதி வித்தியாசத்திற்கு இந்தியாவிற்குள் பேர்போன இடமாகிய மதுரை ஜில்லாவின் அனுபோகத்தைக் கொண்டு தான் நிச்சயமாய்ச் சொல்லக் கூடுமென்றும் ஸர் ஜான் ரீஸ் என்பவர் எழுதியிருக்கிறார்.
இறுதியாக,
“இப்பேர்பட்ட வாக்குதானங்களை அளித்தருளிய தெய்வாம்ச அவதாரமாகிய விக்டோரியா சக்கரவர்த்தினியின் ராஜ பரம்பரையைச் சேர்ந்த நம்முடைய பிரிட்டிஷ்ராஜா அவர்களுடைய ஆளுகைக்குள் இந்திய புண்ய பூமியின் பிரஜைகளை வாழும்படி அமைத்த சர்வேஸ்வரன் ஸநாதனதர்மிகளாக நம்முடைய  ஜாதி அமைப்பு மத தர்மத்திற்கு ஹானி ஸம்பவிக்கும்படி நம்மை ஒருநாளும் கைவிட மாட்டார் என்பது ஸத்தியம்” என இந்நூல் முடிகிறது.

May be an image of monument
கடைசியாக சொல்லப்பட்டுள்ள இந்த வாக்கியம் அதி முக்கியமானது.புரிந்தவர்கள் பாக்கியவான்கள்! கவனிக்கவும், பிரிட்டிஷ் ராணியும் ராஜாவும் தெய்வாம்ச அவதாரமாம்?!
அன்றைய அரசர்கள்,ராஜா,மன்னர்கள் முதல்,முகலாயர்கள்,ஐரோப்பியர்கள் என இன்றைய ஐனநாயக ஆட்சியாளர்கள் வரை சனாதன தர்மிகள் கடைப்பிடிக்கும் ஒரே கொள்கை “சந்தர்ப்பவாதமும்,பிராமணீயமும்” மட்டுமே!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக