ஞாயிறு, 26 டிசம்பர், 2021

கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!

கீழவெண்மணியில் சீமான் அஞ்சலி, தகராறு!

மின்னம்பலம் : நாகை மாவட்டம் கீழவெண்மணியில் 44 விவசாயத் தொழிலாளர்கள் எரித்துக்கொள்ளப்பட்டதன் 53ஆவது நினைவுநாள் நேற்று அனுசரிக்கப்பட்டது.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் அமைக்கப்பட்ட நினைவிடத்தை சிபிஎம் கட்சியானது புதுப்பித்துள்ளது. அந்தக் கட்சியின் மாநிலச் செயலாளர் கே. பாலகிருஷ்ணன் நேற்று காலையில் இதைத் திறந்துவைத்தார். அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.இராமகிருஷ்ணன் முதலிய பல தலைவர்களும் கலந்துகொண்டனர்.
தியாகிகள் நினைவு ஜோதிப் பயணம் உள்பட பல நிகழ்வுகள் நடைபெற்றன. மாநிலம் முழுவதுமிருந்து ஆயிரக்கணக்கானவர்கள் கீழவெண்மணி நினைவிடத்துக்கு வந்து அஞ்சலி செலுத்திச்சென்றனர்.



நாகைக்குச் சென்றிருந்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானும் தன் கட்சி நிர்வாகிகளுடன் அங்கு சென்று தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்தினார். மலர் வளையம் வைத்து மலர் தூவி மரியாதைசெய்த பின்னர், அவர்கள் நாம் தமிழரின் வீரவணக்கம் என்று முழக்கமிட்டனர். அப்போது அங்கு வந்த சிபிஎம் கட்சியைச் சேர்ந்த ஒருவர், இங்கு முழக்கமிடக்கூடாது எனக் கூற, சீமானும் அவரின் கட்சியினரும் பதிலுக்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

தடுத்தவரை நோக்கி, நீ யார் அதைச் சொல்ல என சீமான் கோபமாகக் கேட்டார். நாம் தமிழர் கட்சியின் வடசென்னை பிரமுகர் காளியம்மாள், அஞ்சலி செலுத்தத்தானே வந்தோம்; ஏன் இப்படி செய்கிறீர்கள் என்றனர்.

தகராறு சூழல் ஏற்படவே மூத்த தோழர் ஒருவர் வந்து, நாம் தமிழர் கட்சியினரை அஞ்சலிசெலுத்துமாறு சமாதானம்செய்தார். ஆனால், அதற்கு முன்னரே அஞ்சலி செலுத்திவிட்டதால் சீமானும் அவருடன் வந்தவர்களும் அங்கிருந்து புறப்பட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சீமான்,

”தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தவந்தால் இப்படிச் செய்கிறார்கள்; சாதி ஒடுக்குமுறைக்கு, வர்க்க ஒடுக்குமுறைக்கு உழைக்கும் மக்கள் பலியாகியிருக்கிறார்கள்; அவர்களுக்கு வணக்கம் செலுத்துவது, அனைவருக்கும் பொறுப்பும் கடமையும் இருக்கிறது; ஒரு கட்சிக் கொடிதான் இருக்கவேண்டும்; மற்ற கொடிகள் கூடாது என்கிறார்கள்; இங்கே பாருங்கள் எத்தனை கொடிகள்; இது பொது சொத்துதானே... மற்றது, இது யாருடைய தாய்தந்தையரின் நினைவிடமும் இல்லை. இப்படிச் செய்வதுதான் பொதுவுடைமையா..?” என்றார்.

- முருகு

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக