ஞாயிறு, 26 டிசம்பர், 2021

ஹிம்லர் ..ஹிட்லரின் நம்பர் 2 ஆரிய வெள்ளை தூய்மை இனவாத கொலைகாரன்

ஹென்றிச் ஹிம்லர் ..  மிகவும் அமைதியானவன் . அசாத்திய திறமைசாலி . ஹிட்லர் அரங்கேற்றிய  இன அழிப்புக்களின் முக்கிய சூத்திரதாரியே இவன்தான்
ஹிட்லர் மீது எல்லையற்ற ஈடுபாடும்   எந்த குரூரத்திற்கும் அஞ்சாத ஒரு வித பக்தி உணர்வும் கொண்டவன்.
தனது அதிகார போட்டியில் தனக்கு எதிரானவர்களை ஒழித்து கட்டி மிக வேகமாக ஹிட்லருக்கு அடுத்த இடத்திற்கு   வந்து சேர்ந்தான்
ஆனால் நாசிகளின் எல்லைகடந்த அதிகாரம் முடிவுக்கு வந்தபோது  ஹிட்லருக்கு மிக மோசமான ஒரு நம்பிக்கை துரோகத்தையும் பின்பு செய்தான்
1900 ஆம் ஆண்டு அக்டொபர்  மாதம் 7 ஆம் தேதி ஒரு பள்ளிக்கூட உதவி தலைமை ஆசிரியருக்கு இரண்டாவது மகனாக பிறந்தான்
படிக்கும் காலத்தில் பல குறைபாடுகள் இருந்தாலும் கவனமாக படித்து கெட்டிக்கார மாணவன் என்ற பெயரை எடுத்திருந்தால்
கிறிஸ்தவ தேவாலய நிகழ்வுகளில் பக்தியோடு பங்கெடுத்து கொண்டான் .
நான் எப்பொழுதும் கடவுளுக்கு விசுவாசமாகவே இருப்பேன் கடவுளை விரும்புகிறேன் என்று தனது டயரியில் எழுதியிருந்தான்
ஆனால் பிற்காலத்தில் தேவாலய பாதிரிகளையே ஈவு இரக்கம் இல்லாமல் கொன்றான்  
தனது குடும்பதில் இருந்த அரச குடும்ப தொடர்புகளால் இவன் அதிகாரவர்கத்திற்கு நெருங்கி இருந்தான்
படைகளில்  சேர்ந்து நாட்டுக்காக சேவையாற்ற விரும்பினான்
தனது 17 வயதில் கடற்படையில் ஒரு அதிகாரியாக  சேர்வதற்கு முயன்றான்
ஆனால் கண்பார்வை குறைவு காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை
பின்பு ராணுவ பயிற்சி கூடத்தில்  சேர்ந்தான் . பயிற்சி காலம் முடிவடையும் காலத்தில் முதலாவது உலக யுத்தம் முடிவடைந்திருந்தது

அதன் பின்பு பல கம்யூனிச எதிர்ப்பு குழுக்களில் சேர்ந்து சுமார் இரண்டு வருடங்கள் ஒரு திக்கு திசை தெரியாமல் சோர்வுற்று இருந்தான்  
இந்த காலக்கட்டங்களில் ஐரோப்பா முழுவதும் யூதர்களுக்கு எதிரான பல பிரசுரங்கள் வெளியாகி கொண்டிருந்தன
யூதர்களின் உலகப்பெரும் சதி என்ற பிரசாரம் பெருமளவில் பரவிய காலங்கள் அவை
அவற்றை ஆர்வத்துடன் படித்தான் .
ஹிம்லரின் குடும்பம் அப்படி ஒன்றும் யூதர்களுக்கு எதிரான கருத்துக்கள் கொண்டவர்கள் அல்ல.

முதலாவது உலக மகா யுத்தத்தின் இறுதியில் ஜெர்மனி  படுமோசமாக தோற்கடிக்கப் பட்டிருந்தது
ஜெர்மானியர்களின் பொருளாதாரம் அதல பாதாளத்தில் விழுந்து போயிருந்தது
சமூக உளவியலும் மீள முடியாத ஒரு சோர்வு நிலையையே எட்டி இருந்தது  
மக்களிடையே பயமும்  வெறுமையும் குடிகொண்டிருந்தது
இந்த நிலையில் பவரியா  அரச குடும்பத்து ஆசிரியரின் மகனான ஹிம்லர் சமூகத்தில் தனது ஸ்தானத்தை கட்டமைக்கும் வாய்ப்பு இருப்பது கண்டுகொண்டான்

ஹிம்லரின் தந்தை ஜெர்மன் ஆரியன் இனமே மனித  சமுதாயத்தின் எஜமானர்கள் என்ற கோட்பாட்டை ஹிம்லரின் மனதில் விதைத்திருந்தார்
ஆனால் இருபதாம் நூற்றாண்டில் ஆரம்ப காலக்கட்டங்களில் ஜெர்மன் தேசத்தில் அந்த எஜமான இனத்திற்கான எந்த சுவடையும் ஹிம்லாரால் காணமுடியவில்லை
எல்லாமே விழுந்து நொறுங்கி போயிருந்தது
ஜெர்மனியை விட்டு வெளியேறி ஸ்பெயின் துருக்கி பெரு ரஷ்யா போன்ற நாடுகளுக்கு சென்றுவிடவும் எண்ணினான் . ஆனால் ஹிம்லரால் அந்த நாடுகளுக்கு செல்லமுடியவில்லை
 

உக்கிரேனில் ஒரு எஸ்டேட் மேனேஜராக முயற்சி செய்தான் . ரஷ்யா தூதரகத்தில் அதற்கான முயற்சியையும் செய்து பார்த்தான் , அதுவும் சரிப்பட்டு வரவில்லை
பின்பு விவசாய படிப்பை மேற்கொண்டான்  ஒரு உரத்தயாரிப்பு நிறுவனத்தில் மானேஜராக அமர்ந்தான்
1923 இல் நாசனில்ஸ்ட் சோஷலிஸ்ட் வேர்க்கஸ் பார்ட்டி அதாவது நாசி பார்ட்டியில் சேர்ந்தான்   
அக்கட்சியின் ஆயுத குழுக்களில் ஒன்றான எர்னஸ்ட் ரோஹம் என்பவரின் தலைமையில் ஜெர்மன் அரசுக்கு எதிரான ஒரு ஆயுதபுரட்சியை அது மேற்கொண்டது
அது தோல்வியில் முடிந்தது . பலரும் கைது செய்யப்பட்டார்கள்  பலரோடு சேர்ந்து ஹிட்லரும் ஹிம்லரும் கூட கைது செய்யப்பட்டார்கள்
பின்பு போதிய சாட்சியம் இன்மையால் ஹிம்லர் விடுதலை செய்யப்பட்டான்
இதனால் ஹிம்லருக்கு வேலையும் போய்விட்டது வருமானம் இல்லை  .
மீண்டும் பெற்றோரின் தயவில் வாழவேண்டிய நிர்பந்தம் உண்டானது  
நாசி கட்சியால் புதிதாக சேர்க்கப்பட்டிருந்த பலரை போல ஹிம்லர் உடனடியாக ஹிட்லரின் ஆதரவாளனாக மாறிவிடவில்லை

ஜெர்மன் ஆரிய இனத்தின் உயர்வை மீண்டும் பெறுவதற்கு யூதர்களை தோற்கடித்தல் மட்டுமே ஒரு தீர்வு என்று ஹிம்லரின் மனதிற்குள் கருத்து உருவானது
 

 நாஸிகட்சியின் தேசிய சோஷலிச கொள்கைகளை முன்னெடுத்து செல்வதில் முனைப்பு காட்டினான்
நாசி கட்சியின் ராய்ச்ட்டாக் தொகுதி வேட்பாளரான கிரெகோர் ஸ்டாசாருக்கு உதவியாளராக சேர்ந்தான்
அவரின் வெற்றிக்காக பவரியா bavaria மாகாணத்திலும் மற்றும் உள்ளூரிலும் பட்டி தொட்டி எங்கும் மோட்டார் சைக்கிளில் திரிந்து பொறி பறக்கும் பிரசாரத்தை மேற்கொண்டான்.
அவை பெரிதும் .யூதர்களுக்கும் கம்யூனிஸ்டுகளுக்கு எதிராக மோசமான வெறுப்பு பிரசாரமாகவே இருந்தன.

இதற்காக ஹிம்லருக்கு 120 ரிச்மார்க் மாதசம்பளமாக வழங்கப்பட்டது
இந்த காலக்கட்டத்தில் சிறையில் இருந்த ஹிட்லரிடம் இருந்து நாசி கட்சியை கைப்பற்றுவதற்கு கிரகோர் ஸ்டார்சார்  முயற்சியை மேற்கொண்டார் .
இந்த முயற்சிக்கு ஹிம்லரும் ஆதரவாக இருந்தான்
இதற்கிடையில் மார்கா என்ற ஒரு செவிலியர் மீது ஹிம்லர் காதல் கொண்டான்
ஆரிய இனத்தின் அத்தனை அம்சங்களும் ஹிம்லரிடம் இருப்பதாக காதலி மார்க்க கருதினாள்,
இவர்களின்  திருமணம் (1928 ஜூலை 3 ஆம் தேதி) நடைபெற்றது
காதலி மார்காவின் சொத்துக்களின் பயனாக ஒரு கோழிப்பண்ணையை ஆரம்பித்தார்கள் புதுமண தம்பதிகள்

மறுபுறத்தில் ஹிம்லரின் அரசியல் செல்வாக்கு நாசி கட்சி வட்டாரங்களில் வெகு வேகமாக முன்னேறி கொண்டே இருந்தது
1926 இல் நாஸிகட்சியின் பிரசார குழுவின் உதவி தலைவரானான்
அதன் பின்பு வேகமாகவே நாசிகளின் விசேஷ படையான எஸ் எஸ் இன் உதவி தலைவராகவும் முன்னேறினான்

இதே ஆண்டு ஹிட்லர் சிறையில் இருந்து விடுபட்டு கட்சிக்குள் புயலை கிளப்பி கொண்டு தனது மெயின் காம்ப் என்ற நூலை வெளியிட்டார் .
இதுவரை கிரெகோர் ஸ்டார்சுக்கு ஆதரவளித்து வந்த ஹிம்லர் தனது ஆதரவை ஹிட்லருக்கு மடை மாற்றினான்
வெகு வேகமாகவே ஹிட்லரிடம் முற்று முழுதான விசுவாசத்திற்கு உரியவனாக மாறினான்.

1920 களிலேயே ஹிட்லருக்கு எஸ் எஸ் விசேஷ படையை உருவாக்கும் எண்ணம் இருந்தது
தேவை ஏற்படின் சொந்த சகோதர்களையே கொல்லக்கூடிய அளவு விசுவாசம் மிக்கதாக இருக்கவேண்டும் என்று கருதியிருந்தான் ஹிட்லர்

அந்த பணிக்கு சரியான ஒரு அடியாளாக குரூரம் நிறைந்த ஹிம்லர் தெரிவு செய்யப்பட்டான்
1929 ஜனவரி 6 ஆம் தேதி அந்த எஸ் எஸ் படைக்கு பொறுப்பாளனாக ஹிம்லர் நியமனம் பெற்றான்

எஸ் ஏ படையில் இருந்து கூர்மையாக பொறுக்கி எடுத்து எஸ் எஸ் படையில் சேர்த்தார்கள்
எஸ் ஏ படையில் பெருமளவிலான படையினர் இருந்தனர்  நாஸிகட்சியின் ஒரு பிரைவேட் ஆர்மியாக அது இருந்தது
புதிதாக அமைக்கப்பட்ட் எஸ் எஸ் படையானது அளவில் சிறியதாக ஆனால் அதி தீவிரமான படையணியாக உருவானது

ஹிம்லர் தனது பாசிச முத்திரையை எஸ் எஸ் படையின் ஒவ்வொரு படிநிலையிலும் செயல்படுத்த ஆரம்பித்தான்  சுமார் 200 பேர்வரை அப்போது அதிலிருந்தனர்
சில மாதங்களில் சுமார் ஆயிரம் பேர்வரை இருந்தனர்  1934 இல் அதன் தொகை சுமார் 50 ஆயிரத்தை தொட்டிருந்தது
இதே ஆண்டு இந்த எஸ் எஸ் படையில் இருந்து தனியாக ஒரு 1 c என்ற தனி அணியை ஹிம்லர் உருவாக்கினான்
இது ஒரு உளவுப்படையாகும் .. நாஸிகட்சிக்குள்ளே ஆட்களை வேவு பார்ப்பதே இதன் பணியாகும் . அதாவது வேவு பார்த்தால் களை எடுத்தல் போன்ற கொலைத்தொழிலுக்கு எதுவாக இது செயல்பட்டது.

1934 லில் எர்னஸ்ட் ஹாம் தலமையில்  இருந்த எஸ் ஏயின் தேவை ஹிட்லருக்கு இருக்கவில்லை
வெறுமனே தெருவில் இருந்து பொறுக்கிய சண்டியர் ரக ஆர்மியை விட சக்திமிக்க தரமான படைகள் தற்போது ஹிட்லரை வசம் உருவானது

எஸ் ஏ யின் சகவாசம் ஹிட்லரின் அதிகாரத்திற்கு அனாவசியம் மட்டுமல்ல ஹிட்லரின் செல்வாக்கை குறைக்கவும் கூடும் என்ற முடிவுக்கு ஹிட்லர் வந்திருந்தான்

இந்த செய்தி ஹிம்லரை மகிழ்வடைய செய்தது
ஹிம்லரின் அரசியல் ஆரம்பமானதே எஸ் ஏ யில் இருந்துதான் அதன் தலைவரான   கிரெகோர் ஸ்டாசார் உட்பட ஏழுபேருக்கு ஹிட்லர் மரணதண்டனை விதித்தார்   
இதன் பின்னணியில் ஹிம்லர் இருந்தான்  .

ஒரு காலத்தில் தனக்கு சம்பளம் தந்த அரசியல் முதலாளியான  கிரெகோர் ஸ்டாசாரின் மரண தண்டனையில் உடனடியாக பெரும் பயனடைந்தது ஹிம்லர்தான்

நஷனல் சோசலிசம் என்ற கொள்கை அடிப்படையில் உருவான நாசி கட்சி இந்த இடத்தில் முற்று முழுதாக ஒரு பாசிச கொலை இயந்திரமாக மாறிப்போனது

1935 இல் ஜெர்மனியில் ஹிட்லருக்கு அடுத்தபடியாக மிகப்பெரும் சக்திமானாக ஹிம்லர் உருவெடுத்தான்.
இவனின் பொறுப்புகள் ஹிட்லரின் எஸ் எஸ் படைகள் . ஜெர்மன் போலீஸ் மற்றும் யூதர்களை அடைத்துவைத்திருக்கும் கெஸ்டாப்போக்கள்  போன்றவை எல்லாம் ஹிம்லரின் நேரடி கட்டுப்பாட்டுக்குள் வந்தன.

ஜெர்மனியின் அமைச்சரவையில் சர்வ வல்லமை உடைய தலைவர் போன்று ஒரு அமைச்சருக்கு நிகராக நடந்து கொண்டான்
1935 இல் சட்ட பல்கலை கழகத்தில் உரையாற்றும் போது மிக தெளிவாக தனது நிலையை தெளிவுபடுத்தினான்
எனக்கு சட்ட சிக்கல்களை பற்றியோ சம்பிரதாயங்கள் பற்றியோ எந்த கவலையும் கிடையாது புதிய ஜெர்மனிக்கு எது தேவையோ அதை செய்வது ஒன்றுதான் உங்கள் முன்னால் இருக்கும் ஒரே ஒரு வழியாகும்.
அதாவது புதிய தூய்மையான வெள்ளை ஆரிய ஜெர்மனிக்கு எது தேவை என்று கருதுகிறோமோ அதை நடைமுறைப்படுத்துல் ஒன்றுதான் இனி வேலை .

எஸ் எஸ் படைக்கும் நூறுவீதம் தூய ஆரிய வெள்ளை இனத்தவர்களை மட்டுமே சேர்க்கப்பட்டனர்
ஒவ்வொரு விண்ணப்பங்கள் போட்டோக்களும் நுணுக்கமாக அவதானிக்க பட்டது .தூய்மையான ஆரிய வெள்ளை இனத்தவர்களை மட்டுமே அதிலிருந்து பொறுக்கி எடுத்து கொண்டார்கள்.

1938 அக்டொபேர் 28 ஆம் தேதி பெண்களுக்கு ஒரு முக்கிய அறிவித்தலை ஹிட்லர் அறிவித்தான்
ஒவ்வொரு பெண்களும் எஸ் எஸ் படையினரோடு உறவு கொண்டு குழந்தைகளை பெறவேண்டும்  . அதில் தவறும் பெண்கள் தேசத்துரோக குற்றச்சாட்டுக்கு ஆளாவார்கள்
எந்த ஒரு எஸ் எஸ் ஆர்மியும் குழந்தை பெற்றுக்கொள்ள ஒரு பெண்ணை வேண்டினால் அந்த பெண் மறுக்க கூடாது . மறுத்தால் அது தேசத்துரோகமாகும்

தூய்மையான வெள்ளை ஆரிய இனத்தை பெருக்குவதில் ஹிம்லர் பெரும் ஆர்வம் கொண்டிருந்தான் . 

ஒவ்வொரு படையினனும் போருக்கு செல்வதற்கு முதல்   குறைந்தது ஒரு குழந்தையாவது பெற்று கொள்ளவேண்டும் என்று அறிவித்தான்
ஆண்கள் பல பெண்களோடு உறவு கொண்டு குழந்தைகள் பெற்று  கொள்வதை ஆதரித்தான்
 
 ஜெர்மனியின் மருத்துவ நலத்துறை ஹிம்லரின் கட்டுப்பாட்டுக்குள் வந்தது
தூய ஆரிய இன பாதுகாப்பு என்ற நோக்கத்தில் யூதர்களையும்  ஜிப்ஸிகளையும் மட்டுமல்லாமல் பிரீமேசன்ஸ்களையும்  யெகோவா போன்ற பல்வேறு  மத நம்பிக்கையாளர்கள் மற்றும் ஒருபால் சேர்க்கையாளர்கள் கம்யூனிஸ்டுகள் என்று வகை தொகை இல்லாமல் கொன்றொழிக்க தொடங்கினார்கள்
 

 ஹிட்லரின் ஜெர்மனி 1940 இல் ரஷ்யாவுக்கு படையெடுத்த போது அங்கு நாசிகள் அரங்கேற்றிய கொலைகளையும் கொடூரங்களையும் பற்றி ஒழுங்கான பதிவுகளை பேணினார்கள் .
நடவடிக்கை குழு என்ற பெயரில் ஒரு அதிரடிப்படையை இனக்கொலைகளுக்கு பொறுப்பாக ஹிம்லர் அமைத்திருந்தான்
ஆரிய தூய வெள்ளை இனக்கோட்பாட்டுக்கு ஏற்புடையவர்கள் அல்ல என்று கண்டுகொண்ட அத்தனை பேர்களையும் கொலை செய்தார்கள்
அதன் காரணமாக ஒரு சில மாதங்களிலேயே சுமார் 91 ஆயிரம் யூதர்கள் ஜெகோவா சாட்சிகள் ஒரு பால் ஈர்ப்பாளர்கள் மற்றும் ஜிப்ஸிகள் என்று வகைதொகை இல்லாமல் கொன்றழித்தார்கள்
இந்த கொலைகளின் எண்ணிக்கையால் திருப்தி அடையாத கொடியவன் ஹிம்லர் எப்படி மக்களை  குறுகிய காலத்தில் அதிக அளவில் கொன்றுவிட முடியும் ஆராய்ந்தான்

பெருந்தொகையளவான மக்களை கொலை செய்வது சரியா என்ற கேள்வியே அவனுக்குள் எழுந்ததில்லை.
 

 ஹிம்லரின் முதலாவது கோட்பாடு :  தலைவர் (ஹிட்லர்) தவறுகளுக்கு அப்பாற்றப்பட்டவர் .
இரண்டாவது கோட்பாடு :  இறுதியில் பெறப்படும் முடிவானது அதை நோக்கிய பாதையில் இருக்கும் எந்த விடயத்தையும் நியாமாக்கி விடும் என்பதாகும்

1941 ஆம் ஆண்டு கோடையில் யூதர்களை அடைத்து வைத்திருக்கும் அவுஸ்விச் வதைமுகாம் (concentration camp) பொறுப்பாளரான  ருடால்ப் ஹோஸ் (Rudolf Hoss)   என்பவரை பெர்லின் தலைநகருக்கு அழைத்தான்,

அவரிடம் தலைவர் கூறிய யூத பிரச்சனைக்கான இறுதி தீர்வு பற்றிய செய்தியை கூறினான்
அந்த தீர்வை அமுல்படுத்துவதற்கு அவுஸ்விச்ட் வதைமுகாமையே தான் தெரிவு செய்திருப்பதாக கூறினான்.

ருடால்ப் ஹொசும் Rudolf  Hoss அடால்ப் ஈச்மனும் (Adolf Eichmann னும் அவுஸ்விச் இனக்கொலையை அரங்கேற்றினார்கள் அதற்கு முழுமுதல் பொறுப்பாக ஹிம்லர் இருந்தான்

அந்த அவுஸ்விச்ட் நச்சு வாயு கொலைக்களமானது ஏனைய கொலைக்களங்களுக்கே ஒரு முன்னுதாரணமான மரண தொழிற்சாலையாக செயல்பட்டது
தெரிவு செய்யப்பட மனிதர்கள் அந்த கொலை தொழிற்சாலைக்குள் அழைத்து வரப்படுவார்கள்
அந்த பெரும் கொலை மண்டபத்திற்குள் அதி சக்திவாய்ந்த சிக்லொன் zyklon gaz செலுத்தப்படும்
சரியாக 15 நிமிடங்களுக்குள் அவர்கள் உயிரிழந்து விடுவார்கள்

அடுத்த கட்டமாக தெரிவு செய்யப்படுபவர்கள் கடுமையான தொழில்களில் ஈடுபடுத்த படுவார்கள்  அவர்களும் களைப்பினால் அல்லது பசியினால் இறந்துவிடுவார்கள்

1042 ஆம் ஆண்டு அவுஸ்விச்ட் வதைமுகாமுக்கு கொடியவன் ஹிம்லர் வருகை தந்து எப்படி மக்கள் உயிரிழக்கிறார்கள் என்பதை கண்ணாடி ஜன்னல் வழியாக பார்த்து திருப்தி அடைந்தான்
இக்காட்சிகள் எல்லாம் அவனுக்கு எந்த குற்ற உணர்வையும் கொடுக்கவில்லை
தூய வெள்ளை நிற ஆரிய இனத்தின் மேன்மைக்கான தனது கடமையாக அவன் இந்த கொடுஞ்செயலை கருதினான்.
மேலும் சில வதைமுகாம்களுக்கு அவன் பார்வையிட்டு அங்கு கடமையில் இருந்தவர்களின் அசவுகரியம் பற்றி அறிந்தான்  
உங்களுக்கு என்ன பிரச்சனைகள் இருக்கிறது என்பது பற்றி எனக்கு கவலை இல்லை .. நான் குறிப்பிட்ட விடயங்கள் நடக்கவேண்டும்   அதனால் ஏற்படும்  எந்த பிரச்சனைகளையும் நீங்களே பார்த்து கொள்ளவேண்டும் .
தலைவரின் கட்டளைகள் நிறைவேற வேண்டும் அதுமட்டுமே எமக்கு தேவை என்று  மிக உறுதியாக அவர்களுக்கு  கட்டளையிட்டான்


1944 ஆம் ஆண்டு போரின் போக்கு மாறத்தொடங்கியது .
நாசிகளின் தோல்வி வெளிப்படையாகவே தெரியத்தொடந்தியது
இதே ஆண்டு ஜூலை மாதம் 20 ஆம் தேதி ஹிட்லரை கொல்வதற்கு  ஒரு சதி முயற்சி இடம்பெற்றது
அது பற்றி ஹிம்லர் முன்கூட்டி அறிய தவறிவிட்டான் . ஆனாலும் அவனின் மீதும் வரலாற்று ஆசிரியர்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது
இச்சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பாக இந்த சதிமுயற்சியில் ஈடுபட்ட இருவரை கைது செய்வதற்கு கெஸ்டாப்போக் ஹிம்லரின் அனுமதியை கோரியது   
ஆனால் ஹிம்லர் அனுமதிக்கவில்லை
சரியாக ஒருமாதம் கழித்து ஏப்பிரல் 20 ஆம் தேதி ஹிட்லரின் பிறந்த நாள் கொண்டாட்டத்திற்கு உயர் ராணுவ அதிகாரிகளோடு  ஹிம்லரும் வந்திருந்தான்.
பெரிய பங்கருக்குள் அந்த பிறந்த நாள் நிகழ்வு இடம்பெற்றது
அப்போது பெர்லின் நகரம் விமான குண்டுகளாலும் நட்பு நாடுகளின் படைகளின் அசுரர் தாக்குதல்களாலும் உருத்தெரியாமல் சிதைந்து போயிருந்தது .. நாசிகளின் மனங்களை போல ..
 
ஹிட்லருக்கு தெரியாமலேயே அவனின் அதீத விசுவாசியான ஹிம்லர் அதே நாளில் ஒரு ரகசிய நடவடிக்கையை மேற்கொண்டான்
போரில் எந்த பக்கமும் சாயாமல் இருந்த சுவீடன் நாட்டு யூதர்களின் உலக காங்கிரசோடு ஒரு ரகசிய பேச்சுவார்த்தையை மேற்கொண்டான்

நடந்ததை எல்லாம் மறந்து விட்டு யூதர்களும் நாசிகளின் நஷனல் சோஷலிஸ்டுகளும் ஒற்றுமையாக அந்த வதைமுகாம்களை செஞ்சிலுவை சங்கத்தின் பொறுப்பில் விட்டுவிடலாம் என்ற கோரிக்கையை முன்வைத்தான்
அங்கு நடந்த இலட்சக்கணக்கான மக்களின் கொலைகளை உலகம் அறிந்திருக்கவில்லை என்று அவன் நம்பினான்  . உண்மையில் அதன் அளவு அப்போது வெளியுலகு தெரிந்திருக்கவில்லைதான்

இதற்கு சில நாட்கள் முன்பாகவே நாசிகளின்  வதைமுகாம்களோ அதிலிருந்த மக்களோ எதிரி நாடுகளின் கைகளுக்குள் சிக்க்கிவிட கூடாது என்று கட்டளை பிறப்பித்து இருந்தான்

போரில் வெற்றி பெற்று ஜெர்மனியை துவம்சம் செய்து கொண்டிருந்த  நட்பு நாடுகளுக்கு ஜெர்மனியில்  நடந்த கொடூரங்கள் தெரிந்து விட கூடாது என அவற்றின் அளவை குறைத்து காட்டும் முயற்சியில் ஹிம்லர் ஈடுபட்டிருந்தான்

ஏப்பிரல் 23 ஆம் தேதி சுவீடிஷ் ராஜதந்திரி Count Folke  Bernadotde என்பவரோடு ரகசியமாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டான்
ஜெர்மனியை காப்பாற்றுவதற்காக  மேற்கு நாடுகளிடம் சரணடைய தயாராக இருப்பதாகவும் ரஷ்யாவிடம் முழுவதுமாக அடிமைப்பட்டு விட விரும்பவில்லை என்று கூறினான்.
அதற்காக அமெரிக்க குடியரசு தலைவர் ஐசான் ஹூவரோடு பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதாகவும் தெரிவித்தான்
அமெரிக்க குடியரசு தலைவரோடு கைகுலுக்கவோ அல்லது நாசி பாணி சலூட் செய்யவும் தயார் என்றான்
சுவீடன் ராஜதந்திரிகளோடு ஹிம்லரின் தொடர்புகள் மிக மிக ரகசியமாக இருந்தன
ஆனால் ஏப்பிரல் 28 ஆம் தேதி பிபிசி இந்த செய்தியை அம்பலமாகக்கியது
அதுமட்டுமல்ல ஹிட்லர் இறந்துவிட்டார் என்றும் இனி நான்தான் ஜெர்மனியின் தலைவர் என்றும் ஹிம்லர் தெரிவிக்கவும் பிபிசி ஒலி பரப்பியது

பெர்லின் நகரத்தின் பங்கர் ஒன்றில் இருந்து இந்த வானொலி செய்தியை கேட்ட ஹிட்லர் அடைந்த உணர்வை எப்படி வர்ணிக்க முடியும்?
ஹிட்லர் வாயடைத்து போனான்
இது போன்ற நம்பிக்கை துரோகத்தை அவன் எவரிடம் இருந்து கேட்டிருக்க கூடும் ஆனால் நிச்சயமாக ஒரு பூரண விசுவாசியான ஹிம்லரிடைம் இருந்து இந்த செய்தியை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை.

இதுவரை உலகம் கண்டிராத ஒரு மோசமான நம்பிக்கை துரோகம் இதுவென்று கூறினான்  
உடனேயே ஹிம்லரை கைது செய்ய உத்தரவிட்டான்.
ஆனால் சில நாட்களுக்குள்ளேயே ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டான்.

ஹிட்லரின் மறைவுக்கு பின்பு அந்த இடத்திற்கு வந்த அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் ஐ  ( Admiral  Karl  Donitz) மேமாதம் 1 ஆம் தேதி  சந்தித்து தான் அவருக்கு உதவியாக பணியாற்ற விருப்பம் தெரிவித்தான்
ஆனால் ஹிம்லரின் வரலாறு முழுவதுமாக தெரிந்திருந்த அட்மிரல் கார்ல் டோனிஸ்ட்ஸ் அதை மறுத்தார்
அவரை சுதந்திரமாக செல்வதற்கு அனுமதி அளிக்கப்பட்டது

ஏப்பிரல் 22 ஆம் தேதி போர் முடிவுற்றது
ஜெர்மனி முற்று முழுதாக நட்பு நாடுகளின் படைகளால் நிரம்பி இருந்தது
வீடுவீடாக தெருத்தெருவாக ஜெர்மனி முழுவதும் நாசி படைகளை தேடி வேட்டை நடந்தது
ஏராளமான நாசிகள் போரின் தன்மையை ஊகித்து ஏற்கனவே பல நாடுகளுக்கும் தப்பி ஓடியிருந்தார்கள்
ஆனால் அங்கும் அவர்கள் வேட்டையாடப்பட்டார்கள்  இப்போதும்கூட நாசிகளின் அடையாளம் தெரிந்தால் அவர்கள் கைது செய்யப்பட்டு போர்க்குற்ற விசாரணைகளுக்கும் தண்டனைக்கும் உட்படுவார்கள்

இதே நாளில்  பிரிட்டிஷ் ஊர்காவல் படைகள்  ரோந்து பணியின்போது கசங்கிய ஆடைகளோடு ஒரு மெலிந்த மனிதனை கண்டார்கள் அவனின் பெயர் ஹென்றிச் ஹிட்சிங்கர் என்று கூறினான்
போலியான பாத்திரங்களை காட்டினான் .. தோற்றத்தில் ஒரு சாதாரண ஜெர்மன் ராணுவ சோல்ஜர் போன்று காட்சியளித்தான்
அவன்தான் ஹிம்லர் . அவனோடு கூடவந்த ஏழுபேரும் அவனின் பாதுகாப்பு பணியாளர்களுமாகும்
பிரிட்டிஷ் படைகள் அவர்களை கைது செய்துகொண்டு பிறீமன் நகரில் இருந்த  போர் குற்றவாளிகள் முகாமுக்கு கொண்டுசென்றார்கள்

ஜெர்மனியின் இரண்டாவது அதிகாரமிக்க தலைவர் என்ற ரீதியில் தனக்கு மரியாதையை கிடைக்கும் என்ற எண்ணத்தில் தனது உண்மையான அடையாளத்தை கூறினான்
அனால் அவனது  எண்ணத்தில் மண் விழுவது போல சம்பவங்கள் தொடர்ந்தன
சிலநாட்களில் பின்பு முகாம் பொறுப்பாளரை சந்திப்பதற்கு கோரிக்கையும்  விடுத்தான். அது நடக்கவில்லை
ஒரு சாதாரண போர்குற்றவாளிக்கு உரிய விதத்திலேயே நடத்தப்பட்டன
24 மணி நேரமும் கண்காணிப்பு வளையத்திற்குள்ளேயே  இருந்தான்
எப்போதும் தற்கொலை செய்துகொள்ள கூடும் என்பதால் கடுமையான கண்காணிப்பு இருந்தது
அடுத்த நாள் விசாரணைக்காக முகம் அதிகாரியிடம் அழைத்து வரப்பட்டான்
அப்போதும் தனது வாய்க்குள் சயனைட் குளிகையை ஒழித்து வித்திருந்தான்
எல்லா முக்கிய நாசிகளிடமும் சயனைட் கேப்சியுல் இருக்கும்
அவனது உடம்பை  நிர்வாணமாக்கி பரிசோதனை செய்தார்கள்
வாயை இறுக மூடிக்கொண்டிருந்தான்  . மருத்துவர் வலிந்து வாயை திறக்க முயற்சித்தபோது வாய்க்குள் இருந்த சயனைட் வில்லை கடித்தான்
சரியாக 12 நிமிடங்களில் அந்த சயனைட் நஞ்சு உடல் முழுவதும் பரவி அவனது உயிர் பிரிந்தது  - Radha Manohar

1 கருத்து:

  1. சிறப்பான ஆய்வு...
    நாம் தமிழர் கட்சியின் hidden agendaவை வெளிச்சம் போட்டுக் காட்டும் வரைபடம் இந்த பதிவு.
    நன்றி

    பதிலளிநீக்கு