வியாழன், 2 டிசம்பர், 2021

மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் தற்கொலை! லஞ்ச குற்ற சாட்டுக்கள் காரணம்?

 மின்னம்பலம் : தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய முன்னாள் தலைவர் வெங்கடாசலம் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக இருந்தவர் ஏ.வி.வெங்கடாசலம்.
இவர், 14.10.2013 முதல் 29.07.2014 வரை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினர் செயலாளராக இருந்தபோதும், மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளராக 2017-2018 ஆகிய காலகட்டங்களில் இருந்தபோதும், 27.09.2019 முதல் 2021 செப்டம்பர் வரை மாசு கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக இருந்தபோதும் முறைகேடுகளில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்தது.


பல நிறுவனங்களுக்கு முறைகேடாக அனுமதி வழங்கி லஞ்சம் வாங்கியதாக, கடந்த செப்டம்பர் மாதம் கிண்டியில் உள்ள அவரது அலுவலகம் மற்றும் வேளச்சேரி, சேலத்தில் உள்ள வெங்கடாசலத்தின் வீடு உட்பட ஐந்து இடங்களில் சோதனை நடத்தினர்.

இந்த சோதனையின் முடிவில், 13.5 லட்சம் ரூபாய் ரொக்கம், ரூ. 2.5 கோடி ரூபாய் மதிப்பிலான சுமார் 6.5 கிலோ தங்கம், 10 கிலோ சந்தனப் பொருட்கள் மற்றும் பல்வேறு முக்கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத் துறை தெரிவித்தது.

இந்நிலையில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் முன்னாள் தலைவர் ஏ.வி. வெங்கடாச்சலம் சென்னை வேளச்சேரியில் உள்ள தனது வீட்டில் இன்று தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வேளச்சேரி போலீசார் அவரது உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

அதோடு எதற்காக அவர் தற்கொலை செய்துகொண்டார்? தற்கொலை கடிதம் ஏதேனும் உள்ளதா என போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

-பிரியா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக