புதன், 15 டிசம்பர், 2021

ஜெ., இல்லம்; அதிமுக மேல்முறையீடு செய்ய அனுமதி.. தீபாவுக்கு தலைவலி ஆரமபம்?

 தினமலர் : சென்னை: மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டல் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க., மேல்முறையீடு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.
சென்னை போயஸ் கார்டனில், மறைந்த முதல்வர் ஜெயலலிதா வசித்த, 'வேதா இல்லம்' உள்ளது. இதை நினைவு இல்லமாக மாற்ற, அ.தி.மு.க., அரசு முடிவு செய்து அவசர சட்டம் பிறப்பித்தது. அதன்பின், வேதா இல்லத்தை அரசு கையகப்படுத்தியது. அதற்கான இழப்பீடு தொகை சென்னை சிவில் நீதிமன்றத்தில், 'டிபாசிட்' செய்யப்பட்டது. ஜெயலலிதா வீட்டை நினைவு இல்லமாக மாற்ற, அரசு எடுத்த நடவடிக்கையை எதிர்த்து, ஜெயலலிதாவின் வாரிசுகளான, அண்ணன் மகள் தீபா, மகன் தீபக் ஆகியோர், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.வழக்கை விசாரித்த நீதிபதி சேஷசாயி, வேதா நிலையத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்று அறிவித்ததுடன், மூன்று வாரத்தில் வீட்டின் சாவியை மனுதாரர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து கடந்த 11ம் தேதி தீபா, தீபக்கிடம் வேதா இல்ல சாவி ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, அதிமுக மற்றும் வேதா நிலைய நினைவில்ல அறக்கட்டளை சார்பாக முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, போயஸ் கார்டன் இல்லத்தை அரசுடைமையாக்கியது செல்லாது என்ற தீர்ப்பை எதிர்த்து அ.தி.மு.க., மேல்முறையீடு செய்ய அனுமதி வழங்கியது. மேலும், அரசுடைமையாக்கியதற்கு எதிரான வழக்கில் மனுதாரராக அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போது இணையாதது ஏன் எனவும் கேள்வி எழுப்பி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக