வியாழன், 9 டிசம்பர், 2021

ஈபிஎஸ்சை நெருங்கும் கத்தி; ஸ்டாலின் கையில் கிடைத்த துருப்புச் சீட்டு

 Mageshbabu Jayaram | Samayam Tamil  :  முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய சிக்கல் ஒன்று உருவாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தை தூசு தட்டி விசாரணையை தீவிரப்படுத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு முடுக்கிவிட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பெயர் தொடர்ந்து அடிபட்டு வருகிறது.
இந்த சூழலில் மாசுக் கட்டுப்பாட்டுத் துறையின் முன்னாள் தலைவர் வெங்கடாச்சலத்தின் தற்கொலை விவகாரம் எடப்பாடி பழனிசாமிக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசின் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறையின் இயக்குநராக இருந்து 2018ஆம் ஆண்டு ஓய்வு பெற்றவர் வெங்கடாச்சலம்.
இவருக்கு சேலம் மாவட்டத்தை சேர்ந்த இளங்கோவன் உடன் நட்பு ஏற்பட்டுள்ளது. இவர் எடப்பாடி பழனிசாமியின் வலதுகரமாக விளங்கியவர்.


கடந்த அதிமுக ஆட்சியில் செல்வாக்கு மிகுந்த நபராக வலம் வந்தவர். எடப்பாடியை நெருங்க வேண்டுமெனில் இளங்கோவனை பிடித்தால் காரியம் ஆகிவிடும் என்ற அளவில் இருந்துள்ளார். கூட்டுறவு சங்கங்களில் பல்வேறு பதவிகளை வகித்த இளங்கோவன், பண மதிப்பிழப்பு நடவடிக்கையின் போது 500 கோடி ரூபாய்க்கு மேல் பழைய ரூபாய் நோட்டுகளை கூட்டுறவு வங்கி மூலம் மாற்றியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
சைலேந்திர பாபு கொடுத்த ரிப்போர்ட்: வாய்விட்டு பாராட்டிய மோடி

இந்நிலையில் திமுக ஆட்சிக்கு வந்ததும் இளங்கோவனுக்கு செக் வைக்கப்பட்டது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், வருமானத்திற்கு அதிகமாக 131 சதவீதம் சொத்து சேர்த்திருப்பது தெரியவந்தது. இவரது பிரம்மாண்ட வீடு, பினாமி சொத்துகள், முதலீடு உள்ளிட்ட முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த இளங்கோவன் மூலம் எடப்பாடி பழனிசாமியை நெருங்க ஸ்டாலின் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழலில் ஸ்டாலினுக்கு மற்றொரு துருப்புச் சீட்டு கிடைத்துள்ளது.


அதாவது, இளங்கோவன் நட்பால் எடப்பாடிக்கு நெருக்கமான நபராக வெங்கடாச்சலம் மாறியுள்ளார். இதையடுத்து 2019ல் மாசுக் கட்டுப்பாட்டு துறை தலைவராக நியமிக்கப்பட்டார். இந்த பதவி பல்வேறு சர்ச்சைகளுக்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் நீட்டிக்கப்பட்டு வந்துள்ளது. இதன்மூலம் 700க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு தடையில்லா சான்று அளித்து செயல்பட அனுமதி அளித்துள்ளனர். குறிப்பாக சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக 200க்கும் மேற்பட்ட நிறுவனங்களுக்கு அவசர அவசரமாக தடையில்லா சான்று வழங்கி வெங்கடாச்சலம் உத்தரவிட்டிருப்பதாக தெரிகிறது.

ஒவ்வொரு நிறுவனத்திற்கு தடையில்லா சான்று வழங்குவதற்கும் குறிப்பிட்ட கால அளவு இருக்கிறது. அதன்படி சட்டப்பூர்வமாக பல்வேறு ஆய்வுகள் நடத்திய பின்னரே சான்று வழங்க முடியும். அவசர கதியில் வழங்கினால் நிச்சயம் முறைகேடு நடந்திருப்பதற்கான சூழல் அதிகமிருக்கிறது. அப்போது சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை அமைச்சராக இருந்தவர் கருப்பண்ணன். அந்த துறையின் முதன்மைச் செயலாளராக இருந்தவர் சம்புக் கல்லோலிகர். எனவே இதன் பின்னணியில் முன்னாள் முதல்வர் முதல் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் வரை பலருக்கும் தொடர்பிருக்கலாம் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

மேலும் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில், எடப்பாடி பழனிசாமி, இளங்கோவன், கொடநாடு கொலை வழக்கில் தொடர்புடைய சஜீவன் ஆகியோருடன் வெங்கடாச்சலத்திற்கு தொடர்புகள் இருந்ததற்கு ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதுபற்றி வெங்கடாச்சலத்திடம் விசாரித்த போது தான், அவர் பயந்து போய் தற்கொலை செய்து கொண்டதாக கூறுகின்றனர்.

இவர் வாயை திறந்தால் இளங்கோவன் வழியாக எடப்பாடி பழனிசாமி மாட்டிக் கொள்வார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் எதிர்பாராத விதமாக தற்கொலை செய்து கொண்டதால் காட்சிகள் மாறிவிட்டன. இருப்பினும் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் விசாரணையை தீவிரப்படுத்தினால் முன்னாள் அமைச்சர்கள், அதிகாரிகள் பலர் சிக்குவார்கள் என்று கூறப்படுகிறது. கடைசியில் எடப்பாடி பழனிசாமி செக் வைப்பதற்கான சூழலும் இருப்பதாக சொல்லப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக