ஞாயிறு, 5 டிசம்பர், 2021

பன்னீர்செல்வம் - பழனிசாமி வேட்பு மனுக்கள் ஏற்பு; போட்டியின்றி தேர்வாகின்றனர்

 தினத்தந்தி : அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன.
சென்னை,  அ.தி.மு.க. சட்ட திட்ட விதிகளின்படி, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்சி அமைப்புகளுக்கு பொதுத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படி, அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தேர்தல் அறிவிப்பு கடந்த 2-ந் தேதி அறிவிக்கப்பட்டது. இதில் தேர்தல் ஆணையாளர்களாக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், தேர்தல் பிரிவு செயலாளர் பொள்ளாச்சி வி.ஜெயராமன் ஆகியோர் அறிவிக்கப்பட்டிருந்தனர்.


மேலும் 3, 4-ந் தேதிகளில் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, நேற்று முன்தினம் மற்றும் நேற்று சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோர் வேட்பு மனுக்களை பெற்றனர்.
அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்வதற்காக ஓ.பன்னீர்செல்வம் நேற்று காலை 10.50 மணிக்கு கட்சி தலைமை அலுவலகத்துக்கு வந்தார். அதைத் தொடர்ந்து இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பு மனுவை தாக்கல் செய்ய எடப்பாடி பழனிசாமி நேற்று காலை 11 மணிக்கு வந்தார். இருவரையும் கட்சி தொண்டர்கள் கோஷங்கள் எழுப்பி வரவேற்றனர்.

ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் ஒருவருக்கு ஒருவர் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கொண்டனர். பின்னர், அ.தி.மு.க. மகளிர் அணியினர் ஆரத்தி எடுத்து இருவரையும் வரவேற்றனர். அதைத்தொடர்ந்து, கட்சி வளாகத்திற்குள் இருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் சிலைக்கு இருவரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர், வேட்பு மனு தாக்கல் செய்வதற்காக கட்சி அலுவலகத்திற்குள் சென்ற இருவரும், முதல் மாடியில் மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆர். மற்றும் ஜெயலலிதாவின் உருவப்படங்களுக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

அதனை தொடர்ந்து, காலை 11.20 மணிக்கு ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கான தங்களின் வேட்பு மனுவை தேர்தல் ஆணையாளர்கள் பொன்னையன், பொள்ளாச்சி ஜெயராமன் ஆகியோரிடம் தாக்கல் செய்தனர்.

நேற்று பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில் 154 மனுக்கள் பெறப்பட்டதாக அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த மனுக்களில் பெரும்பாலான மனுக்கள் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி பெயரில் தாக்கல் செய்யப்பட்டாலும், வேறு சிலரும் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

வேட்பு மனு தாக்கல் செய்துள்ளவர்களை 15 பேர் முன் மொழியவும், 15 பேர் வழி மொழியவும் செய்து இருக்க வேண்டும். இந்த 30 பேரும் 5 ஆண்டுகளுக்கு மேல் உறுப்பினர்களாக இருப்பதுடன், எவ்வித குற்றச்சாட்டுகளுக்கும் ஆளாகாதவர்களாக இருக்க வேண்டும் என்று அ.தி.மு.க. சட்டவிதி கூறுகிறது. எனவே, இவற்றை காரணம் காட்டி, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் வேட்புமனுக்களை தவிர பிற மனுக்கள் அனைத்தும் வேட்புமனு பரிசீலனையின்போது நிராகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.

இதன்மூலம் ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்படுவதற்கான வாய்ப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.

எனவே, வேட்புமனு திரும்ப பெறும் நாளான 6-ந் தேதி (நாளை) மாலையே ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோர், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளராக போட்டியின்றி ஒரு மனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்படுவார்கள் என்றும் அ.தி.மு.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) வேட்புமனு பரிசீலனை நடைபெற்றது.  இதில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகளுக்கு போட்டியிடும் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் வேட்புமனுக்கள் ஏற்கப்பட்டு உள்ளன

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக