ஞாயிறு, 5 டிசம்பர், 2021

நாகாலாந்தில் அப்பாவி கிராம மக்கள் 13 பேர் சுட்டுக்கொலை ! பயங்கரவாதிகள் என்று தவறாக நினைந்தார்களாம்

 மாலைமலர் : நாகாலாந்தில் பாதுகாப்பு படையினரால் சுட்டு இறந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலையும், வருத்தத்தையும் தெரிவித்த நாகாலாந்து முதல்வர் நெய்பியு ரியோ சிறப்பு புலனாய்வுக் குழுவின் கீழ் உயர்மட்ட விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளார்.
வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தில் அரசுக்கு எதிராக சில அமைப்பினர் செயல்பட்டு வருகின்றனர். இதில் பயங்கரவாத அமைப்புகளும் அடங்கும். அவர்கள் அடிக்கடி தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதையடுத்து நாகாலாந்து மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.


நாகாலாந்து மாநிலம் மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி உள்ளது. இதையடுத்து எல்லைப் பகுதியில் இருந்து பயங்கரவாதிகள் ஊடுருவலை தடுக்க பாதுகாப்பு படையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பயங்கரவாத அச்சுறுத்தல்கள் உள்ள பகுதிகளில் பாதுகாப்பு படையினர் வாகன சோதனையிலும் தீவிரம் காட்டி வருகின்றனர். வாகனத்தில் வருபவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் நாகாலாந்தில் பயங்கரவாதிகள் என தவறாக நினைத்து கிராம மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நாகாலாந்தில் மோன் மாவட்டம் ஒடிங் கிராமத்தில் நேற்று இரவு ஒரு வாகனத்தில் தடைசெய்யப்பட்ட அமைப்பான என்.எஸ்.சி.என். (கே)-வைச் சேர்ந்தவர்கள் செல்வதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அந்த கிராமம் மியான்மர் நாட்டு எல்லையை ஒட்டி இருப்பதால் அந்த வாகனத்தில் பயங்கரவாதிகள் ஊடுருவலாம் என்ற சந்தேகம் பாதுகாப்பு படையினருக்கு ஏற்பட்டது.

இதையடுத்து பாதுகாப்பு படை வீரர்கள் ஒடிங் கிராமத்துக்கு விரைந்து சென்றனர். அப்போது ஒரு மினி வேன் ஒன்று ஒடிங்- திரு கிராமங்களுக்கு இடையே சென்று கொண்டு இருந்தது. இதை பார்த்த பாதுகாப்பு படையினர் அந்த மினி வேனை பின்தொடர்ந்து சென்றனர்.

வாகனம் நிற்காமல் சென்றதால் மேலும் சந்தேகம் அடைந்த பாதுகாப்பு படையினர் அதில் பயங்கரவாதிகள்தான் இருப்பார்கள் என்று நினைத்து துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர்.

இதில் மினி வேனில் இருந்தவர்கள் ரத்த வெள்ளத்தில் அலறியபடி சரிந்து விழுந்தனர். பாதுகாப்பு படையினர் சுட்டதில் சம்பவ இடத்திலேயே 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். பலர் படுகாயத்துடன் கீழே விழுந்து கிடந்தனர்.

அப்போது பாதுகாப்பு படையினர் அந்த மினி வேனை ஆய்வு செய்தபோது அதில் வந்தவர்கள் பயங்கரவாதிகள் இல்லை என்பதும், அப்பாவி கிராம மக்கள் என்பதும் தெரிந்தது. இதனால் அவர்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

மினி வேனில் சென்றவர்கள் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் ஆவார்கள். அவர்கள் அனைவரும் வேலையை முடித்துவிட்டு ஊருக்கு வேனில் சென்றுள்ளனர். அந்த வாகனத்தில்தான் பயங்கரவாதிகள் செல்வதாக தவறான தகவல் பாதுகாப்பு படையினருக்கு தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற பாதுகாப்பு படையினர் இருட்டில் மினி வேன் மீது சரமாரியான துப்பாக்கி சூட்டை நடத்திவிட்டனர் என்பது தெரிய வந்தது.

துப்பாக்கி சூட்டில் படுகாயமடைந்த தொழிலாளர்களை மீட்டு அண்டை மாநிலமான அசாமில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.

இதற்கிடையே அப்பாவி கிராம மக்களை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்ற விவரம் அங்குள்ள கிராம மக்களுக்கு தெரிய வந்தது. இதனால் ஆத்திரமடைந்த அவர்கள் அங்கு நிறுத்தப்பட்டிருந்த ராணுவ வாகனங்களுக்கு தீ வைத்தனர். இதில் அந்த வாகனங்கள் முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் கிராம மக்கள் போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்த சம்பவம் தொடர்பாக நாகாலாந்தின் முதல்- மந்திரி நைபியு ரியோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர் தனது டுவிட்டர் பதிவில் கூறியதாவது:-

மோன் மாவட்டத்தில் உள்ள ஒடிங் கிராமத்தில் பொது மக்கள் சுட்டுக் கொல்லப்பட்ட துரதிருஷ்டவசமான சம்பவம் கடும் கண்டனத்திற்கு உரியது. பலியானவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். படுகாயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.

அப்பாவி கிராம மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக உயர் மட்டக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு இருக்கிறது. சட்டத்தின்படி நீதி வழங்கப்படும். அனைத்து தரப்பினரும் அமைதி காக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

அதேபோல் துணை முதல்வர் யாந்துங்கோ பாட்டன் கூறும்போது, ‘‘பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் கவலையையும், சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக முழுமையாக விசாரிக்கப்பட்டு நீதி வழங்கப்படும்’’ என்றார்.

மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா டுவிட்டரில் கூறும்போது, ‘‘நாகாலாந்தில் உள்ள ஒடிங் கிராமத்தில் நடந்த துரதிருஷ்டவசமான சம்பவத்தால் கவலை அடைந்துள்ளேன். உயிரிழந்த குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். மாநில அரசால் அமைக்கப்பட்ட உயர்மட்ட விசாரணைக்குழு இந்த சம்பவத்தை முழுமையாக விசாரித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நீதியை உறுதி செய்யும்’’ என்று தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே நாகாலாந்து மாநிலத்தில் பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக நீதிமன்ற விசாரணைக்கு ராணுவம் உத்தரவிட்டு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கிராம மக்களை சொந்த நாட்டு பாதுகாப்பு படையினரே சுட்டுக் கொன்றது நாடு முழுவதையும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக