திங்கள், 6 டிசம்பர், 2021

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

நிர்மலாவுடன் வைகோ, திருமாவளவன் சந்திப்பு: கவனிக்கும் திமுக தலைமை!

மின்னம்பலம் : நாடாளுமன்றம் கடந்த நவம்பர் 29 தொடங்கிய சில நாட்களில் டெல்லியில் நடந்த முக்கிய இரு சந்திப்புகளை திமுக எம்பிக்கள் கவனித்து தங்கள் தலைமைக்கு அனுப்பியுள்ளார்கள்.
முதல் சந்திப்பு விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவும், அக்கட்சியின் பொதுச் செயலாளர் ரவிக்குமாரும் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை கடந்த நவம்பர் 30 ஆம் தேதி சந்தித்தனர். இதுபற்றி திருமாவளவன் வெளியிட்ட செய்தியில்,
“பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் செய்வதற்கான சட்ட மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்யவேண்டாம் என மாண்புமிகு நிதி அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்களிடம் மனு அளித்தோம். இதுவரை எந்த வங்கி என்பது முடிவாகவில்லை. இந்த கூட்டத்தொடரில் அந்த மசோதா பட்டியல் இடப்பட்டிருந்தாலும் இன்னும் அதற்கு கேபினட் ஒப்புதல் கிடைக்கவில்லை என அமைச்சர் தெரிவித்தார்.

மழை வெள்ளத்தில் விழுப்புரம், கடலூர் மாவட்டங்கள் வரலாறு காணாத அளவில் பாதிக்கப்பட்டிருப்பதை எடுத்துக்கூறினோம். தமிழ்நாடு அரசு கேட்டுள்ள பேரிடர் நிவாரண நிதியை விடுவித்து உதவுமாறு வலியுறுத்தினோம். பேரிடர் நிவாரண சட்டத்தில் உள்ளபடி நிச்சயம் செய்வதாக உறுதியளித்தார்”என்று தெரிவித்திருந்தார் திருமாவளவன்.

இதேபோல டிசம்பர் 3 ஆம் தேதி மதிமுக பொதுச் செயலாளரும் மாநிலங்களவை எம்பியுமான வைகோ ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துள்ளார். அதுபற்றி மதிமுக டிசம்பர் 4 ஆம் தேதி வெளியிட்ட செய்திக் குறிப்பில், “ மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, டிசம்பர் 3 மாலை 3 மணி அளவில்,நிதி அமைச்சர் நிர்மலா அவர்களை, நாடாளுமன்றக் கட்டடத்திற்கு உள்ளே இருக்கின்ற அவரது அலுவல் அறையில் சந்தித்தார்கள்.

அப்போது, ‘ தமிழ்நாட்டின் தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி வட்டம் வில்லிசேரி கிராமத்தில், 4500 பேர் வசிக்கின்றார்கள். சுற்றி உள்ள, சிவஞானபுரம், வாகைத்தாவூர், காப்புலிங்கம்பட்டி, தளவாய்புரம், சத்திரப்பட்டி,இடைசெவல், சவலாப்பேரி ஆகிய கிராமங்களுக்கு மையமாக இருக்கின்றது. சுமார் 10000 மக்கள் வசிக்கின்ற பகுதி. இந்தக் கிராமங்களில் இருந்து சுமார் 600 க்கும் மேற்பட்டவர்கள், வளைகுடா நாடுகள், அமெரிக்கா, வியட்நாம், நியூசிலாந்து, மலேசியா சிங்கப்பூர் நாடுகளில் பணிபுரிகின்றார்கள். ஆண்டு வரவு செலவு 50 கோடி வரை புரள்கின்றது. எனவே, வங்கிக்குச் செல்ல வேண்டுமானால், 18 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கோவில்பட்டி அல்லது 12 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கயத்தாறு ஆகிய இடங்களுக்குச் செல்ல வேண்டும். தற்போது வில்லிசேரியில் ஒரு கூட்டுறவு சொசைட்டி மட்டுமே உள்ளது. தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கிக் கிளை எதுவும் இல்லை. எனவே, வில்லிசேரி கிராமத்திற்கு கனரா அல்லது ஐஓபி வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு கேட்டுக்கொள்கின்றேன்.

இதேபோல தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் வட்டம்,நடுவக்குறிச்சியிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிக் கிளை கிடையாது. வல்லராமபுரம், கே.வி.ஆலங்குளம், குத்தாலப்பேரி, அருணாசலபுரம், தர்மத்தூரணி, சூரங்குடி, புதுக்கிராமம், தட்டாங்குளம், சந்திரகிரி, வென்றிலிங்காபுரம், சக்கரைக்குளம் ஆகிய ஊர்களுக்கு மையமாகத் திகழ்கின்றது. மொத்தம் 20000 பேர் வசிக்கின்றார்கள். இந்தப் பகுதியில் தேசியமயம் ஆக்கப்பட்ட வங்கி இல்லாததால், 15 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள சங்கரன்கோவிலுக்குத்தான் செல்ல வேண்டும். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் சுமார் 700 பேர் இந்தியப் படையில் பணிபுரிகின்றார்கள். வளைகுடா நாடுகளில் 750 பேர் வேலை செய்கின்றார்கள். ஆண்டு வரவு செலவு 25 கோடிக்கு மேல் நடைபெறுகின்றது. எனவே, நடுவக்குறிச்சியில் கனரா வங்கி அல்லது ஐஓபி வங்கியின் தேசிய அமைத்துத் தருமாறு கேட்டுக் கொள்கின்றேன்.

மேலும்.... கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பெத்தேல்புரம், ஒரு பரபரப்பான வணிக மையம் ஆகும். சுற்றிலும் உள்ள, சேனன்விளை, செம்பொன்விளை, மேற்கு நெய்யூர், வழுதை அம்பலம், கோணங்காடு, படுவர்கரை, களிமார், நெய்யூர் மேக்கன்கரை, வர்தன்விளை உள்ளிட்ட 15 கிராமங்களுக்கு மையமாக பெத்தேல்புரம் விளங்குகின்றது. ஒட்டுமொத்தமாக 20000 மக்கள் வசிக்கின்றார்கள். பெத்தேல்புரத்தில், அரசு மருத்துவமனை, மேனிலைப்பள்ளி, அஞ்சல் அலுவல் அகம், கிராம நிர்வாக அலுவல் அகம், முந்திரி ஆலைகள், காய்கறிச் சந்தை, கூட்டுறவு பால் சொசைட்டி, சிபிஎ°இ என எத்தனையோ நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. ஆனால், இந்தப் பகுதியில் வங்கிக் கிளைகள் எதுவும் இல்லை. கடந்த 29.07.2021 அன்று, பெத்தேல்புரத்தில் வங்கிக் கிளை அமைத்துத் தரக் கோரி ஏற்கனவே மின்அஞ்சல் வழியாகக் கோரிக்கை விடுத்துள்ளேன். எனவே, கனரா வங்கி, இந்தியன் அல்லது இந்தியன் ஓவர்சீ° வங்கி என ஏதேனும் ஒரு வங்கிக் கிளை அமைத்துத் தருமாறு வைகோ கேட்டுக்கொண்டார். . வங்கிக் கிளைகள் அமைத்துத் தருவதாக நிதி அமைச்சர் நிர்மலா உறுதி அளித்தார்”என்று மதிமுக வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் திருமாவளவன், வைகோ ஆகியோர் அடுத்தடுத்து நடத்திய சந்திப்புகள் பற்றி திமுக உற்று கவனித்து வருகிறது.

இதுகுறித்து டெல்லி வட்டாரத்தில் பேசினோம்.

“ நாடாளுமன்றத்தின் குளிர் கால கூட்டத் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக சென்னையில் திமுக எம்பிக்கள் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்குப் பின் நாடாளுமன்ற திமுக நிர்வாகிகளிடம் உரையாடிய திமுக தலைவரும் முதல்வருமான ஸ்டாலின், ‘டெல்லியில் நமது கூட்டணிக் கட்சித் தலைவர்களின் செயல்பாடுகள், நடவடிக்கைககளிலும் ஒரு கண் வைத்திருங்கள்.ஏனென்றால் பாஜக எந்த திசையில் இருந்தும் நம்மைக் குறிவைக்க வாய்ப்பிருக்கிறது’ என்று அறிவுறுத்தியிருந்தார். இது மாநிலக் கூட்டணிகளின் முக்கிய தலைவர்கள் மேற்கொள்ளும் உத்திதான்.

டெல்லியில் எம்பிக்கள் கோரிக்கைகளை முன் வைத்து ஒன்றிய அமைச்சர்களை சந்திப்பது கடினமானதோ புதிதோ கிடையாது. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இருக்கும் பிரத்யேக உரிமை அது. அதேநேரம் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தொல் திருமாவளவன், வைகோ ஆகியோர் சந்தித்ததற்கு அவர்கள் வெளியிட்ட காரணங்கள் கவனிக்கத் தக்கவை.

பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதாவை இந்த கூட்டத் தொடரில் தாக்கல் செய்ய வேண்டாம் என்பதற்காக நிதியமைச்சரை சந்தித்ததாக திருமாவளவன் சொல்கிறார். அந்த மசோதாவுக்கு இன்னும் கேபினட் ஒப்புதல் கிடைக்கவில்லை என்று நிர்மலா பதில் சொல்லியிருக்கிறார். வைகோவோ மூன்று இடங்களில் வங்கிகள் அமைப்பதற்காக நிதியமைச்சரை சந்தித்தாக சொல்கிறார். வங்கிகள் அமைக்க வேண்டுமென்றால் சம்பந்தப்பட்ட வங்கிகளின் மாநில நிர்வாகிகளை சந்தித்தாலே போதுமானது. வைகோவால் நிர்மலாவை சந்திக்காமலேயே அங்கே வங்கிகளை கொண்டுவரமுடியும். அதற்காக இருவரும் ஒன்றிய நிதியமைச்சரை சந்திக்க கூடாது என்று யாராலும் சொல்ல முடியாது. அது அவர்களின் உரிமை.

மற்ற ஒன்றிய அமைச்சர்களின் சந்திப்புக்கும் நிர்மலா சீதாராமனின் சந்திப்புக்கும் ஏதோ ஒரு வித்தியாசம் இருப்பதாக திமுக கருதுகிறது.

ஏற்கனவே தமிழக விவகாரங்களை நிர்மலா சீதாராமன் மூலம்தான் பாஜக டெல்லியில் இருந்து கவனித்து வருகிறது. தமிழகத்துக்கான முக்கிய அரசியல் நகர்வுகளை நிர்மலா சீதாராமனின் அறிவுரைப்படிதான் டெல்லி பாஜக தலைமை செய்து வருகிறது. இந்த நிலையில் திருமாவளவனும், வைகோவும் நிர்மலா சீதாராமனை அடுத்தடுத்து சந்தித்திருப்பது எதேச்சையாக நடந்திருக்கும் என்று திமுக கருதவில்லை.

மேலும்... எப்போதுமே ஒன்றிய அமைச்சர்களை சந்திக்கும்போது வெளியே ஒரு கோரிக்கை பற்றி சந்தித்தோம் என்று சொல்லிவிட்டு உள்ளே சில அரசியல் விவகாரங்கள் பேசப்படுவது அரசியல் இயல்பு. அதுபோல இந்த சந்திப்புகளிலும் அரசியல் விவகாரங்கள் பேசப்பட்டிருக்குமோ என்று திமுக நாடாளுமன்ற நிர்வாகிகள் தங்கள் தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கு தகவல் பாஸ் பண்ணியுள்ளார்கள். இதுதான் இப்போது தமிழக எம்பிக்கள் மத்தியில் பேசுபொருளாக இருக்கிறது” என்கிறார்கள் சில எம்பிக்கள்.

நாம் இதுபற்றி மதிமுக நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். “வைகோ தமிழகத்துக்கு மட்டுமல்ல இந்தியாவின் மூத்த அரசியல் தலைவர். அவர் எம்பியாக இல்லாத காலகட்டத்திலும் பிரதமர்களை கூட முன் அனுமதியின்றி எந்த நேரத்திலும் நேரில் சந்திக்கும் அளவுக்கு டெல்லியில் செல்வாக்கு பெற்றவர். அப்படிப்பட்ட நிலையில் நிர்மலா சீதாராமனுடனான இந்த சந்திப்பு வெகு இயல்பானது. இதை ஒரு வேளை திமுக சந்தேகக் கண்ணோடு பார்த்தால்... ‘நாங்கள் திமுகவுக்கு தோழமைக் கட்சிதானே தவிர அவர்களிடம் கேட்டுக்கொண்டுதான் எதையும் செய்ய வேண்டும் என்ற நிலையில் இருப்பவர்கள் இல்லை. எங்கள் தனித்துவத்தை காட்டுவதில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார்கள்.

-ஆரா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக