புதன், 22 டிசம்பர், 2021

வாரத்தில் இனி 4 நாட்கள் வேலை.. 3 நாட்கள் விடுமுறை- அடுத்த வருடமே புது சட்டம் அமலா? சம்பளம் குறையுமா?

 Shyamsundar  -   Oneindia Tamil  :  இந்தியாவில் இனி அலுவலகங்களில் தொழிற்சாலைகளில் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டுமே வேலை என்ற சட்டம் கொண்டு வரப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.
2021 தொடக்கத்திலேயே இது தொடர்பான செய்திகள் வெளியாகின.
வாரத்திற்கு வேலை நாட்களை நான்காக குறைக்கும் வகையில் தொழிலாளர் சட்டத்தில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரப்போவதாக தகவல்கள் வந்தன.
ஆனால் இதில் மாநில அரசுகளின் கருத்தையும் கேட்க வேண்டும்.
தொழிலாளர் சட்டம் பொதுப்பட்டியல் என்பதால் மாநில அரசுகளும் இதற்கு ஏற்றபடி விதிகளை மாற்ற வேண்டும்.
அப்போதுதான் நாடு முழுக்க ஒரே மாதிரி தொழிலாளர் சட்டத்தை கொண்டு வர முடியும். 


மாநில அரசுகளிடம் கருத்து மாநில அரசுகளிடம் கருத்து அதன்படி தொழிலாளர்களின் வேலை நாட்களை 4 நாட்களாக குறைக்கவும், பணி நேரத்தை அதிகரிக்கவும் மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்தது.

இந்த மாற்றங்களை ஏற்படுவதற்கு வசதியாக பணி விதி, ஊதிய விதி, அலுவலக உறவு மற்றும் பணி பாதுகாப்பு விதி, ஆரோக்கியமான பணி சூழல் விதி ஆகிய 4 விதிகளில் மாற்றம் ஏற்படுத்தும்படி மாநில அரசுகளுக்கு மத்திய அரசு கோரிக்கை வைத்தது.

இதை 13 மாநிலங்கள் ஏற்கனவே ஏற்றுக்கொண்டதாகவும், மேலும் சில மாநிலங்களில் ஏற்கும் முடிவில் இருப்பதாகவும் மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதன்படி பல்வேறு மாநில அரசுகள் இந்த புதிய மாற்றங்களை ஏற்றுக்கொண்டதால் வரும் ஆண்டிலேயே இந்த 4 நாள் வேலை விதிமுறை அமலுக்கு வரலாம் என்றும் கூறப்படுகிறது. மீதம் உள்ள 3 நாட்கள் வார விடுமுறை அளிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளன.

அடுத்த வருடம் வர உள்ள நிதி ஆண்டில் இந்த புதிய விதிகள் அமலுக்கு வரும் வாய்ப்புகள் உள்ளதாக மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கான இறுதிக்கட்ட பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது. இன்னும் சில மாநில அரசுகள் புதிய விதிகளை ஏற்றுக்கொண்டு தங்கள் மாநில சட்டங்களில் மாற்றங்களை செய்ததும் சட்டம் முழுமையாக அமலுக்கு வரும் என்கிறார்கள்.

இதுபோக புதிய தொழிலாளர் சட்ட விதிகளால் மக்களுக்கு வரும் வருமானம் குறைய வாய்ப்புள்ளது. அதன்படி முன்பு அலவன்ஸ் வருமானம் அதிகமாகவும், பேசிக் வருமானம் 50 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும். புதிய விதிப்படி பேசிக் வருமானம் 50 சதவிகிதம் அல்லது அதற்கு அதிகமாக இருக்க வேண்டும். இந்த விதியால் அதிக அளவு பிஃஎப் செலுத்த வேண்டி இருக்கும்.

பிஃஎப் உயர்வதால் கைக்கு கிடைக்கும் வருமானம் பெரிய அளவில் குறையும் வாய்ப்புகள் உள்ளன.

பணி நேரம் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன. இப்போது 8 மணி நேரமாக இருக்கும் பணி நேரம் வார விடுமுறை மாற்றம் காரணமாக 10-12 மணி நேரமாக மாற்றப்பட வாய்ப்புகள் உள்ளன. பணிகள், உற்பத்திகள் விடுமுறையால் பாதிக்க கூடாது என்பதால் பணி நேரம் 10-12 மணி நேரமாக மாற்றப்படலாம் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் இது தொடர்பாக அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் வெளியாகவில்லை. அடுத்த வருட நிதியாண்டில் அறிவிப்புகள் வெளியாகலாம் என்கிறார்கள். ஆனால் இந்த விதியை பின்பற்ற தனியார் நிறுவனங்களுக்கு கட்டாயம் இருக்காது. அவர்கள் விருப்பம் இருந்தால் விதியை பின்பற்றலாம் என்ற சலுகை அளிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக