வியாழன், 16 டிசம்பர், 2021

மாரிதாஸ் மீண்டும் கைது; 30-ம் தேதி வரை சிறையிலடைக்க நீதிமன்றம் உத்தரவு!

 பி.ஆண்டனிராஜ் - விகடன் : கொரோனா பரவலுக்கு இஸ்லாமியர்களே காரணம் என யூடியூபர் மாரிதாஸ் அவதூறு கருத்துகளைப் பரப்பியதாக அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக ஒன்றரை ஆண்டுக்குப் பின்னர் கைது செய்யப்பட்டார்.
தமிழக அரசை அவதூறாகப் பேசியது தொடர்பாக மாரிதாஸ் மீது ஏற்கெனவே இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த வழக்குகளில் கைதான அவர், தேனி சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருக்கிறார். இந்த நிலையில், நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவர் மீண்டும் இன்று கைதாகியிருக்கிறார்.
நாட்டில் கொரோனா பரவல் மிகுதியாக இருந்த காலத்தில், அதுகுறித்து மாரிதாஸ் யூடியூபில் பல்வேறு தகவல்களைப் பதிவு செய்திருந்தார். அதில், ‘நாட்டில் கொரோனா பரவலுக்கு இஸ்லாமிய சமூகத்தினரே முக்கிய காரணம். அவர்கள் திட்டமிட்டு கொரோனாவை பரப்புகிறார்கள்’ எனக் குறிப்பிட்டிருந்தார்.

இது தொடர்பாக நெல்லை மாவட்டம் மேலப்பாளையம் காவல்நிலையத்தில் 2020 ஏப்ரல் 4-ம் தேதி முகமதுகாதர் மீரான் என்பவர் புகார் அளித்தார். அவர் தன் புகார் மனுவில், `திட்டமிட்டு பிற சமூகங்களை இஸ்லாமியர்களுக்கு எதிராகத் திருப்பிவிட்டு, மோதலை ஏற்படுத்தும் வகையில் மாரிதாஸ் கருத்து தெரிவித்திருக்கிறார்’ என குறிப்பிட்டிருந்தார்.
அவரின் புகாரைப் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்திய மேலப்பாளையம் போலீஸார், மாரிதாஸ் மீது 292 (ஏ) (திட்டமிட்டு தவறான கருத்தைப் பரப்புதல்), 295 (ஏ) (மதரீதியான பிரிவினையை ஏற்படுத்துதல்), 505 (2) (வழிபாட்டுத் தலம் குறித்து தவறான கருத்து பரப்புதல்), ஐ.டி சட்டப் பிரிவு 67 (தகவல் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

கடந்த ஒன்றரை ஆண்டாக கிடப்பில் போடப்பட்டிருந்த இந்த வழக்கில் இன்று யூடியூபர் மாரிதாஸ் கைது செய்யப்பட்டார். அவரை நெல்லை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக தேனியிலிருந்து பலத்த போலீஸ் பாதுகாப்புடன் போலீஸார் அழைத்துவந்து, மாஜிஸ்டிரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தினார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

மாரிதாஸ் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக இவ்வளவு காலத்துக்குப் பிறகு மாரிதாஸை போலீஸார் கைது செய்ததாக வாதிட்டனர். அதற்கு அரசுத் தரப்பு வழக்கறிஞர் மைக்கேல் ஜெரால்ட் மறுப்புத் தெரிவித்து வாதிட்டார்.

இது தரப்பு வாதங்களையும் கேட்ட மாஜிஸ்திரேட் விஜயலட்சுமி, யூடியூபர் மாரிதாஸை வரும் டிசம்பர் 30-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க போலீஸாருக்கு அனுமதியளித்து உத்தரவிட்டார் அதன் பின்னர் போலீஸார் அவரை பலத்த பாதுகாப்புடன் மீண்டும் தேனி சிறைச்சாலைக்கு அழைத்துச் சென்றனர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக