மாலைமலர் : வன்னியர் இட ஒதுக்கீடு தொடர்பான உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவுக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் போது வன்னியர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் 10.5 சதவீத உள்ஒதுக்கீடு வழங்கப்படும் வகையில் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இதை எதிர்த்து மதுரை ஐகோர்ட்டு கிளையில் பல்வேறு அமைப்பினர் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில் தீர்ப்பு அளித்த மதுரை உயர்நீதிமன்றம் , தமிழ்நாடு அரசு மேற்கொண்ட சட்டத்திருத்தத்தை ரத்து செய்தது.
“அரசியலமைப்புக்கு எதிராக இருப்பதால் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்திய பின்பு தான் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்” எனவும் உத்தரவிட்டது.இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி அப்பீல் செய்தது. அதே போல் பா.ம.க. மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் மனுதாக்கல் செய்தனர்.
அப்பீல் மனுவை விரைந்து விசாரிக்க தமிழக அரசு, சுப்ரீம்கோர்ட்டில் வலியுறுத்தி இருந்தது.
இந்த வழக்கு இன்று உச்சநீதிமன்ற நீதிபதி நாகேஸ்வரராவ் தலைமையிலான 3 நீதிபதிகள் கொண்ட அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணை தொடங்கியதும் தமிழக அரசு சார்பில் ஆஜரான மூத்த வக்கீல் குமணன் வாதாடுகையில், “இந்த விவகாரத்தில் உடனடியாக மதுரை ஐகோர்ட்டு கிளை உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும்.
இந்த தடை உத்தரவால் ஏற்கனவே கலந்தாய்வு பாதிக்கப்பட்டு இருக்கிறது. வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு என்பது கொடுக்க இயலாமல் இருக்கிறது” என்றார்.
இதே போன்ற வாதங்களை பா.ம.க. மற்றும் மற்ற அரசியல் கட்சி தரப்பு வக்கீல்களும் முன்வைத்தனர்.
பின்னர் இந்த வழக்கில் வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீட்டை ரத்து செய்து மதுரை ஐகோர்ட்டு கிளை விதித்த தீர்ப்புக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் தடை விதிக்க மறுத்தனர்.
நீதிபதிகள் கூறும்போது, “இந்த வழக்கில் அதிகமான மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது. எழுத்துப்பூர்வமான வாதங்களை நீங்கள் தாக்கல் செய்யுங்கள். தற்போதைய சூழ்நிலையில் இந்த 10.5 சதவீத இடஒதுக்கீடு ரத்து விவகாரத்தில் நாங்கள் இடைக்கால தடை விதிக்க விரும்பவில்லை.
மதுரை ஐகோர்ட்டு கிளை தீர்ப்பு தொடரும். அடுத்த கட்ட விசாரணை பிப்ரவரி 15 மற்றும் 16-ந்தேதிகளில் நடைபெறும். அதுவரை ஏற்கனவே உள்ள நடைமுறையே தொடரும்.
குறிப்பாக புதிய பணி நியமனம், மாணவர் சேர்க்கை ஆகியவை இந்த இடஒதுக்கீட்டில் நடைபெறக்கூடாது. ஏற்கனவே 10.5 சதவீத இடஒதுக்கீட்டில் நடந்த மாணவர் சேர்க்கை நியமனத்தில் மாற்றம் செய்யக்கூடாது என்றனர்.
மேலும் இந்த வழக்கில் எதிர்மனுதாரர்கள் பதில் அளிக்கவும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக