செவ்வாய், 30 நவம்பர், 2021

மதுரை சினிமா முடிந்து நள்ளிரவில் வீடு திரும்பிய இளம்பெண்ணை கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

இரவில் சினிமா முடிந்து வந்த இளம்பெண்ணை கடத்தி பலாத்காரம் செய்த போலீஸ்காரர்

தினத்தந்தி  : மதுரை வில்லாபுரம் பகுதியை சேர்ந்த ஒருவரின் கடையில் வேலை பார்க்கும் 22 வயது இளம்பெண் உள்பட5 ஊழியர்கள் கடை உரிமையாளருடன் சம்பவத்தன்று செல்லூரில் உள்ள ஒரு தியேட்டரில் படம் பார்த்து நள்ளிரவில் 1 மணியளவில் வீடு திரும்பி கொண்டிருந்தனர்.
இளம்பெண்ணை கடைக்காரர் தனது மோட்டார் சைக்களில் அழைத்து சென்றார்.
அப்போது நேதாஜி ரோடு பகுதியில் ரோந்து பணியில் இருந்த 2 போலீசார் அவர்களை வழிமறித்தனர். அப்போது ஒரு போலீஸ்காரர், கடை உரிமையாளரிடம் இந்த நேரத்தில் எங்கு சென்று வருகிறீர்கள்?
நீங்கள் இருவரும் யார்? என்று கேட்டுள்ளார். பின்னர் அவர் இளம்பெண்ணை தான் பாதுகாப்பாக அவரது வீட்டில் கொண்டு போய் விடுவதாக அழைத்து சென்றுள்ளார்.

பலாத்காரம் செய்த போலீஸ்காரர்
ஆனால் அந்த போலீஸ்காரர், இளம் பெண்ணை நேதாஜி ரோட்டில் உள்ள ஒரு தனியார் விடுதிக்கு கடத்திச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் யாரிடமும் இதனை தெரிவிக்க கூடாது என்று கூறி ஆட்டோவில் ஏற்றி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

இந்தநிலையில், வீட்டில் அந்த பெண் தன்னை போலீஸ்காரர் பாலியல் பலாத்காரம் செய்தது குறித்து தெரிவித்து கதறி அழுதுள்ளார்.

இதுகுறித்து திடீர்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. விசாரணையில், இளம்பெண்ணை கடத்தி கற்பழித்தது திலகர்திடல் போலீஸ் நிலையத்தில் குற்றப்பிரிவில் பணிபுரியும் முருகன் (வயது 35) என்பதும், அவருடன் இருந்த மற்றொருவர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது.

பின்னர் இந்த சம்பவம் தொடர்பாக அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து போலீஸ்காரர் முருகனை கைது செய்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக