செவ்வாய், 30 நவம்பர், 2021

மு க அழகிரி தற்போது என்ன செய்கிறார்? மிக மிக அமைதி .கிரிக்கெட், பழைய படங்கள் . நண்பர்களுடன் வேடிக்கை பேச்சு ..

 Arsath Kan -  Oneindia Tamil :    மதுரை: திமுகவின் தென்மண்டல அமைப்புச் செயலாளராக ஒரு காலத்தில் கோலோச்சிய மு.க.அழகிரி இப்போது அரசியல் நடவடிக்கைகளில் துளியும் ஆர்வமின்றி அமைதியை மட்டுமே விரும்புகிறாராம்.
மதுரை சத்யசாய் நகரில் வசித்து வரும் அவர் தனக்கு பிடித்த பழைய படங்களையும், கிரிகெட்களையும் பார்த்து நேரத்தை செலவிடுவதாக தெரிவிக்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.
மேலும், தினமும் நான்கு பேருடன் அதுவும் தனக்கு நெருக்கமான ஆதரவாளர்களிடம் மட்டும் சில மணித்துளிகள் மனம் விட்டு பேசுகிறாராம்.
திமுகவில் தென் மண்டல அமைப்புச் செயலாளராக இருந்த போது பவர்ஃபுல் மனிதராக வலம் வந்தவர் மு.க.அழகிரி.


அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு தூங்கா நகரத்து ரத்தத்தின் ரத்தங்கள் அவரை கொண்டாடி வந்தனர்.
ஒட்டுமொத்த தென்மாவட்ட நிர்வாகிகளும் அழகிரியின் அப்பாயிண்ட்மெண்ட்க்காக தினமும் ஜே.ஜே.வென திருவிழா கூட்டம் போல் காத்திருந்த காலம் மலையேறி போய் இன்று அவரது இல்லமும் அது அமைந்துள்ள தெருவும் காற்று வாங்குகிறது.

கலைஞர் உயிருடன் இருந்தபோது அவருடைய கோபத்திற்கு ஆளானதன் காரணமாக திமுகவிலிருந்து நீக்கப்பட்ட அவர் இன்றுவரை மீண்டும் திமுகவில் இணையமுடியவில்லை. சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னர் தனது தம்பி ஸ்டாலினுக்கு எதிராக ஆலோசனைக் கூட்டம் நடத்திய அவரை குடும்ப உறவுகள் சமாதானப்படுத்தி வைத்திருந்தன. தேர்தல் முடியும் வரை அமைதியாக இருக்குமாறும் ஆட்சிக்கு வந்த பிறகு மீண்டும் கட்சியில் இணைவது பற்றி பேசிக்கொள்ளலாம் எனவும் எடுத்துக்கூறப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

ஆனால் ஆட்சி மாறியும் எந்தக் காட்சியும் மாறாததால் விரக்தியடைந்த மு.க.அழகிரி, இப்போது முழுநேர ஓய்வில் மட்டுமே இருந்து வருகிறார். சென்னையில் உள்ள மகள் மற்றும் மகன் வீடுகளுக்கு அவ்வப்போது செல்லும் இவர், மற்ற நாட்களில் மதுரையிலேயே தங்கி வருகிறார். உடல்நிலை காரணமாக முன்பை போல் ஆக்டிவாக இயங்க முடியாததால் வீட்டிலேயே பொழுதை கழித்து வருகிறாராம் மு.க.அழகிரி. பத்திரிகைகளை படிப்பது, பழைய படங்களை பார்ப்பது, கிரிக்கெட் பார்ப்பது, தினமும் 4 பேரை சந்தித்து பேசுவது என நேரத்தை செலவிடுவதாக கூறுகிறார் அவருக்கு நெருக்கமான நிர்வாகி ஒருவர்.

இதனிடையே மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்ற விழாவில் தனக்கு அழைப்பிதழ் கிடைத்தும் கலந்துகொள்ளாமல் அழகிரி தனது மகன் துரையை அனுப்பி வைத்திருந்தது குறிப்பிடத்தக்கது. கடந்தவாரம் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி மு.க.அழகிரியின் மகன் துரை தயாநிதி வாழ்த்து தெரிவித்திருப்பதும் கவனிக்கத்தக்கது. மு.க.அழகிரி பவர்ஃபுல் மனிதராக இருந்தபோது அவருடன் ஒன்றாக பயணித்த பெரும்பாலானோர் இன்று அவரிடமிருந்து விலகி நிற்பது காலத்தின் கோலமாக பார்க்கப்படுகிறது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக