வியாழன், 18 நவம்பர், 2021

மஞ்சள், வெட்டிவேர், வேம்பு கொண்டு சானிட்டரி பேட்களை உருவாக்கிய மாணவி!


  YS TEAM TAMIL : அண்ணா பல்கலைகழக ஆராய்ச்சி மாணவியின் 3 ஆண்டுகால உழைப்பில் உருவான இந்த சானிட்டரி பேட்களால் சுற்றுச்சூழல் மற்றும் பெண்கள் ஆரோக்கியத்துக்கு கேடு வராது.
இன்றைய சூழலில் நாம் அதிகம் பேசுவது சுற்றுச்சூழலை காக்க பிளாஸ்டிக் ஒழிப்பு மற்றும் பெண் சுகாதாரம். பெண்கள் சுகாதாரம் மற்றும் ஆரோக்கியத்தை பற்றிப் பேசும்பொழுது மாதவிடாய் காலத்தில் பெண்கள் சானிட்டரி நாப்கினை பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஆனால் அந்த நாப்கினில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் இரசாயனங்கள் சுற்றுச் சூழலை பாதிப்பதோடு, பெண்களின் ஆரோக்கியத்துக்கும் கேடு விளைவிப்பதாக ஆராய்ச்சிகள் கூறுகின்றது.
இந்த இரண்டையும் சமநிலைப் படுத்தி பெண்கள் சுகாதாரம் மற்றும் சூற்றுச்சூழலை பாதிக்காதவாறு இயற்கை மூலப்பொருட்களைக் கொண்டு சானிட்டரி பேட்களை தயாரித்துள்ளார் சென்னை அண்ணா பல்கலைகழக மாணவி ப்ரீத்தி.


இரசாயன பேட்கள் சுற்றுச்சூழல் மற்றும் நம் உடல்நலத்திற்கும் கேடு என்பதை பரவலாக உணர்ந்து வருவதால் இதற்கு தீர்வு காண மாணவி ப்ரீத்தி புதிய முயற்சி ஒன்றை மேற்கொண்டார்.

வெட்டிவேர், மஞ்சள், வேம்பு, ஆகிய ஆரோக்கியக் குணம் நிறைந்த இயற்கை மூலப் பொருட்களை வைத்து சானிட்டரி பேட்களை தயாரித்தார். இது ஒரு மாதத்திற்குள் மக்குவதொடு நம் உடல் நலத்திற்கும் தீங்கு விளைவிக்காது.

    “இயற்கை மீதும் சுற்றுச்சூழல் மீதும் இருந்த ஈடுபாடே இந்த நாப்கினை உருவாக்கக் காரணம். இயற்கை மீது எனக்கு காதல் வரக் காரணம் என் தாய். அவரே எப்பொழுதும் பெரும்பாலான பிரச்சனைகளுக்கு இயற்கைப் பொருட்களை நாடுவார்,” என்கிறார் ப்ரீத்தி.

சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள க்ரிஸ்டல் க்ரோத் ஆராய்ச்சித் துறையின் ஆராய்ச்சி மாணவி ப்ரீத்தி. தனது ஆராய்ச்சிக்காக 2015ல் இயற்கை முறையில் பேட்களை தயாரிப்பது எப்படி என்று துவங்கி 3 வருடம் கழித்து இன்று தனது ஆராய்ச்சியில் வெற்றிக்கண்டுள்ளார். 3 வருடம் பல முறை இதை முயற்சி செய்து பல தோல்விகளை தழுவிய பின்னரே இந்த வெற்றி அவருக்கு கிடைத்துள்ளது.

    “நான் இயற்கையாக தாவரத்தில் இருந்து கிடைக்கும் திசுக்கள் மற்றும் பாலிமரை நாம் எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என  தீவிரமாக ஆராய்ச்சி செய்தேன். அந்த ஆராய்ச்சியின் போது உருவானதே இந்த இயற்கை நாப்கின்,” என்கிறார்.

3 மிமீக்கும் குறைவான மெல்லிய மூன்று லேயர்களைக் கொண்டு இந்நாப்கினை தயாரித்துள்ளார் ப்ரீத்தி. முதல் மற்றும் கடைசி லேயர்கள், உறிஞ்சும் உதிரம் மீண்டும் வெளியே வராதபடி வடிவமைத்துள்ளார். இதில் நடுவிலுள்ள லேயர் அதிகப்படியான நீரை உறிஞ்சி வெளியே வராமல் தக்க வைத்துக் கொள்ளுமாறு தயாரித்துள்ளார். இது மிக லேசாகவும் மெல்லியதாகவும் இருந்தாலும் இருக்கும் அளவை விட 1700% அதிக நீரை உறிஞ்சும் தன்மையை கொண்டதாகும்.

மாணவி ப்ரீத்தி தன் பேராசிரியர் மற்றும் கைட் அறிவொளி தக்‌ஷணாமூர்த்தி உடன்.

இப்படி இயற்கை மூலப் பொருட்களை வைத்து வடிவமைக்கும் போது அதைப் பயன்படுத்துபவருக்கு எந்தவித பக்கவிளைவும் வரக்கூடாது என்பதற்காக வெட்டிவேர், வேம்பு, மஞ்சள், மற்றும் லெமன் எக்ஸ்டிராக்ட்களை உரிய அளவில் பயன்படுத்தி உள்ளார்.

    “இந்த நாப்கினை அப்புறப்படுத்துவது மிகவும் சுலபம். மண்ணில் இந்த பேட்களை புதைத்து வைத்தால் ஒரு மாதம் கழித்து மக்கிவிடும். அதை வீட்டில் உள்ள செடிகளுக்கு உரமாகவும் பயன்படுத்தலாம்,” என்கிறார்.

நாம் அன்றாடம் உபயோகித்து தேவை இல்லை எனத் தூக்கிப் போடும் காகிதத்தை மறுசுழற்சி செய்து இந்நாப்பின்கனை தயாரிக்கலாம். அதோடு இயற்கைப் பொருட்களை இணைத்து மிக மலிவான விலையில் இந்த வகை பேட்களைத்  தயாரிக்கலாம். விலை குறைவு, சுற்றுச் சூழலை பாதிக்காது, உபயோகிக்கும் பெண்களுக்கும் ஆபத்து விளைவிக்காத இந்த நாப்கின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி நிறுவனம் பரிசோதித்து, வருகிறது. முழுமையாக பரிசோதித்தப் பிறகு இன்னும் மூன்று மாதத்தில் அனைவருக்கும் கிடைக்கும்படி செய்வதாக தெரிவித்துள்ளார் ப்ரீத்தி.

அரசு அல்லது தனியார் நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் இந்த வகை பேட்களை தயாரிக்க முன்வந்தால் உதவியாக இருக்கும் என முடிக்கிறார் ப்ரீத்தி.

கட்டுரையாளர்: ஆ.லட்சுமி காந்த் பாரதி மற்றும் மஹ்மூதா நௌஷின்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக