சனி, 6 நவம்பர், 2021

தென் மாநில முதல்வர்கள் மாநாடு! தென்னக முதல்வர்களுக்கு உள்துறை அமைச்சர் அமித் ஷா அழைப்பு

 மின்னம்பலம் : தென் மாநில முதல்வர்கள் கூட்டத்தை அடுத்த வாரம் நடத்த இருக்கிறார் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா.
சவுத் சோனல் கவுன்சில் எனப்படும் தென் மண்டல வளர்ச்சி கவுன்சிலின் 29 ஆவது கூட்டம் வரும் நவம்பர் 14 ஆம் தேதி ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் இருக்கும் திருப்பதியில் நடைபெற இருக்கிறது. தென் மண்டல கவுன்சிலின் கடந்த கூட்டம் 2018 ஆம் ஆண்டு பெங்களூருவில் நடந்த நிலையில் 29 ஆவது கூட்டம் திருப்பதியில் நடைபெற இருக்கிறது.
ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா தலைமையில் நடக்கும் இந்த கூட்டத்தில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா, கர்நாடாகா, புதுச்சேரி ஆகிய மாநில முதல்வர்களும் புதுச்சேரி, அந்தமான் நிகோபார் ஆகியவற்றின் துணை நிலை ஆளுநர்கள், லட்சத் தீவின் நிர்வாக அதிகாரி ஆகியோரும் இந்த கூட்டத்தில் பங்கேற்க அழைக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் மாநில முதல்வர்களோடு தலைமைச் செயலாளர்களும் கலந்துகொள்வார்கள்.



கடந்த மார்ச் மாதமே இந்த கூட்டம் நடைபெற திட்டமிட்டப்பட்டது. ஆனால் கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் காரணமாக கூட்டம் ரத்து செய்யபப்ட்டது. இந்த நிலையில் தான் வரும் நவம்பர் 14ஆம் தேதி கூடுகிறது.

இந்தக் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென்னிந்திய மாநிலங்களுக்கு ஒன்றிய அரசோடு இருக்கும் பிரச்சினைகளையும் இம்மாநிலங்களுக்குள் இருக்கும் பிரச்சினைகளையும் பேசித் தீர்ப்பதற்காகவே இந்த தென் மண்டல கவுன்சில் கூட்டம் நடைபெற இருக்கிறது.

தமிழ்நாட்டுக்கு அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, கேரளா ஆகிய மூன்று மாநிலங்களோடும் நீர் பிரச்சினை இருக்கிறது. மேலும் ஒன்றிய அரசோடு ஜிஎஸ்டி நிலுவைத் தொகை. நீட் மசோதா ஒப்புதல் உள்ளிட்ட பல கோரிக்கைகள் இருக்கின்றன. இவற்றை இந்த கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் எழுப்புவார் என்றும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.

மு.க.ஸ்டாலின் 2021 மே மாதம் தமிழ்நாட்டின் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு முதல் முறையாக கடந்த ஜூன் மாதம் டெல்லி சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். அப்போதே உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திப்பதற்காக தமிழக முதல்வர் தரப்பில் நேரம் கேட்டதாகவும் ஆனால் அமித் ஷா நேரம் தரவில்லை என்றும் தகவல்கள் வந்தன.

இந்த நிலையில் தமிழக முதல்வரான பிறகு தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்துகொண்டால், உள்துறை அமைச்சர் அமித் அமித்ஷாவை முதன் முறையாக சந்திக்கும் வாய்ப்பு தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு கிடைக்கும்.

தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் கலந்துகொண்டு அமித்ஷாவை சந்திக்கும் பட்சத்தில், அந்த சந்திப்பு தமிழ்நாடு அரசியல் வட்டாரத்திலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வேந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக