திங்கள், 1 நவம்பர், 2021

முத்துராமலிங்க தேவர் விழா ..பொதுமக்களை அச்சுறுத்திய.. இளைஞர்கள் மீது நடவடிக்கை? டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவு

  Vigneshkumar  -   Oneindia Tamil : சென்னை: தேவர் பிறந்த நாள் விழாவில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேருந்து மற்றும் காவல்துறை வாகனங்களின் மீது ஏறி ஆடுதல், சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும் வீடியோ காட்சி பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தமிழகக் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முத்துராமலிங்கத் தேவரின் 114வது பிறந்த நாள் -  59 குருபூஜை விழா அக். 30ஆம் தேதி தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது.
தமிழ்நாட்டின் பல்வேறு முக்கிய அரசியல் தலைவர்களும் முத்துராமலிங்கத் தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.


பெரும்பாலான இடங்களில் அமைதியான முறையில் முத்துராமலிங்கத் தேவர் விழா  கொண்டாடப்பட்டது.
இருப்பினும், சில இடங்களில் மட்டும் சிறிய அளவில் வன்முறைச் சம்பவங்கள் ஏற்பட்டது.
மேலும், சில இடங்களில் பொதுமக்களைப் பாதிக்கும் வகையில் பேருந்து உள்ளிட்ட வாகனங்களில் ஏறி சிலர் ஆட்டம் போட்டனர்.
இந்தச் சம்பவம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில்,

தேவர் விழா  அன்று பொதுமக்களை அச்சுறுத்தும் வகையிலும் பேருந்து மற்றும் காவல்துறை வாகனங்களின் மீது ஏறி ஆடுதல், சேதப்படுத்துதல் போன்ற செயல்களில் ஈடுபட்டவர்களையும் வீடியோ காட்சிப் பதிவுகளை அடிப்படையாகக் கொண்டு நடவடிக்கை எடுக்கத் தமிழகக் காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், கடந்த ஒருவார காலமாகத் தேவர்  பிறந்த நாள்  விழா நடைபெற்ற மாவட்டங்களில், குறிப்பாக - பசும்பொன், கோரிப்பாளையம், நந்தனம் பகுதிகளில் எந்தவித அசம்பாவிதங்களும் நடந்துவிடக் கூடாது என்பதற்காகப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர்களைக் கிண்டல் செய்து தகாத வார்த்தைகளால் பேசியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்தால் மட்டுமே இனி வரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களில் ஈடுபட யோசிப்பார்கள் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக